போட்டோ ஸ்டோரி

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Jharkhan village life
கருப்பு நிலமும், மனிதர்களும் © பாலமுருகன் 2019

கருப்பு நிலமும், மனிதர்களும்

By பாலமுருகன்

சார்… ஜார்கண்ட்ல ஒரு டாக்குமெண்டரி ஷூட் பண்ணனும் ரெடி ஆகிக்கோங்க, பிளைட் எப்போதுங்கிறத நான் சீக்கிரம் சொல்றேன்  என்று ஒரு தொண்டுநிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் என்னுடைய நீண்ட கால நண்பர் சொன்னவுடன் ஆர்வம் தொற்றிக்கொண்டது. இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.

தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த கோடெர்மா என்ற நகருக்கு வந்து சேர்ந்தோம். தொண்டுநிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் தீனா எங்களை வரவேற்று விடுதியில் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தார். தீனாவுக்கு தென்னிந்திய நான்கு மொழிகளும் அத்துப்படி. இந்தியிலும் புகுந்து விளையாடுவார். மொழி பிரச்சினை அவரால் தீர்ந்தது. சார், நாளைக்கு காலைல இருந்து சூட் ஆரம்பிக்கிறோம். காலைல வண்டி ரெடியா உங்க ஹோட்டல் முன்னாடி நிற்கும். ரெடியா இருங்க. இப்போ ரெஸ்ட் எடுங்க என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார்.



ஜார்கண்ட் விலை மிகுந்த பல கனிமங்களை தன்னுள் அடக்கிக்கொண்ட ஒரு மாநிலமாகும். அந்த விலை மிகுந்த கனிமங்களில் மைக்காவும் ஒன்று. குன்றுகள், மலைகள் அனைத்தும் மைக்கா நிரம்பியவையாகவே இருக்கிறது. பெயிண்ட்  மற்றும் அழகுசாதன பொருட்கள் உற்பத்திக்கு மைக்கா முக்கியமானது. குன்றுகள் மலைகளில் இருந்து மைக்காவை சிறு துளைகள் அமைத்து அவற்றை வெட்டி வந்து வீட்டில் வைத்து பிரித்து  சொற்ப பணத்துக்காக வியாபாரிகளிடம் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள் இப்பகுதி மக்கள். சொற்ப தொகையை கொடுத்து இந்த மக்களிடம் மைக்காவை வாங்கி செல்லும் வியாபாரிகள் அதை கொள்ளை லாபத்திற்கு கம்பெனிகளுக்கு விற்று பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த மைக்காவை வெட்டி எடுக்கும் பணியில் இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்துகிறார்கள். இதனால் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு பாதியில் நின்றுவிடுவதோடு மட்டுமல்லாமல் குன்றுகளை துளைபோட்டு மைக்காவை வெட்டியெடுக்கும் போது குன்றுகள் சரிந்து பல உயிரிழப்பு சம்பவங்களும் நடக்கிறது. இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்தவும், மாணவர்களின் பள்ளி படிப்பை தொடரவும், அங்குள்ள மக்களுக்கு மாற்று வருமான வழியை ஏற்படுத்தவும் என்னுடைய நண்பர் பணியாற்றும் தொண்டு நிறுவனம் பணியாற்றி வருகிறது. அவர்களின் ஒரு வருட பணியின் மூலம் பயனடைந்த மக்களின் உணர்வை பதிவு செய்வதே இந்த டாக்குமெண்டரியின் நோக்கம்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு மலை கிராமங்களை நோக்கிய எங்கள் பயணம் தொடங்கியது. போகும் வழியில் காலை உணவை எடுத்துக்கொள்ளலாம் என்ற முடிவோடு கிளம்பினோம்.

கொடெர்மா நகரம் ஒரு மாவட்ட தலைநகரமாகும். நகரமும் கிராமமும் இணைந்த ஒரு பெரிய ஊரைப்போல இருந்தது. நகர எல்லை தாண்டியவுடன் கிராமங்கள் கண்களில் தென்பட ஆரம்பித்தது. பெரும்பாலும் நெல் பயிரிட்டு இருந்தனர். சில இடங்களில் பயிர் வகைகள் தென்பட்டது. எட்டு மணிவாக்கில் காலை உணவுக்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினோம். தாழ்வாக வேயப்பட்டிருந்த கூரைக்குள் ரோட்டோர உணவகத்தை கணவன் மனைவி இரண்டு பேர் சேர்ந்து நடத்துகிறார்கள். சாப்பிடுவதற்கு சாய்ஸ் எல்லாம் கிடையாது. பூரி சப்ஜி ஒரே சாய்ஸ் தான். இந்தி செய்தி தாளில் இரண்டு பூரியை வைத்து கையில் கொடுத்தார்கள். நம்ம ஊர் தொன்னை போல இலையால் செய்யப்பட்ட ஒரு கிண்ணத்தில் உருளைக்கிழங்கு சேர்த்த மசாலாவும்  கொடுத்தார்கள் பூரியின் கனம் கொஞ்சம் கூடுதலாக இருந்தது. சுவைக்கு குறைவில்லை. கடுகு எண்ணையில் பொறித்ததால் கசப்பு கொஞ்சம் தூக்கலாக இருந்தது.



நக்சல் தீவிரவாதத்தின் சுவடுகளை சென்ற வழிகளில் காண முடிந்தது. வார்த்தைகளால் எழுத இயலாத பல செய்திகளை காதுகளுக்குள் உள்வாங்கிக்கொண்டே பயணித்தோம்.

மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு கிராமத்து தொடக்கப்பள்ளிக்கு வந்துசேர்ந்தோம். கிராம மக்கள் பொதுவாக நகரவாசிகளை கொஞ்சம் மிரட்சியாகவே பார்ப்பார்கள். அங்கேயும் அதுவே நடந்தது. பள்ளி குழந்தைகள் எங்களை நோக்கி எதோ பேசியும், சிரித்துக்கொண்டார்கள் என்னவென்று தான் புரியவில்லை. நம்மூரில் இந்தியை எதிர்த்த அறிவாளிகளை மனதுக்குள் திட்டிகொண்டேன். அரக்கு கலரில் கால் சட்டையும், வெள்ளை சட்டையும் சீருடையாக போட்டிருந்தார்கள். கேமராவை வெளியில் எடுத்து ஷூட்டிங்கை ஆரம்பித்தோம். குழந்தைகள் அனைவரும் கேமரா பக்கமே வரவில்லை.

இந்த குழந்தைகள் தான் டாக்குமெண்டரியின் முக்கிய கதாபாத்திரங்கள் அவர்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே டாக்குமெண்டரி நன்றாக வரும். அவர்களோடு அவர்களாக கலந்தால் மட்டுமே நமக்கு அவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புகைப்படத்திற்கு மொழி ஒரு தடையில்லை. அந்த குழந்தைகளோடு சிரித்தும் பேசியும் கேமராவுக்கும் அவர்களுக்குமான நெருக்கத்தை அதிகரித்தேன் நம்பிக்கையை வரவைத்தேன். எடுத்த புகைப்படங்களை அவர்களிடம் காண்பித்தேன் ஒட்டிக்கொண்டார்கள். கேமரா ஒரு வசியப்படுத்தும் ஒரு கருவி என்பது நிரூபணமானது. அறிமுகம் இல்லாத நபர்களை புகைப்படம் எடுக்க முயற்சிக்கும்முன் அவர்களுக்கும் நமக்குமான இடைவெளியை குறைக்க வேண்டும், அந்நியோன்யத்தை அதிகரிக்க வேண்டும் அப்போது தான் நிஜங்களை பதிவு செய்ய முடியும் என்ற பொதுவிதி உண்மையானது.

தினசரி நாளும் நாங்கள் சந்தித்த குழந்தைகள், கிராமத்தில் இருந்த பெண்கள், இளைஞிகள் அனைவரும் ஒவ்வொரு வகையில் திறம்பெற்று இருந்ததை காண முடிந்தது. நான் செய்தி தொலைக்காட்சிக்கு பணியாற்றிய காலகட்டத்தில் மக்களிடம் பேட்டி எடுக்க மைக்கை நீட்டினால் அவர்களுடைய பிரச்சினைகளை சொல்லவே திணறுவார்கள். இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுத்த பின்னரே அவர்களிடம் முழுமையான பேட்டியை வாங்க முடியும். இங்கே, நிலைமை சற்று வித்தியாசமாக இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவனுடைய கிராமத்தின் சூழல், மக்களின் நிலை, முன் வரலாறு, தொண்டு நிறுவனத்தின் பணிகள் காரணமாக கிராம மக்கள் அடைந்த நன்மைகள், பள்ளி குழந்தைகள் பெற்ற வசதிகள் என சொல்லிக்கொண்டே போனான். ஆச்சரியமாக இருந்தது. அந்த மாணவன் மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்திய ஒரு கூட்டத்தில் ஆட்சித்தலைவரிடம் தன்னுடைய கிராமத்தின் தேவைகள் குறித்து நியாயமான பல கேள்விகளை கேட்டு திணறடித்தவனாம்.

ஒவ்வொரு கிராமத்திலும் மாணவர்களை கொண்ட அமைப்பு உள்ளது. அவர்கள் அந்த கிராமத்தின் தேவைகள், பள்ளிக்கு தேவையான வசதிகள் குறித்து வாரம்தோறும் கூட்டங்கள் நடத்தி ஆலோசித்து உள்ளூர் அளவிலும், மாவட்ட அளவிலும் அந்த பிரச்சினைகளை கொண்டு சென்று அதற்கு தீர்வும் பெற்று வருகிறார்கள்.

கல்வியறிவு இல்லாத மக்களை ஏமாற்றி பிழைக்கும் கந்துவட்டி கும்பல் இங்கும் உள்ளது. வட்டி கட்ட முடியாத குடும்பங்கள் திருமண வயதை எட்டாத தங்களின் இளம் வயது பெண்களை பணத்துக்காக வயது மூத்த ஆண்களுக்கு  திருமணம் செய்து கொடுத்து அவர்கள் கொடுக்கும் பணத்தை பெற்று கடனை அடைக்கும் நிகழ்வுகள் பல இங்கு நடந்துள்ளன. தற்போது இந்த சூழல் மாறியுள்ளது. நம்மூரில் உள்ள பெண்கள் சுயஉதவி குழுக்கள் போல இங்கு மகிளா மன்ச் அமைப்பு இங்குள்ளது. கந்துவட்டி கொடுமையில் சிக்கியுள்ள குடும்பங்கள் குறித்து தகவல் கிடைத்தால் உடனே இந்த அமைப்பின் மூலம் பண உதவி செய்து கந்துவட்டியில் அந்த குடும்பங்களை காப்பாற்றி இளம்வயது பெண்களின் திருமணத்தையும் தடுத்து நிறுத்துகிறார்கள். கந்துவட்டியில் சிக்கி தப்பித்த கணவனை இழந்த ஒரு பெண் கூறிய கதையை கேட்டால் கண்ணீரும் வற்றிவிடும். சோளத்தட்டை கொண்டு வேய்ந்த குடிசைக்குள் வயதுக்கு வந்த பெண்ணுடன் அவர் வாழ்ந்து வருவது வாழ்க்கை அல்ல வைராக்யம்.



ஒரு கிராமத்திற்குள் நுழையும் போது ஊரே திரண்டு நின்றது. நண்பர் தீனாவிடம் எதுக்கு கூடி நிற்கிறாங்க? என கேட்டேன். அவருக்கும் தெரியவில்லை. காரில் இருந்து இறங்கி நின்றவுடன் கூடிநின்ற பெண்கள், குழந்தைகள் அனைவரும் எங்கள் அருகில் வந்து உள்ளூர் மொழியில் பாட தொடங்கினார்கள். கையில் தாம்பூல தட்டு, பித்தளை பாத்திரத்தில் தண்ணீர், மாவிலை, வீட்டில் பூத்த பூக்கள், குங்குமம் என சகலமும் அடங்கியிருந்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் நீடித்த பாடல் முடிவடைந்த பின்னர் எங்களுக்கு நெற்றி நிறைய குங்குமம் இட்டு வரவேற்றார்கள். திக்குமுக்காடி போனோம். புகைப்படம் எடுக்கச் சென்ற எங்களை தங்கள் கிராமத்திற்கு வந்த விருந்தினார்களாகவே பாவித்தனர். சில திருமண வீடுகளில் அந்த போட்டோகாரன கூப்புடுங்கப்பா என்ற வார்த்தைகளை கேட்டு வெதும்பி இருந்த எனக்கு இந்த மக்களின் அன்பு ஆச்சரியமாய்  இருந்தது.

ஒவ்வொரு கிராமத்திற்கு சென்று திரும்பும் போதும் அங்குள்ள பெண்கள் அவர்கள் தோட்டத்தில் விளைந்த பாகற்காய், புடலை போன்ற காய்கறிகளை கொடுத்து ஊருக்கு கொண்டு செல்லுங்கள் என்றார்கள். ஊர் வந்து சேர்வதற்கு அந்த காய்கறிகள் தாங்காது என்பதாலும், ஏர்போர்ட்டில் நடக்கும் அக்குவேறு ஆணிவேரு சோதனையை நினைத்தும் உங்கள் அன்பே போதும் என தவிர்க்க வேண்டியதாயிற்று. உண்மையில் எளியவர்களே கொடுத்து சிறக்கிறார்கள்.

தினசரி மதிய உணவு அந்தந்த கிராமங்களில் உண்டு மகிழ்ந்தோம். உண்மையான வீட்டு உணவு அதுதான். வீட்டில் வளர்த்த நாட்டுக்கோழி, அவர்கள்  வயலில் விளைந்த அரிசி, தோட்டத்தில் காய்த்த காய்கறி மற்றும் தானிய வகைகளைக் கொண்டு சமைத்த உணவு ஆறு நாட்களும் கிடைத்தது. அந்த உணவும் தேக்கு மர இலையில் செய்த தட்டுகளில் அன்போடு பரிமாறியதை மறக்க முடியாது. நொறுக்குத்தீனிக்கு எப்போதும் கிடைத்தது நெருப்பில் சுட்ட சோளக்கருது.

மேற்கத்திய கலாச்சாரம், உலகமயமாக்கல், நகரமயமாக்கல், ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்ற வார்த்தைகளை அணுகுண்டு போல வீசி பூமியை பிளந்து சுக்குநூறாக்கி வைத்திருக்கும் நம்ம ஊர்களைப் போல் அல்லாமல் இயற்கையை எந்த வகையிலும் சீரழிக்காத அழகிய கிராமங்களை காண முடிந்தது. வெற்றிலை போட்ட வாயுடன், நெற்றி வகிட்டில் கொஞ்சம் தாராளமாகவே குங்கும பொட்டுடன் பெண்கள், செம்பட்டை தலையும்  அரைக்கால் சட்டையுடன் திரிந்த குழந்தைகள் என நாங்கள் சென்ற கிராமங்கள் அனைத்தும் பெண்களும் குழந்தைகளுமாகவே நிறைந்து இருந்தார்கள். சில வயது மூத்த ஆண்களை காண முடிந்தது. இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயது ஆண்கள் ஊரில் இல்லாது குறித்து கேட்டபோது, அவர்கள் அனைவரும் வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு சென்று விடுவார்களாம். கிராம திருவிழாக்கள் மற்றும் குடும்ப விசேசங்களுக்கு மட்டுமே சொந்த ஊர்களுக்கு வருவார்களாம்.

ஜார்க்கண்ட் என்பதன் பொருள் “காடுகளைக் கொண்ட நிலப்பரப்பு” என்பதாகும். நிரம்ப காடுகளைக் கொண்டிருப்பதால் கனிமவளங்களுக்கும் குறைவில்லை. இரும்பு தாது, தாமிரம், நிலக்கரி, யுரேனியம், பாக்சைட், மைக்கா போன்ற கனிம வளத்தால் இந்த மாநிலம் தொழில் பிரதேசமாக பிரகாசமாக இருந்தாலும், காடுகள் ஊடே வாழ்க்கைச் சக்கரத்தை ஒட்டி வரும் மக்களின் வாழ்க்கைத்தரம் கனிமச் சுரங்கத்துக்குள் உள்ள இருட்டை போலவே இருக்கிறது. அந்த இருட்டுக்குள் சொல்ல நான் தயாராக இல்லை. அந்த இருட்டைத்தாண்டி வீசும் வெள்ளை ஒளிக்கீற்றே என் கண்களுக்கு தெரிந்தது.

ஆறு நாட்களில் பார்த்த மனிதர்கள் பலர், சந்தித்த மனிதர்கள் சிலர், பேசிய மனிதர்கள் மிக சொற்பம் இருப்பினும் நான் ஆழ்ந்து பார்த்த காட்சிகளை, ஆயிரம் பக்கங்களுக்கு கூட விவரிக்க முடியும். மொழிகள் இல்லாத மார்க்கத்தில் பயணிக்க விரும்புகிறேன்.

என்றும் பயணிப்பேன்…

கருப்பு நிலமும், மனிதர்களும் © பாலமுருகன் 2019
Balamurugan

பாலமுருகன், சுய கற்றல் மூலமாக புகைப்படக்கலையைஉள்வாங்கிக்கொண்டவர். திருமண புகைப்படக்காரராக தனது புகைப்பட பயணத்தை தொடர்ந்த அவர் சுதந்திர பத்திரிகை புகைப்படகாரராக தினசரி நாளிதழ் மற்றும் வார பத்திரிகைகளுக்கும் பணியாற்றி உள்ளார். 15 ஆண்டு காலம் தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு. 28 ஆண்டுகள் புகைப்படம் மற்றும் செய்தித்துறை சார்ந்து பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டு இளம் புகைப்பட ஆர்வலர்களுக்கு புகைப்பட பயிற்சி வகுப்புகளை புகைப்பட நிபுணர்களைக்கொண்டு நடத்தி வருகிறார். ஊடக உளவியல் துறையில் கல்லூரி பகுதி நேர விரிவுறையாளராகவும் உள்ளார். புகைப்படத்துறையில் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்திகொள்ள விரும்பி ஆவண புகைப்பட தொகுப்புகளை உருவாக்கி வருகிறார்.



Published on February 16, 2021

Share

Related Articles