போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Louis-Jacques-Mandé Daguerre
லூயிஸ்-ஜாக்-மாண்டே டகுரே (Louis-Jacques-Mandé Daguerre) | மூலம் இணையம்

ஒளியே மொழி-வரலாறே மொழி, புகைப்படக்கலையிலிருந்து தெருப்புகைப்படக்கலை 

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?

அல்லது ஒளியையா?

ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…

லகப் புகழ்பெற்ற லெய்கா (LEICA) கேமரா நிறுவனம் சமீபத்தில் LEICA M என்னும் MONOCHROME கையடக்க கேமராவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது இந்த டிஜிட்டல் கேமரா கறுப்பு வெள்ளையில் மட்டுமே புகைப்படம் எடுக்கும். வண்ணப்படம் எடுக்கும் தொழில்நுட்பக் கருவிகளை அதிலிருந்து நீக்கிவிட்டார்கள். இப்படி ஒரு கேமராவை உருவாக்குவதற்கு நீண்ட வரலாற்றுப் பின்னணி இருக்கிறது, அதற்குப் பின்னால் ஒரு புகைப்படக் கலைஞரும் இருக்கிறார்.

புகைப்படக்கலையின் வரலாறு என்பது ஊசித்துளைக் கேமராவினுள்தான் தொடங்குகிறது.கேமரா அப்ஸ்க்யூரா (CAMERA OBSCURA), கேமரா லூசிடா (CAMERA LUCIDA) என்ற இருவகையான புகைப்படக் கருவிகள் – ஓவியர்கள் தங்களுடைய படிமங்களைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.

நான்காம் ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சீனாவில் புகைப்படக் கருவியின் அடிப்படைகளுக்கான சிந்தனைகள் உருவாகத் தொடங்கின. பிறகு 17ஆம் நூற்றாண்டில் ஐசக் நியூட்டன் வெண்ணிற ஒளி என்பது பல்வேறு வண்ணங்களை உள்ளடக்கியது என்றார்.



1727இல் தற்செயலாக நேர்ந்த விபத்தின் மூலம் ஒளிப்படத்தின் மூலக்கூறுகளான நைட்ரிக்ஆசிட், வெள்ளி போன்றவற்றின் மூலம் ஒரு பிளாஸ்கின் ஒரு பகுதி பிலிமாக மாறியது. அதற்குப்பிறகு உண்மையிலேயே முதல் புகைப்படம் என்பது 1816இல் தான் எடுக்கப்பட்டது. எடுத்தவர் (Nicephore Niepce) நைஸ்போர் நீப்ஸ்.மங்கலான புகைப்படத்திலிருந்து 1837இல் லூயிஸ் டாகூரே வெள்ளி பூசப்பட்டசெம்புத்தகட்டின் மூலம், பாதரசத்தால் முதன்முதலாக தெளிவான கைப்படத்தை எடுத்துக்காண்பித்தார். 1853இல் முதல் புகைப்படஸ்டுடியோ உருவானது, உருவாக்கியவர் நடார். 1861இல் வண்ணப்புகைப்படம் எடுக்கப்பட்டது. அதாவது சிவப்பு, பச்சை, நீல நிறபில்டர்களில் தனித்தனியாக எடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. புகைப்படக் கலையின் தொழில்நுட்பம் என்பது இவ்வாறு தொடங்கினாலும், புகைப்படக்கலையின் வரலாறு என்பதுமக்களின் வரலாற்றைப் படம் பிடிக்கும்போதுதான் தொடங்குகிறது.

இவ்வகையில் 1861-1865 காலகட்டத்தில் மேத்யூ பிராடி அமெரிக்க சிவில் யுத்தங்களைப் படம்பிடித்தார். மக்களின் துயரநிலைமைகளை 7000க்கும் அதிகமான நெகட்டிவ்களில் பதிந்தார்.

Camera Obscura
Camera Obscura
Camera Lucida
©  மூலம் இணையம்

1870களில்தான் புகைப்படக்கலைஞர்கள் தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்யஆரம்பித்தார்கள். இதில் முக்கியமான அமெரிக்கப் புகைப்படக்கலைஞர்கள் வில்லியம் ஜாக்சன் மற்றும் டிம் ‘3’ சலிவன். தொடர்ச்சியான புகைப்படங்களே திரைப்படம். 1877இல் தொடர்ச்சியான புகைப் படங்களை முதலில் பதிவுசெய்த புகைப்படக்கலைஞர் எட்வர்ட் மே பிரிட்ஜ். வெறுமனே தொழில்நுட்பக் காரணங்கள் மட்டுமன்றி, காலத்தை, வரலாற்றைப்பதிவு செய்தல் காட்சிமொழியைத் திரைப்படத்திற்குத் தந்தது புகைப்படக்கலைதான்.

புகைப்படக்கலை என்பது மானுடவியலின் (anthropology) ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்து வருகிறது. மனிதனின் யதார்த்தமான நடத்தையைப் பற்றிப் படிப்பதே மானுடவியல், அதைப் பதிவு செய்வதே புகைப்படக்கலை என்றும் குறிப்பிடலாம். இவ்வகையில்தான் ஒரு சமூகம் புறக்கணிக்கிற, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பதிவுசெய்யும் முயற்சிகளில் மனசாட்சியுள்ள புகைப்படக்கலைஞர்கள் இயங்குகிறார்கள். இதன்முன்னோடியாக 1890இல் ஜேக்கப் ரிஸ் (‘How the Other Half Lives’) மீதிப் பாதிமனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள்? என்ற தலைப்பில் படிமங்களை உருவாக்கினார். இப்படியாகத்தான் வரலாறென்பதே ஒளி மொழியாக மாறுகிறது. பின்பு அமெரிக்காவின் மில்களில்வேலை செய்யும் குழந்தைத் தொழிலாளர்களை 1909இல் படம்பிடித்தனர். எல்லாமே ஆவணங்களாகவும், வரலாறாகவும் புகைப்படக்கலைஞர்கள் பார்க்கத் தொடங்கியபோது, மேன் ரே போன்ற ஓவியர்கள் தொழில்நுட்பத்திலும், பார்க்கும் விதத்திலும் புரட்சியை ஏற்படுத்தினார்கள். ரேயோகிராப் (Rayograph) தொழில்நுட்பத்தின் மூலம் பாரிஸ்நகரங்களின் பாலியல் தொழிலாளர்களைப் படம் பிடித்தார். புகைப்படக் ‘கலை’ என்பது கலையாக உருமாற்றம் கொள்ள ஆரம்பித்தது.

புகைப்படக்கருவி என்பது பெரும் சுமையாக இருந்த காலம் அது. புகைப்படங்கள் எடுப்பது என்பது நிறைய பேர் செய்யும் வேலையாக இருந்தது. குறிப்பாக F64 என்ற குழு இருந்தது.அந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் F64 அபெர்ச்சரில் வைத்து மட்டுமே புகைப்படங்களை எடுத்து வந்தார்கள். இதில் நடார் ஈஸ்ட்மன் முதன்மையானவர் ஆன்செல் ஆடம்ஸ் என்னும் இயற்கையியல் புகைப்படக்கலைஞர். கடலையும், நிலவையும், பாறைகளையும், மலைகளையும்இவரைப்போல் படம் பிடித்தவர்களில்லை. அவர் படம் பிடிக்கச் செல்லும்போது அவருடையகாரைத் தொடர்ந்து மூன்று டிரக்குகளில் புகைப்படக் கருவிகள் செல்லுமாம்.



இவ்வகையான சூழலில்தான் 1924இல் நாம் முதலில் குறிப்பிட்ட லெய்கா கேமரா நிறுவனம் ஒரு கையடக்கக் கேமராவை உருவாக்கியது. உண்மையில் புகைப்படக்கலையின் வரலாறு மீண்டும் இங்கிருந்து தொடங்குகிறது என்றும் குறிப்பிடலாம். அதாவது மக்கள் புகைப்படக்கலை, தெருப்புகைப்படக் கலை, ஆவணப்புகைப்படக்கலை, கேண்டிட் புகைப்படக்கலை போன்றவை. அதேவிதமான கையடக்க டிஜிட்டல் கறுப்பு வெள்ளை கேமராவைத்தான் 2012இல் மீண்டும் உருவாக்கியுள்ளது லெய்கா. ஏனெனில் 1924இல் உருவான கேமரா உலக வரலாற்றில், வரலாற்றைப் புகைப்பட மொழியாக மாற்றி எண்ணற்ற மகத்தான புகைப்படக்கலைஞர்கள் மலர்வதற்கு லெய்கா பெரும்பங்காற்றியது.

குறிப்பிட்ட ஒரு கேமராவிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோம் என்றால், அது எண்ணற்ற சாத்தியங்களை உருவாக்கியது, மனிதர்களின் அசாதாரணமான உணர்வுகளை,சாதாரண உணர்வுகளை, நெருக்கத்தை, அன்பை, பரிவை, மரியாதையை, விலகி நிற்காமல் மக்களோடு பங்கு பெறும் உணர்வை, எதிர்பாராத தருணங்களை பதிவு செய்யும் வித்தையை கேமராவின் அளவே தீர்மானிக்கிறது.

Daguerreotype images
Daguerreotype images
Daguerreotype images
© டாகூரேடைப் புகைப்படங்கள் | மூலம் இணையம்

1925இல் ஆந்த்ரே கெர்த்ஸ் இதன் சாத்தியங்களை விரிவாக்கி உலகை முதலில் புதிதாகப் பார்த்தார். தெருப்புகைப்படக்கலை இவரிடமிருந்து உருப்பெற்றது. இவருக்குப் பிறகு 1930களில் லெய்கா கேமரா ஹென்றி கார்டியர் பிரெஸ்ஸோனால் பிரபலமாயிற்று. லெய்கா கேமராவினால் ஹென்றி கார்டியர் பிரெஸ்ஸோன் பிரபலமானார். புகைப்படங்களில்,திரைப்படங்களில் வண்ணங்களை மிளிரச் செய்த ஜார்ஜ் ஈஸ்ட்மென் 1932இல் தன்னுடைய எழுபத்தேழாவது வயதில் “என்னுடைய வேலை முடிந்துவிட்டது, எதற்காகக் காத்திருக்கவேண்டும்’என்ற குறிப்புகளுடன் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலைசெய்துகொண்டார்!

இரண்டாவது உலக யுத்தம் புகைப்படக் கலைஞர்களின் களமாக இருந்தது.இக்காலகட்டத்தில் வண்ண நெகட்டிவ்கள், ஹேஸல்பிளாடின் புதிய SLR மீடியம் வகைகேமராக்கள், தானியங்கி டயாப்ரம், (போலராய்டு) உடனடியாக பிரிண்டுகள் வரக்கூடிய கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன. LIFE என்ற பத்திரிகைப் புகைப்படக்கலைஞர்களின் களமாக மாறிவிட்டிருந்தது அன்று சோழியை உருட்டிவிட்டமாதிரி, புகைப்படக்கலைஞர்கள் உலகெங்கிலும் கேமராவோடு சிதறினார்கள். சோழியை உருட்டியது LIFE பத்திரிகை. யுத்தங்களின் துயரங்களும், அழிவுகளும் உலகத்தை விரட்டியது, உலுக்கியது, அகதிகளானார்கள் புகைப்படக்கலைஞர்கள், அகதிகளை உணர்ந்தார்கள். டோரத்தியா லேஞ்ச், மார்கரெட் போர்க்வொயிட் (காந்தியைப் படம் பிடித்தவர்), ராபர்ட் காபா, யூஜின் ஸ்மித், ஹென்றி கார்டியர் பிரஸ்ஸோன் வழிபாட்டு பிம்பங்கள்ஆனார்கள். 1947இல் புகைப்படக் கலைஞர்களின் கூட்டுறவு புகைப்படச் செய்தி நிறுவனமாக மேக்னம் உருவானது.


பத்திரிகைப் புகைப்படக்கலை என்பதைத் தாண்டி புகைப்படக்கலைஞர்கள், நுண்கலைஞர்களானார்கள். ஓவிய கேலரிகளில் ஓவியங்களின் நீட்சியாக புகைப்படங்கள் பிரேம் செய்யப்பட்டு கலைப் படைப்புகளாகக் காட்சிக்கு வைக்கப்பட்டன. 1955இல் எட்வர்ட்ஸ்டெய்சன் (Edward Steichen) ‘மனிதனின் குடும்பம்’ என்ற தலைப்பில் நியூயார்க்கின் நவீனக்கலை மியூசியத்தில் தன்னுடைய புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்தார்.

புகைப்படக்கலை உலகக் கலை வரலாற்றில் தவிர்க்க முடியாத கலையாக மாறியிருந்தது. எண்ணற்ற புகைப்படக்கலைஞர்கள் பட்டாம் பூச்சியைப்போல உலகெங்கும் பறந்து திரிந்தார்கள். மகரந்தச் சேர்க்கை மகரந்த புகைப்படக்கலையாயிற்று. தொழில்நுட்பரீதியில்நடந்த அடுத்த மாபெரும் புரட்சி டிஜிட்டல் புரட்சியாகும். 1975இல் கோடக் நிறுவனம் LCD யை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் புகைப்படக் கருவியை உருவாக்கியது. இதுவே உலகத்தை மாற்றக்கூடிய, பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய தொழில்நுட்பப்புரட்சி என்று எவரும் உணரவில்லை. இன்று உலகமே டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது. கையடக்கக் கேமரா எவ்வாறு மாபெரும் சாத்தியங்களை உருவாக்கியதோ அதேபோல் டிஜிட்டல் தொழில்நுட்பமும் புகைப்படக் கலைஞர்கள் வேலை செய்யும் முறையையும், புகைப்படங்கள் பார்க்கும் அனுபவத்தையும், முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது டிஜிட்டல் கலை. பிலிம் ரோல், பிலிமை வைண்ட் செய்வது, கழுவுதல், என்லார்ஜர் போன்ற செயல்கள் முற்றிலும்மறைந்து விட்டன. புகைப்படச் சுருளைக் கழுவிக் கொண்டிருந்தவர்கள், பிரிண்ட் செய்து கொண்டிருந் தவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. முறையே, 1987இல்கேனான் கேமராவின் EOS தொழில்நுட்பமும், 1990இல் அடோப் போட்டோஷாப் மென்பொருளும் அறிமுகப்படுத்தப்பட்டன. புகைப்படக் கலையில் மீண்டுமொரு புரட்சியாகும்.

பிறகு 2005இல் (CMOS) சீமோஸ் தொழில்நுட்பத்துடன் கேனான் EOS 5D அறிமுகப்படுத்தப்பட்டது. டி ஜி ட் ட ல் தொழில்நுட்பங்களிலும், புகைப்படக்கலைஞர்களுக்கு மிகவும் நெருக்கமான கேமராவாகவும் இது.இதிலிருந்த வீடியோ (FULL HD) பகுதி திரைப் படங்களுக்கான சாத்தியத்தை மீண்டும் திறந்து விட்டது. வெறும் தொழில்நுட்ப அலகாக அறிமுகப்படுத்தப் பட்ட இந்த வீடியோ திரைப்படக் கேமராவின் தகுதிகளைக் கொண்டிருக்கும் என்று யாரும் நம்ப இயலவில்லை. 35MM வெள்ளித் திரையில் இக்கேமராவில் எடுக்கப்பட்ட காட்சி திரையிட்ட போது மீண்டுமொருமுறை திரைப்படப்புரட்சி தொடங்கிவிட்டது என்றே வரலாற்றில் எழுதலாம். மறுபடியும் புகைப்படக் கருவியில் இருந்து திரைப்படம் தொடங்கிவிட்டது.

RR Srinivasan

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.



Published on March 20, 2017

Share

Home » Portfolio » கட்டுரைகள் » படிமங்கள் » ஒளியே மொழி-வரலாறே மொழி

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T22:17:09+05:30

கருப்பு நிலமும், மனிதர்களும் | பாலமுருகன்

இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.

2021-09-25T21:46:30+05:30

தலைப்பற்ற கவிதை | ஒளியெழுத்து

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்