படிமங்கள் நிழல்கள் பிரதிபலிப்புகள்
சிறப்பு நெடுவரிசை
போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Children of Tiruvannamalai © Ami Gupta / Project 365 Public Photo Art Archive Tiruvannamalai
புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?
அல்லது ஒளியையா?
ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….
புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…
திருவண்ணாமலையில் நிறுவப்பட்டுள்ள ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளை (இ.டி.பி.) சிறப்பாக நடத்தி வரும் 365 நாள் ப்ராஜெக்ட் 365 திட்டத்தினுள் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த ஐந்தாண்டுத்திட்டத்தின் முதலாம் கட்டம் திருவண்ணாமலையில் 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கி ஒரு வருடம் நடைபெற்றது. ப்ராஜெக்ட் 365 இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் சங்ககால துறைமுக நகரங்களான திண்டிஸ் (தொண்டி), முசிரிஸ், மற்றும் கொற்கையில் நடைபெற்று வருகிறது. வாணிபம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் நுழைவாயிலாக திகழ்ந்த இந்த துறைமுகங்களும் பல்வேறு நாகரிகத்தையும் இணைத்த நீர் தடங்களுமே புகைப்படக்கலை வடிவில்இத்திட்டத்தின் மூலம் வெளிப்பட உள்ளது. இதன் மூன்றாவது கட்டம் காவேரி நதி சார்ந்த சமகால வாழ்வு முறையினை ஆவணம் செய்யும்.
புகைப்படங்கள் என்ன விதமானப் பணியைச் செய்கிறது என்று யாராவது விளக்கினால் அது அயர்ச்சியைத் தருகிறது. ஏனெனில் புகைப்படங்கள் விளங்கிக் கொள்வதற்கான சூத்திரம் அல்ல, யாரும் விளங்கிக் கொள்ளவும் முடியாது. அசையாத புகைப்படங்கள் தினமும் அசைகிறது, நம் மனதை அசைய வைக்கிறது. ஒரே ஒரு புகைப்படமே கலீடாஸ்கோப் போல காலங்கள் சுழல, சுழல புதிய அனுபவங்களையும், வண்ணச்சேர்க்கைகளையும் தருகிறது. சிலருக்கு கேளிக்கை இன்பமாயும், சிலருக்கு வழிபடும் பிம்பமாயும், சிலருக்கு ஆழ்ந்த விசாரணையை எழுப்பும் விதமாகவும் இருக்கிறது. காலங்களினால் நினைவுகள் உறைந்திருக்கும் மாய வித்தை அது. சில புகைப்படங்களை நோக்கினால் அது அழிவையும், ஆனந்தத்தையும் ஒரு சேர வைத்திருக்கும் கூரிய வாள்.








Chronicles of Tiruvannamalai © Abul Kalam Azad / Digital Archival Prints / Project 365 Tiruvannamalai Public Photo-art Archive
ப்ராஜெக்ட் 365 திருவண்ணாமலையில், பல்வேறு அலைவரிசையுள்ள புகைப்படக்கலைஞர்கள், 365 நாட்கள் 360 டிகிரியிலும் திருவண்ணாமலையைப் புகைப்படம் எடுத்தனர். தற்பொழுது ப்ராஜெக்ட் 365 பொதுமை புகைப்பட காப்பகத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளன. திருவண்ணாமலை ஏற்கெனவே புகைப்படக்கலைஞர்களின் நகரமாகவே இருந்து வருகிறது. உலகின் மிக முக்கியப் புகைப்படக்கலைஞர்கள் கடந்த நூறாண்டுகளாக திருவண்ணாமலையைப் பதிவு செய்துள்ளார்கள். இது ரமணரால் நடந்தது. ரமணர், புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்டிருந்தார். கவின் புகைப்படக்கலைஞர்களை எளிதாக அவரால் கண்டுணர முடிந்தது. அன்றிலிருந்து வேறு சிறு நகரங்களுக்கு இல்லாத புகைப்படப் பதிவுகள் திருவண்ணாமலைக்கு உண்டு. அவ்விதமே ஓவியப்பதிவுகளும். மேலும், திருவண்ணாமலை நகரமே தொல்லியல் நகரம்தான். திருவண்ணாமலையின் மலைகள் மிகப்பழமையானவை. குறைந்தது 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன் நடந்த எரிமலை வெடிப்பினால் வெளியானவை இம்மலைகள். இமாலயத்தை விடப் பழமையானதாக இருக்கலாம். முழுவதும் சார்க்கோனைட் கற்களால் ஆனது. மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல. நியூட்ரினோ விஞ்ஞானிகளின் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். இதன் தொன்மைக்காகவே நாம் இதனை வழிபடுகிறோம்.
ஒரு மலையையும், அதனைச் சுற்றியுள்ள வாழ்வியலையும் பதிவு செய்வதென்பது ஒரு புகைப்படகலைஞருக்கு விருந்துதான். வாழ்வியல் எனும்போது மதரீதியிலான சடங்குகள், சம்பிராதயங்கள் நிறைந்த கோவில் பண்பாடு அல்ல, கோவிலுக்கு எதிரான பண்பாட்டையும் பதிவு செய்ய செய்துள்ளோம். வாழ்வியலின் அனைத்துக் கூறுகளையும் பகுத்தறிவின் கண் கொண்டு உணருவதே இங்கு முக்கியம். திருவண்ணாமலை தீபம் உலகப்பிரசித்தம். தீபம் எவ்வாறு உருவாயிற்று எனத் தேடினோமானால் அயோத்திதாசப்பண்டிதரிடமிருந்து விடையைப் பெற இயலும். ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெயை எடுத்து எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்ற கண்டுபிடிப்பின் விளைவாக உருவான வெற்றியின் நினைவே இம்மலையில் தீபமேற்றுதல் எனக் கூறிப்பிடுகிறார்.






First row © Bhagyashri Patki | Second row © Arnav Rastogi | Digital Archival Prints | Project 365 Tiruvannamalai Public Photo-art Archive
மலையும், மலையைச் சுற்றியுள்ள வாழ்வு என்பதும் மட்டுமல்ல. மலையிலிருந்து விடுபட்டவர்களையும் இத்திட்டம் பதிவு செய்துள்ளது. நவீன வாழ்க்கையிலிருந்து, புத்த, சைவ, சமண, சூஃபி, வைணவ, கிறித்துவ என எல்லா மதங்களின் வாழ்வினூடாகவும் ஒரு பயணம், இடையர்களின் தொன்மங்கள், தமிழ் நிலப்பரப்பின் தொல்லியல் சின்னங்கள், ரமணரின் பாதைகள், வனவாசிகளின் வாழ்க்கை, சந்தைகள், கோவில், விலங்குகள், செடிகள், மரங்கள், குகைகள், சாதுக்கள், குழந்தைகள், தொல்கவிதைகள், நதிகள், வேளாண் மரபுகள், இடப்பெயர்வு, திரைப்படம், அரசியல், மத உறவுகள், குடும்பங்களின் உருவச்சித்திரங்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. காண முடியாத ஒரு கனவு நனவாகிறது..
ரமணரையும், அருணாச்சலேஸ்வர கோவிலையும் தாண்டி திருவண்ணாமலை பல தொடர்ச்சிகளைக் கொண்டுள்ளது. ராமலிங்க வள்ளலாருக்கு உத்வேகம் கொடுத்த ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் கல்விப் பணிகளால் இந்நகரத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் வளம் பெற்றுள்ளனர். அதன் பணிகள் இன்னும் தொடர்கின்றன. அதனூடாகவும் இத்திட்ட புகைப்படகலைஞர்கள் பயணிக்கின்றனர்.
ஒரு நல்ல கலைஞனின் கனவு எப்போதும் மதச்சாற்பற்றதல்ல. மதமற்றே இருக்கிறது. ப்ராஜெக்ட் 365 திட்டத்தின் இயக்குனர் அபுல் கலாம் ஆசாத் மத, இன, மொழி, தேச இடையூறற்ற புகைப்படங்களால் கட்டப்பட்ட ஒரு கோவிலை திருவண்ணாமலையின் உயரத்திற்கு கனவு காண்கிறார். அவரும், புகைப்படகலைஞர்களும் களைப்பின்றி எறும்புகள் போல கேமராவுடன் வேலை செய்துள்ளனர். மலையின் உயரம் அதிகம்தான், ஆனால் எறும்புகள் வேலை செய்வதை நிறுத்துவதில்லை.
திருவண்ணாமலை புகைப்படங்களின் அடித்தளத்தை பல்வேறு புகைப்படகலைஞர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர், P.R.S. மணி, T.N. கிருஷ்ணசாமி, ஹென்றி கார்டியன் பிரஸ்ஸோன், எலியட் எலிசபோன், கோவிந்த் வெல்லிங், இரினோ குர்க்கி போன்றோர் உறுதியான புகைப்படப்பாதையை அமைத்துள்ளனர். உண்மையிலேயே இது நம்பமுடியாத அதிசயமான பாதைதான். ஏதோ ஒரு வகையில் புகைப்படக்கலைஞர்களுக்கான ஒளியூட்டும் விளக்காக ரமணர் இருந்திருக்கிறார். ரமணரின் வாழ்க்கையில் இம்மண்ணின் தொல்குடிச் சிந்தனைகளையும், விடுதலை உணர்வையும் தந்த நாரயண குருவும் இடம் பெற்றிருக்கிறார். இருவரின் சந்திப்பும் மிக முக்கியமானது என்று கருதுகின்றனர், இப்புகைப்படத் திட்டத்தின் கலைஞர்கள்.






First row © RR Srinivasan | Second row © Jiby Charles | Digital Archival Prints | Project 365 Tiruvannamalai Public Photo-art Archive
பல்வேறு கருத்துக்களையும், சிந்தனைகளையும் குறித்து தொடர்ந்து எழுதினாலும் புகைப்படக்கலைஞர்கள் உத்வேகம் பெற்றுப் புகைப்படங்கள் எடுப்பதற்கு இவை மட்டும் காரணமல்ல. அகமனங்களில் உறைந்திருக்கும் ஆழ்மன அசைவே புகைப்படங்களை உருவாக்குகிறது. விட்டு விடுதலையான, குழந்தைமை உணர்வே, அற்புதமாகவும், ஆச்சரியத்துடன் இவ்வுலகைப் பார்க்க வைக்கிறது. அற்புதங்கள் இல்லையெனின் புகைப்படக்கலைஞன் இல்லை. ஒரு புகைப்படம் உருவாகும்போது, படிமங்களை ஒருங்கிணைக்கும்போது (compose) கேமரா வழியாகப் பார்க்கும்போது, முழு உடலே ஒரு ஸ்கேனர் (Scanner) ஆக மாறும்போது, அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தங்களும், மாறுதல்களும், ஒரு புகைப்படம் உருவாவதற்கு முந்தைய கணம் புகைப்படக்கலைஞர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது, ஒரு சிறுவன் புதிய உலகத்தைக் காண்பதற்கு ஒப்பானது. முதிர்ந்த புகைப்படக்கலைஞனின் வாழ்பனுபவமும், அவன் பெற்ற விருதுகளும் இங்கு அவனுக்கு உதவாது. அற்புதங்களே மெளனம்.
புகைப்படக்கலை இன்று வியாபாரமாகி விட்டது. கேலரிகள் தாங்கள் விரும்புபவர்களை முன்னிறுத்தும் வணிக நோக்கம் கொண்டுள்ளன. புகைப்படக்கலை மெட்ரோ நகரங்களின் கலையாக, மேட்டுக்குடியினரின் அடையாளமாக இன்று மாறியுள்ளது. இதன் நேரெதிர் திசையில் வணிக நோக்கமின்றி, எளிய மக்களின் கலையாக, ஒரு சீரிய கலைப்படைப்பைக் கிராமங்களுக்கு கொண்டு செல்வதே இ.டி.பி. ப்ராஜெக்ட் 365 திட்டத்தின் அடிப்படை நோக்கம். கிராமங்களிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து ஒரு படைப்பை உருவாக்குதல், மீண்டும் அதனை கிராமத்திற்கே கொண்டு செல்வது , இதுவே நம் திட்டத்தின் தலையாய நோக்கம். மகத்தான புகைப்படக்கலைஞர்கள், ஓவியர்களை கிராமங்களுக்கு வரவழைப்பது, உள்ளூர் கலைஞர்கள், கைவினைஞர்கள், மற்றும் கொத்தனார்கள், விளம்பரப்பலகை எழுதுபவர்கள், உலோக வேலை செய்பவர்கள் என பன்முகக்கலைஞர்களோடு ஆழமான உறவுகளை ஏற்படுத்தி, அனைவரும் இணைந்து உருவாக்கியுள்ளதே இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.









First row © Thierry Cardon | Palladium Prints | Second Row Untitled © Waswo X Waswo | Hand colored by Rajesh Soni | Digital Archival Prints | Project 365 Tiruvannamalai Public Photo-art Archive |
பராம்பரிய முறையான அனலாக் கேமரா பயன்படுத்தி இந்த பழங்கலையினை அழியாது காப்பாற்ற எங்களால் முயன்ற ஒரு முயற்சியும் எடுத்தப்பட்டது. இதைத்தவிர புகைப்படப் பயிற்சி வகுப்புகள், செய்முறை விளக்கங்கள், புகைப்படக்கலை பயணங்கள், குழுவாகச் சென்று படம் பிடித்தல்,ஊசித்துளை கேமராவை உருவாக்கி படம் பிடித்தல், அழிந்து கொண்டிருக்கும் பிலிம். நெகட்டிவ், பிரிண்டிங், கழுவுதல் குறித்தப்பயிற்சிகள் என விரிவான வேலைத்திட்டங்களைக் கொண்டிருந்தது, இவ்வாறு உருவாக்கிய புகைப்படங்களை புத்தக வடிவில் பிரசுரிப்பதும், மக்கள் பார்வைக்கு கண்காட்சி ஏற்பாடு செய்வதும், இவையனைத்தையும் முறையாக ஆவணப்படுத்திப் பாதுகாப்பதுவுமே இறுதிப்பணியாக உள்ளது.
கூட்டு வாழ்க்கை, கூட்டுக்கனவுகள், கூட்டு மனோபாவம் கலைகளின் அடிப்படையாக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். மகத்தான திரைப்படக் கலைஞன் எமிர் கஸ்தூரிகாவின் ‘அண்டர்கிரவுண்ட்'(Underground) திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இறந்து போனவர்கள் அனைவரும் வசிக்கும் நிலம் உடைந்து, தனித்து பிரிந்து போவதாகப் படம் முடிவடையும். நாம் இறந்த போனவர்களில்லை, கூட்டுணர்வுடன் ஒருவரின் கரம் பற்றிக் கொண்டு மற்றொருவரை உயிர்ப்பிப்போம்.

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.
Published on August 3, 2016
Share
Related Articles

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்
ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்
ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்
கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து
கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்
ஒசரக் கூனிச்சி
சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம்அபுல் கலாம் ஆசாத்,
கருப்பு நிலமும், மனிதர்களும் | பாலமுருகன்
இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.
செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்
ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.
Smart City
விரிகொம்பு காளை | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார் | புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்