ஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி2017-04-20T07:18:57+00:00

Project Description

{ புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?
அல்லது ஒளியையா?
ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…  }

ஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி

ஜான் ஐசக் © விபுன் ஜெயின்

புகைப்படக்கலைஞன் என்பவன் யார்? பத்திரிக்கைகளில் வேலை செய்பவரா? கல்யாண வீடுகளில் படம் எடுப்பவரா? கலா பூர்வமான காட்சிகளை வெளிப்படுத்துபவரா? புகைப்படக்கலைஞனின் செயல் பாடுகள் வெறும் காட்சிகளைப்பதிவு செய்வது மட்டுந்தானா? மாபெரும் காட்சிப் படிமங்களை உருவாக்கியவர்கள் கடந்து வந்த கடினமான பாதைகள் என்ன? இதைப்பற்றி நாம் யோசித்திருக்கிறோமா? எழுத்து, ஓவியம், திரைப்படம், புகைப்படம் இவை யாவுமே கடினமான வலியின் பாதைகளில் இருந்துதான் பிறக்கிறது. கடினமான வலியின் பாதைகளின் காயங்கள் மட்டுமே மாறுபடுகின்றன. ஒரு நாவலாசிரியரின் நாவலைப்போல, நாவலாசிரியனின் வாழ்க்கையைப் போல விரிந்த திரைச்சீலையைக் கொண்டுள்ளது ஜான் ஐசக்கின் வாழ்வு. இவரது கருப்பு வெள்ளைப் புகைப்படங்கள், அவரது வாழ்க்கையின் கருமையான பகுதிகளை விழுங்கி, வெண்ணிறப் பிரகாசத் துடன் உலகை வெளிப்படுத்துகிறது. 1980களின் பிற்பகுதியில் எஸ்.வி. ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் வந்த அவரது புகைப்படங்கள் என் வாழ்வைப் புரட்டிப் போட்டன. அன்றிலிருந்து அவரை நோக்கிப் பயணித்தேன். புகைப்படங்களின் வழியாகவே அவரைப் பின் தொடர்ந்த எனக்கு வாழ்க்கையின் பல மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன. பின்பு தியோடர் பாஸ்கரன் அவர்களைச் சந்தித்தபோது, உங்களுடைய உத்வேகத்துக்குக் காரணமான புகைப்படக் கலைஞர் யார்? என்றபோது ‘ஜான் ஜசக்’ என்றேன். அவரின் முகம் மலர்ந்தது, பின்பு ஒருநாள் என்னை அழைத்தார், ‘நீங்கள் ஜான் ஜசக்கைச் சந்திக்க விரும்புகிறீர்கள்?’ என்றார். பின்பு சந்தித்தோம், ஜான் ஜசக் திருநெல் வேலிக்கு வந்தார், பேசினோம், பயணித்தோம், புகைப்படங்கள் எடுத்தோம், இவை யாவுமே மறக்க முடியாத புகைப்படக் காட்சிகள்.
ஜான் ஜசக்கின் சொந்த ஊர் திருச்சிக்குப் பக்கத்திலுள்ள எரங்களூர் கிராமம் பெற்றோர்கள் ஆசிரியர்கள். பின்பு சென்னை புதுக்கல்லூரியில் பட்டப்படிப்பும், சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியப்படிப்பு டிப்ளமோவும் படித்தார். ஐந்து வருடங்களுக்கு மேலாக கிதார் இசைவகுப்புகளுக்கும் சென்று இசையைப் பயின்றார். 1968இல் இலவசமாக அமெரிக்கா செல்ல வாய்ப்பு கிடைக்கவே பின்பு அங்கு சென்று விட்டார். அமெரிக்காவில் அவர் வாழ்க்கையைப் பாடகராகவும், இசையமைப்பவராகவும் தொடங்குகிறார், இடையில் ஐக்கிய நாடுகள் சபையில் சாதாரணப் பணியாளராக வேலைக்குச் சேர்கிறார். இக்காலகட்டத்தில் அவருடைய அண்ணன் அவருக்கு ஒரு பெண்டக்ஸ் கேமராவைப் பரிசளிக்கிறார். அவ்வேளையில் ஐக்கிய நாடுகள் சபை ‘மனிதனின் கைகள்’ என்ற தலைப்பில் ஒரு புகைப்படப் போட்டியை அறிவிக்கிறது. அதற்காகப் புகைப்படம் எடுக்கத் தொடங்குகிறார். அவருக்கே முதல் பரிசு கிடைக்கிறது. ஐக்கிய நாட்டுச் சபையில் சாதாரணப் பணியாளர் புகைப்படம் எடுக்கும் திறமையைப் பார்த்து அவருக்கு புகைப்படப் பிரிவில் வேலை கொடுக்கிறார்கள் முதலில் இருட்டறையில் புகைப்படங்களைக் கழுவும் வேலையில் இருக்கிறார். நெகட்டிவ் கழுவவும், புகைப்படங்களைக் கழுவவும் நேர்த்தியான பயிற்சியைப் பெறுகிறார். ஒரு புகைப் படக்கலைஞனுக்கு இப்பயிற்சிகள் எவ்வளவு அவசியமாக இருக்கும் என்பதை புகைப்படங்களை கழுவுபவருக்கே தெரியும். பின்பு தொடர்ச்சியாகப் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்குகிறார். 1975இல் கோடக் விருது, 1977இல் நிகான் விருது, 1978இல் சென்னையில் மெரீனாவில் மாடுகள் குளிக்கும் காட்சிக்காக ஜெர்மனியில் தங்க விருது என்று விருதுகளைக் குவிக்கிறார். ஐக்கியநாடுகள் சபையில் உலக அளவில் முக்கியமான புகைப்படக்கலைஞனாகவும் உருமாற்றம் பெறுகிறார்.

பின்புதான் அவருடைய கேமரா வாழ்க்கையின் குரூரமான பக்கங்களை நோக்கித் திரும்புகிறது. ஐக்கியநாடுகள் சபைக்காக யுத்தங்கள் நடக்கும் நாடுகளை நோக்கித் திரும்புகிறது அவரது வாழ்க்கை. எங்கெல்லாம் துயரங்களும், கண்ணி வெடிகளும், மர ணங்களும், குழந்தைகளும் இருக்கிறதோ அங்கெல்லாம் அவரும் இருக்கிறார். இந்த இருபதாம் நூற்றாண்டே அகதி களின் நூற்றாண்டுதான், அவருமே ‘அகதி’ யாக மாறுகிறார். மத்தியக் கிழக்கு நாடுகளின் யுத்தம், பாலஸ்தீன யுத்தம், இஸ்ரேல், ஈரான், அமெரிக்க நெருக்கடி நிலமை, வியட்நாம், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், ருவாண்டா, கம்போடியா, ஆப்பிரிக்கா, குவைத், தென் அமெரிக்கா, போஸ்னியா நாடுகளின் துயர மிக்க தருணங்களை உலகுக்குத் தெரிவிக்கிறார். மனித உறவுகள் சிதைந்து, மரணங்களும், அழுகைகளும் பின்தொடர வாழ்க்கையின் அர்த்தங்களைத் தேடுகிறார். துயரங்களின் பிடியிலிருந்து ‘குழந்தைகளே’ அவரைக் காப்பாற்றுகின்றன. கண்ணி வெடிகளும், துப்பாக்கிச் சத்தங்களிலும், குழந்தைகள் சிரித்து விளையாடி இவ்வாழ்க்கையின் அர்த்தங்களை உலகுக்கு உணர்த்தப் பார்க்கி றார்கள். யாரும் இதை உணரவில்லை, குழந்தைகளின் சிரிப்பைப் பின்தொடர்ந்து கரையேறுகிறார் ஜான் ஜசக். ஒவ்வொரு நாடுகளிலும் விநோதமாக அனுபவங்கள், அந்த அனுபவங்கள் பல நூறு பக்கங்கள் வரக் கூடும். ஏதோ ஒரு நாட்டில் அகதிகள் முகாமில் எடுக்கப்பட்ட ஒரு குழந்தை யின் புகைப்படம், தொலைதூரத்திலுள்ள வேறேதோ நாட்டில் அக்குழந்தையின் பெற்றோர்களைக் கண்டு பிடித்துத் தந்தி ருக்கிறது. புகைப்படத்தின் பரிமாணங்கள் அளவில்லாதவை.

யுத்தங்கள் யாருக்குமே மகிழ்ச்சியைத் தருவதில்லை, ஆனாலும் யுத்தங்கள் தொடர் கின்றன. எனவே ஜான் ஜசக்கின் பயணமும் தொடர்கிறது. பயணத்தில் திருப்பம் வருகிறது ருவாண்டாவில்…

ஹிட்லரின் காலத்தில் நடந்த கொடுமை களைவிட அதிகமான கொடுமைகளைச் சந்தித்திருக்கிறது.  ருவாண்டா ஆனால் அதிகம் கவனம் பெறாமலே இலட்சக் கணக்கான மக்கள் இனவெறியால் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர். பாதை யெங்கும் பிணங்கள், நாம் பிணங்களின் மேலேயே நடந்து செல்லவேண்டும். ரத்தத்தின் வாசனையை சுவாசித்துக் கொண்டே நடக்கவேண்டும். கடினமான நரகம் எனினும் புகைப்படங்கள் எடுப்பதே அவரது தொழில் ஒவ்வொரு புகைப்படத்தை எடுக்கும் போதும் முழுமையான கோர அனுபவங்கள் நம் தலையில் ஏறும் உணர்ச்சிகளின் ஆழிப்பேரலைகளுக்கு மென்மையான இதயங்கள் தாங்காது. ஒவ்வொரு புகைப்படம் எடுக்கும் போதும் தலையில் ஆணியை இறக்குவது போல இருக்கும், இவ்வுணர்ச்சிகளை அனுபவித்தவர்களுக்கே இது உணர முடியும், ஏனெனில் அர்த்தமுள்ள புகைப்படக் கலைஞர்கள் தங்கள் உடல், மனம் அனைத்தையும் முழுவீச்சில் ஒருமுகப் படுத்தியே ஒரு புகைப்படத்தை உருவாக்குகிறார்கள். துயரமான அனுபவங்கள் நேரடியாக உடலையும் மனதையும் நேரடியாகத் தாக்கக் கூடியது. புகைப்படங்கள் எடுக்க, எடுக்க ஜான் துவண்டு விடுகிறார். மெல்ல அவர் தன் சுயநினைவை இழக்கத் தொடங்குகிறார். குழந்தைகளை வெட்டிக் கொல்கிறார்கள், பெற்றோர்கள். ஒரு சிறுவன் ஓடிவந்து நீங்கள் என் அப்பா போல இருக்கிறீர்கள் என்கிறான். உலகின் பயங்கர மான துயரம் இது பிறகு அவருடைய பேச்சு நின்று விட்டது. அவர் அழ ஆரம்பிக்கிறார். எல்லாமே வெட்டவெளியாக இருண்மையாக மாறி விடுகிறது. Nervous break down. ஜான் யாரென்றே அவருக்குத் தெரியவில்லை. எல்லாம் முடிந்து அமைதியாகி விட்டது.

பின்பு விமானம் மூலம் அவர் நியூயார்க் கொண்டு வரப்படுகிறார். 8 மாதங்கள் அவருக்குச்  சிகிக்சையளிக்கப்படுகிறது. பின்பு உடல் மட்டும் குணமடைந்து வீட்டுக்குத் திரும்புகிறார். அவரது மனைவியின் அன்பிலும் பாதுகாப்பிலும் ஒரு மெழுகுப் பொம்மையைப் போல நீண்ட நாட்கள் அமர்ந்திருக்கிறார். ஒருநாள்  வீட்டின் தோட்டத்தில் அமர்ந்திருக்கிறார். ஏதுமற்ற காற்றைப்போல, நீரைப்போல… திடீரென ஒரு வண்ணத்துப் பூச்சி அவரைக் கடந்து செல்கிறது, மிளிரும் வண்ணங்களைச் சுமந்து செல்லும் அவ்வண்ணத்துப்பூச்சி அவரை ஈர்த்து, அவரை அசைக்கிறது. அவரது கண்கள் வண்ணத்துப் பூச்சியைப் பின்பற்றுகிறது. மேலும் ஓர் அதிர்ச்சி, வண்ணத்துப் பூச்சி விரிந்து மலர்ந்த ஒரு சூரியகாந்திப்பூவின் மேல் அமருகிறது. இயற்கையின் முழுமை. ஒரு நிமிடம் இயற்கையின் ஒருங்கிணைவை ரசிக்கிறார். மெதுவாக எழுந்து வீட்டினுள் நுழைந்து, அலமாரியைத் திறந்து பலநாட்களாகப் பயன்படுத்தப்படாத கேமராவை எடுக்கிறார். பின்பு தோட்டத்திற்கு வந்து வண்ணத்துப் பூச்சியின்மேல் கவனத்தைச் செலுத்துகிறார். இயற்கையின் லயங்கள், அவரை ஒருமுகப்படுத்துகின்றன. போகஸ் செய்து கிளிக் செய்கிறார். புகைப்படம் எடுத்த தருணமும், அவருக்கு நினைவு திரும்பிய தருணமும் பிரிக்க முடியாதது.

இவ்வேளையில் அவர் ஐக்கிய நாட்டுச் சபையில் புகைப்படப் பிரிவின் தலைவராகவும் மாறிவிட்டிருந்தார். மைக்கேல் ஜாக்ஸனிடமிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. மைக்கேலைப் புகைப்படமெடுக்கிறார். இவரெடுத்த புகைப்படங்களின் பின்னணியில் மைக்கேல் ஜாக்ஸன் நடனமும் இடம் பெறுகிறது. பெர்க்மெனின் நடிகை ‘லிவ் வுல்மேன்’ஐ  புகைப்படம் எடுத்துள்ளார். பின்பு ஐ.நா. சபை வேலையிலிருந்து வெளியேறி சுதந்திரமான புகைப்படக் கலைஞராக மாறிவிட்டார். வனவிலங்கு களையும், இயற்கையையும் படம் பிடிப்பது இப்போது அவருடைய முழுநேரப் பணியாகி விட்டது.

இந்தியாவில் காஷ்மீரின் அழகைப் பற்றிய புகைப்படங்கள் புத்தகங்களாக வந்துள்ளது. இன்று உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிருப்பதை ஃபேஸ்புக்கில் சமிக்ஞை தருகிறார். ஹென்ரி கார்ட்டியர் பிரெஸ்ஸோன். யூஜின் ஸ்மித், ரகுராய், ரகுபீர் சிங், இவருக்கும் பிடித்தமான புகைப்படக் கலைஞர்கள். பிரெஸ்ஸோனின் புகைப் படங்களை வியந்து, வியந்து பேசுவார். ஒரே புகைப்படத்தில், இரண்டு, மூன்று புகைப்படங்கள் தரும் அனுபவங்களை மடிப்புகளை, ஒருங்கி ணைத்து அவர் படிமங்களாக்கியிருப்பது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது என்பார்.

புகைப்படக் கலைஞனுக்கு விதிகள் இல்லை என்பார். தொழில் நுட்பத்திலும், வாழ்க்கையிலும் சுதந்திரமான பாதையையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். குறிப்பிட்ட லென்ஸைப் பயன்படுத்தித்தான் குறிப்பிட்ட விஷயங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிகளை மறுக்கிறார். மெரீனா பீச்சில் இவர் எடுத்த புகைப்படம் 300மிமி லென்சில் எடுக்கப்பட்டது. எல்லாமே அழகியலின் தர்க்கத்தில்தான், தொழில்நுட்ப சூத்திரங்களில் இல்லை என்கிறார் புத்தருக்கு விழிப்பு ணர்வு ஏற்பட்டது போல, ஒவ்வொரு புகைப்படமும் தனக்கு விழிப்புணர்வு தருகிறது என்கிறார்.

பறவைகளின் வலசையைப் போல இவர் உலகெல்லாம் சுற்றி வந்த அனுபவங்களை புத்தகங்களாக எழுதியிருக்கிறார். குவைத்தில் எண்ணெய்க் கிணறுகள் பற்றியெரியும் போது, அதைப் புகைப்படம் எடுப்பதற்காக ஹெலி காப்டரில் ஒரு கயிற்றில் ஜானைக் கட்டி எண்ணெய்க் கிணறுகளின் நடுவில் இவரை இறக்கி விட்டனர். எரியும் நெருப்புகளின் நடுவில் நின்று புகைப்படம் எடுத்த அனுபவங்களை இவர்விவரிக்கும் போது மெய்சிலிர்க்கும்.

மனித மாண்பே புகைப்படத்தின் அடிப்படை என்கிறார். எம் எல்லோர் மனதிலும் ஒரு கேள்வி உள்ளது. கலவரங்களிலும், துயரங்களிலும், யுத்தங்களின் நடுவிலும், மரண நிலத்தின் நடுவில் நின்று ஒரு புகைப்படக் கலைஞன் எவ்வாறு வேலை செய்ய முடியும். பிற மனிதர்கள் துயரத்தில் இருக்கும்போது, அத்துயரத்தில் பங்கு கொள்ளாமல், விலகி நின்று புகைப்படம் எடுப்பது அறநெறிதானா? மாபெரும் கலவரங்களின் நடுவில் நிற்கும் புகைப்படக் கலைஞன், கலவரங்களில் பாதிக்கப்படும் மக்களைக் காப்பாற்றாமல் புகைப்படங்கள் எடுப்பது என்ன மாதிரியான நீதி? புகைப்படக் கலைஞன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையைச் செய்வதா? தன்னுடைய தொழிலுக்கு மரியாதை கொடுப்பதா? அல்லது மக்களின் பிரதிநிதியாக நின்று மக்களுக்காகப் போராடுவதா? இவை யாவுமே சாதாரணக் கேள்விகள் அல்ல.

யாராலும் சரியான பதிலைக் கூறமுடியாத கேள்விகளும் கூட, இந்நிலையில் களத்தில் நிற்கும் புகைப்படக் கலைஞன் சுயமாக தன்னுடைய பாதையைத் தேர்ந்தெடுக்கமுடியும், மக்களுக்காகப் போராடி மாண்டவர்களும் உண்டு, தன் னுடைய வேலையைச்செய்து அவ்வொட்டு மொத்த மக்களுக்காக நீதி கிடைக்கச் செய்தவர்களும் உண்டு.

ஜானைப் பொறுத்த வரையில் புகைப் படங்களைவிட மனித மாண்பே முக்கியம். அவருடைய புகைப்பட அனுபவங்களில், ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே வேலை செய்யும்போது, ஒரு சிறு தெருவழியாக அவர் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் ஒரு காட்சி, தெரு முனையில் ஓர் இளம்பெண் முழுநிர்வாணமாக, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபடி, அதன் தொப்புள் கொடிகூட வெட்டப்படவில்லை, ரத்த வெள்ளத்தில் குழந்தையின் அழுகுரலோடு அக்காட்சி விரிந்து கிடக்கிறது. ஒரு புகைப்படக் கலைஞனாகப் பார்த்தால் இந்த நூற்றாண்டின் முக்கியமான புகைப்படமாக மாறியிருக்கும், பல விருதுகளையும் பெற்றுத் தரும். ஆனால் ஜானுக்கோ அப்பழங்குடி மக்களின் இனவரைவியல் தெரியும், தன்னுடைய நிர்வாணத்தைப் பிறர் பார்க்க விருப்பாத சமூகம் அது. ஜான் அக்காட்சியைப் புகைப்படம் எடுக்கவில்லை. இசையும் ஓவியமும் அவருக்குக் கற்றுக் கொடுத்த புகைப்பட அழகியலை அவர் புறந்தள்ளி விட்டார். தன்னுடைய கோட்டினால் அப்பெண்ணை அவர் மூடிவிட்டார். பின்னால் வந்த புகைப்படக் கலைஞர்கள் அவருடைய செய்கையினால் கோபப்பட்டதை அவர் கண்டு  கொள்ளவில்லை. இப்படி அவரது கேமரா இப்ப மௌனித்த தருணங்களையும், புகைப்பட வெளிச்சங்களையும் உள்ளடக்கிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புத்தகத்திற்கு அவர் கொடுத்திருக்கும் தலைப்பு நான் எடுக்காத புகைப்படங்கள் (The Picture I did not take) (www.johnisaac.com)

ஆர். ஆர்.சீனிவாசன்

தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.