சமகால புகைப்படமும்
கவிதையும்
சிறப்பு நெடுவரிசை
கவிதைகள் முத்துராசா குமார்
புகைப்படம்
அபுல் கலாம் ஆசாத்

போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

John Berger
புகைப்படம் ©  ஜான் பெர்ஜெர் | மூலம் இணையம்

கோட் சூட்டும் புகைப்படமும், ஜான் பெர்ஜெர் 

By John Berger | Translated from English by Tulsi Swarna Lakshmi

கஸ்ட் சான்டெர் புகைப்படம் எடுக்கும் முன்பு தனது மாடல்களிடம் என்ன கூறியிருப்பார்? அதை எப்படி சொல்லியிருப்பார்? இவர்களெல்லாரும் அவர் சொன்னதை ஒரே போல் நம்பியுள்ளனரே?

ஒவ்வொருவரும் காமெராவை ஒரே முக பாவனையோடு காண்கின்றனர். இந்த பிம்பங்களில் நாம் காணும் வேறுபாடுகள், மாடல்களின் வாழ்வனுபவம் மற்றும் தனிப்பட்ட குணத்தினால் வருபவையே – மத குரு ஒரு நாளிதழ் விநியோகிப்பவரைக் காட்டிலும் வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பார் அல்லவா; ஆனாலும் இவர்கள் எல்லாருக்கும் சான்டெரின் காமெரா ஒன்று போலத் தான் தோன்றுகிறது.

அவர்களுடைய புகைப்படங்கள் வரலாற்றின்ஓ அம்சமாக பதிவு செய்யப்படும் என்று நேரிடையாக கூறியிருப்பாரோ? சுய கர்வம் மற்றும் கூச்சம் தொலைந்து, தனக்குத் தானே “நான் இவ்வாறு இருந்திருந்தேன்” என்று அன்னியமான கடந்த காலத் தொனியில் கூறும் விதமாக, இவர்கள் எல்லாரும் ஒரே போல லென்ஸினை பார்க்கும் விதமாக, சரித்திரத்தை சான்டெர் விவரித்திருப்பாரோ? நாம் அதன் உண்மையை அறிய வாய்ப்பில்லை. “இருபதாம் நூற்றாண்டின் மனிதன்” என்று தலைப்பிடப்பட்ட அவரது ஒட்டுமொத்தப் படைப்புகளுக்கு, மிகச்சிறந்த தனித்தன்மை உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டியது தான்.



1879 ஆம் ஆண்டில் தான் பிறந்த கொலோ பகுதிகளில் உள்ள அனைத்து விதமான சமூக வர்க்கம், உதிரி வர்க்கம், வேலை, தொழில், மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் முன்மாதிரி படங்களை எடுப்பது தான் அவரது முழு குறிக்கோளே. அவர் மொத்தம் 600 படங்கள் எடுக்க திட்டமிட்டிருந்தார். ஹிட்லரின் மூன்றாவது ஆட்சியினால் அது நிறைவேறாமல் நிறுத்தப்பட்டது.

August Sander
புகைப்படம் © ஆகஸ்ட் சான்டெர் | மூலம் இணையம்

சமதர்மவாதி மற்றும் நாஜி எதிர்ப்பு போராளியான அவரது மகன் எரிக், சித்திரவதை முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கு அவர் இறக்கிறார். தந்தையோ, தனது புகைப்படங்களை கிராமப்புறங்களில் பதுக்கி வைக்கிறார். அதில் இப்பொழுது மீதமுள்ளவை, அசாதாரணமான சமூக மற்றும் மானிட ஆவணங்களாகும். வேறு எந்த புகைப்படக்கலைஞரும், தன்னுடைய சொந்த நாட்டுமக்களின் புகைப்படங்களை எடுக்கும் பொழுதும், இத்தனை உறுதியான ஆவணப்படத்தன்மை இருந்ததில்லை. 1931ம் ஆண்டு வால்டர் பெஞ்சமின் சான்டெரின் படைப்புகளைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்:

“இனக்கோட்பாளர்கள் அல்லது சமூக ஆராய்ச்சியாளர்களின் ஆலோசனையில் ஒரு மாணாக்கரைப் போல படைப்பாளர் [ சான்டெர் ] இந்த மகத்தான செயலை செய்யவில்லை. மாறாக, அந்த படைப்பாளரின் சொந்த வாக்கில் கூற வேண்டுமென்றால், இந்த பிம்பங்கள் ‘சுய பார்வையின் பலனாக’ உருவாக்கப்பட்டது. ‘அனுபவத்தின் நுண்ணிய வடிவம் பொருளோடு மிக நெருங்கித் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் தத்துவமாக மாறி விடும்’ என்று சான்டெரின் படைப்புகளைக் குறித்து கெத் அவர்கள் குறிப்பிடுவது போலவே, உண்மையில் இந்த பிம்பங்கள் பாராபட்சமில்லாத, துணிவான, அதே சமயத்தில் நுண்ணிய பார்வையுடன் இருக்கின்றன. அதே போலவே கூர்மையான பார்வையாளரான டூப்பிளின் இந்த படைப்புகளின் அறிவியல் அம்சங்களை பற்றி கூறுவதும் மிகச்சரியே: ‘உறுப்புகளின் இயற்கையையும் அதன் பரிணாமத்தையும் புரிந்துகொள்ள ஒப்பீட்டு உடற்கூற்றியல் உதவும். அது போலவே இங்கே இந்த புகைப்படக்கலைஞர், ஒப்பீட்டுப் புகைப்படங்களை படைத்து, அதன் மூலமாக அறவியல் நிலைப்பாட்டினைப் பெற்று, தரத்தில் மற்ற ஆவணப் புகைப்படத்தைக் காட்டிலும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறார்’. பொருளாதாரக் காரணத்தினால் இந்த அசாதாரண படைப்புகள் பிரசுரிக்கப் படவில்லை என்றால் அது மிகவும் வருந்தத் தக்கதாகும். சான்டெரின் படைப்புகள் வெறும் புகைப்பட புத்தகம் அல்ல… கற்பித்தலின் ஏடு ஆகும்.”



பெஞ்சமினின் ஆய்ந்தறியும் மனநிலையுடன், சான்டெரின் மிகப் பிரபலமான மாலை நடனப் பார்ட்டியில் கலந்துக் கொள்ள சாலை வழி சென்று கொண்டிருக்கும் மூன்று விவசாயிகளின் புகைப்படத்தை நுட்பமாக ஆய்வு செய்ய விரும்புகிறேன். விளக்கவுரை மாஸ்டரான ஜோலாவின் பக்கங்களைப் போல, பல தகவல்கள் இந்த படத்தில் நிரம்பியிருக்கின்றன. ஆனாலும், நான் ஒன்றே ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள விரும்புகிறேன்: அவர்கள் அணிந்துள்ள கோட் மற்றும் சூட்.

காலம் 1914ம் ஆண்டு. அதிக பட்சமாக, ஐரோப்பா கிராமப்புறங்களில் கோட் சூட் அணிந்தவர்களில் இரண்டாம் தலைமுறையினராக இருக்கும் இந்த மூன்று இளைஞர்களும். இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த உடைகள் விவசாயிகள் வாங்கக் கூடிய விலையில் இருந்ததில்லை. கிராமங்களில், குறிப்பாக மேற்கு ஐரோப்பா பகுதிகளில் வாழும் தற்கால இளைஞர்கள். முறையான இருண்ட சூட்டுகள் அணிவது அரிதாகவும். ஆயினும், பெரும்பான்மையான விவசாயிகள் – மற்றும் பெரும்பான்மையான கூலி வேலைக்காரர்கள், இந்த நூற்றாண்டில் பெரும்பான்மையான சமயங்களில், மூன்று கருத்த துண்டு ஆடைகளை, விசேஷங்களின் போதும் ஞாயிற்று கிழமைகளில் மற்றும் நிதி திரட்டும் நிகழ்வுகளின் போதும் அணிந்தனர்.

நான் வாழும் கிராமத்தில் ஈமச்சடங்குகளின் போது, எனது வயதொத்த ஆண்களும் வயதானவர்களும் இன்னும் சூட் அணிவதை பார்க்கலாம். நிச்சயமாக ஃபேஷனில் பற்பல மாற்றங்கள் உள்ளன – கால் சட்டையின் மற்றும் இளப்பலின் (lapel – மேல் சட்டையின் மார்புப்புறத்தில் இருக்கும் பின் மடிப்புப் பகுதி) அகலத்திலும் சட்டைகளின் நீளத்திலும் மாற்றங்கள் உள்ளன. எனினும் அதன் ஸ்தூலத் தன்மையிலும் அது பறைசாற்றும் கருத்திலும் எந்த வித மாற்றமுமில்லை.

அதன் ஸ்தூலத் தன்மையை நாம் முதலில் பார்க்கலாம். அல்லது இன்னும் துல்லியமாகக் கூற வேண்டுமெனில், கிராமப்புற விவசாயிகள் அணியும் போது அது வெளிப்படுத்தும் உடற் கூறு தன்மையினை குறித்தும் காணலாம்.

பொதுமைப்படுத்தும்போது அனுகூலமாக இருப்பதற்காக, கிராம இசைக்குழு ஒன்றின் புகைப்படத்தையும் எடுத்துக்கொள்ளலாம். சான்டெர் இந்த குழுவின் உருவப்படத்தினை 1913ம் ஆண்டு எடுத்திருந்தார். எனினும், இந்தக் குழுவின் நடனக்கச்சேரியைப் பார்ப்பதற்கு இந்த மூன்று விவசாயிகளும் சாலை வழியே கைத்தடிகளுடன் சென்று கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம். ஒரு துண்டுக் காகிதம் கொண்டு இசைக்குழுவினரின் முகத்தை மறைத்து விட்டு ஆடை அணிந்துள்ள அவர்களது உடல்களை மட்டும் கவனியுங்கள். கற்பனையிலும் கூட, இந்த உடல்கள் நடுத்தர அல்லது அதிகார வர்க்கத்தினை சார்ந்தது என நீங்கள் நம்ப மாட்டீர்கள். இவை விவசாயிகளின் உடல்களாக? அல்லது கடின உழைப்பாளிகளின் உடல்களாக? என்ற சந்தேகம் மட்டுமே உள்ளது. வேறு ஒரு சந்தேகமும் இல்லை. அவர்களது கைகளை தொட்டால், அதன் கடினத்தன்மை மூலம் அவர்கள் உழைப்பாளிகள் என அறியலாம். ஆனால், பார்க்கும் போது அவர்களது கைகளில் அது போன்ற எந்த அறிகுறியும் இல்லையே. பின்பு எதனால் அவர்களது வகுப்பு இத்தனை வெளிப்படையாக தெரிகிறது?

அது ஃபேஷன் மற்றும் அவர்களது சூட் துணியின் தரம் சம்பந்தப்பட்டதா? நிஜ வாழ்க்கையில், நேரில் காணும் பொழுது, இது போன்ற விவரங்கள் உண்மையைப் பறைசாற்றும். ஒரு சிறிய கருப்பு வெள்ளை புகைப்படத்தில் இது போன்ற விவரங்கள் தெளிவாகத் தெரிய வாய்ப்பில்லை. சூட்டுகள், சமூக வகுப்பினை மறைக்காமல் அதனை அணிபவரின் வகுப்பினை மிகத் தெளிவாக கோடிட்டு, அழுத்தமாக பறைசாற்றுவதற்கான காரணத்தை, இந்த அசைவற்ற படம் தெளிவாக, அநேகமாக நிஜ வாழ்க்கையைக் காட்டிலும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.

August Sander
August Sander
புகைப்படம் © ஆகஸ்ட் சான்டெர் | மூலம் இணையம்

சூட்டுகள் அவர்களை உருக்குலைய செய்கிறது. அவர்களுக்கு ஏதோ தோற்றக்கோளாறு இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு பழைய ஃபேஷனாக மீண்டும் மாறும் வரை அபத்தமாகவே தோன்றும். உண்மையில் ஃபேஷனின் பொருளாதார தர்க்க சாஸ்திரம், பழைய ஃபேஷனை அபத்தமாக காண்பிப்பதில் தான் வெற்றி அடைகிறது. ஆனால், இங்கே, நாம் அது போன்ற ஓர் அபத்தத்தை காணவில்லை; மாறாக, இங்கே உடைகளை அதனை அணிந்திருக்கும் உடல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, உடைகள் அபத்தமல்லாததாகவும் இயல்பற்றதாகவும் தோன்றுகிறது.

அதாவது, இந்த இசைக்குழுவினர் ஒருங்கிணைக்கப்படாத, கோணலான கால்களுடன், பீப்பாய் மார்புடன், , முறுக்கப்பட்டு அல்லது ஒழுங்கற்று இருப்பது போல் தோன்றுகின்றனர். வலது பக்கத்தில் உள்ள வயலின் வாசிப்பவர் ஒரு குள்ளனைப் போல ஆக்கப்பட்டுள்ளார். இவர்களது இந்த இயல்பில்லாத தன்மையில் தீவிரம் இல்லை. அது பரிதாபத்தையும் தூண்டவில்லை. ஆனால் இயற்கையான உடலின் கண்ணியத்தை குறைத்துக் காண்பிக்கின்றன. நாம் கரடு முரடான, விகாரமான, முரட்டு உடல்களை காண்கிறோம். அவ்வளவு தான். குணமடையும் தன்மையில்லாத நிரந்தர நிலையாக அது தோன்றுகிறது.

தற்பொழுது இதே ஆராய்ச்சியை மாற்றி செய்யவும். இசைக்குழுவினரின் உடல்களை மறைத்து விட்டு அவர்களது முகத்தை மட்டும் காணுங்கள். அவை நாம் கிராமப்புறங்களில் காணும் முகங்கள். அவர்களை வழக்குரைஞராகவோ, நிர்வாக அதிகாரிகளாகவோ யாரும் எண்ணி விட சாத்தியமில்லை. அவர்கள் கிராமப்புறத்தை சார்ந்த, இசையின் மீது ஆர்வம் உள்ள, ஒருவித சுய மரியாதையுடன் இசையமைக்கும் ஐந்து ஆண்கள். அவர்கள் முகத்தை காணும்போதே அவர்கள் உடல்களை எவ்வாறு இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்ய முடியும். நாம் கற்பனை செய்தது, சில நிமிடங்களுக்கு முன்பு நாம் கண்டதைக் காட்டிலும் வேறானதாகவே இருக்கும். கற்பனையில் நாம் அவர்களை, அவர்களது பெற்றோர்கள் எவ்வாறு மனக்கண்ணில் கண்டு நினைவு கூர்வார்களோ அவ்வாறேக் காண்போம். அவர்களுக்குள்ள இயல்பான கௌரவத்தை ஒத்துக் கொள்ளும் வகையிலே அது இருக்கும்.



நான் சொல்லும் கருத்தை வலியுறுத்த, நாம் இன்னுமொரு புகைப்படத்தைக் காணலாம். இதில், தைக்கப்பட்ட உடைகள், அதனை அணிபவரின் சுய அடையாளத்தை உருக்குலைக்காமல் பாதுகாப்பதன் மூலம், அவர்களின் இயற்கையான அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துவதைப் பார்க்கலாம். வேண்டுமென்றே, எளிதில் நகையாடப்படக்கூடிய, பழைய ஃபேஷன் போல் தோன்றும் சான்டெரின் படம் ஒன்றை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்: நான்கு புராடெஸ்டான்ட் (Protestant) சமயப்பரப்புரையாளர்களின் புகைப்படமே அது.

ஆடம்பரமாக இருந்த போதிலும், அதன் முகத்தை மறைத்து நாம் சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இங்கே சூட்கள் அதனை அணிந்திருப்பவரின் இருத்தலினை உறுதிப்படுத்தி, அதிகாரத்தினை மேலும் அதிகரித்துக் காண்பிக்கின்றது. அவர்களது முகம் மற்றும் உடைகளில் மறைந்திருக்கும் உடல்களின் வாழ்க்கைச் சரித்திரம், இரண்டும் ஒரே தகவலை அளிக்குமாறு இருக்கிறது. அவர்களது உடை. சூட், அனுபவங்கள், சமூக அமைப்பு மற்றும் செயல்பாடு இவை அனைத்துமே ஒரே நேர் கோட்டில் ஒத்து நிற்கிறது.

மீண்டும் நடனத்தைக் காண சாலை வழி சென்று கொண்டிருக்கும் அந்த மூவரைக் காணுங்கள். அவர்களது கைகள் மிகவும் பெரிதாகவும், உடல்கள் மிகவும் மெலிதாகவும், கால்கள் சிறியதாகவும் தெரிகிறது. (அவர்கள் கைத்தடியை மாடு ஓட்டுவது போல் பிடித்திருக்கின்றனர்). நாம் முகத்தை மறைத்து இசைக்குழுவினரோடு செய்த அதே சோதனையை செய்தால் அதன் விளைவும் ஒன்று போலவே இருக்கும். அவர்களுக்கு பொருத்தமுள்ளது போல் தொப்பியை மட்டுமே அணிய முடிகின்றது.

இது நம்மை எங்கே கொண்டு செல்கிறது? விவசாயிகளுக்கு நல்ல சூட்டுகள் வாங்க முடியாது… அவர்களால் அதனை ஒழுங்காக அணிய முடியாது என்பதுவா? இல்லை. இல்லவே இல்லை. சிறிய உதாரணமானாலும், கிராம்சி கூறிய வர்க்க மேலாதிக்கத்தின் காட்சி ரூப உதாரணம் இது (ஒரு வேளை, தற்போது நமக்கு கிடைக்க கூடிய தகவல்களில் இது மிகவும் சிறந்த காட்சி ரூப வெளிப்பாடு எனலாம்). இதில் உள்ள முரண்பாடுகளை நாம் நுணுக்கமாகக் காணலாம்.

பெரும்பான்மையான விவசாயிகள், வறுமை இல்லையெனில், உறுதியான உடலுடன், நல்ல முஷ்டியுடன் இருப்பர். அவர்கள் செய்யும் பல தரமான கடினமான வேலைகளே இதற்குக் காரணம். அவர்களது உடலமைப்பின் அம்சங்களை விவரிப்பது மிகச் சுலபம் – சிறு வயது முதலே கடின வேலைகளில் ஈடுபட்டதனால் பரந்த கைகள், அதிக சுமைகள் தூக்கி பழகிய காரணத்தினால் உடலைக்காட்டிலும் பரந்த தோள்கள் – இது போல பலப் பல. இதில் மாறுபாடுகளும் விதிவிலக்குகளும் உண்டு. ஆயினும், பெரும்பான்மையான விவசாயிகள், ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி, ஒரு வித உடல் பாங்கு, மற்றும் சீரிய லயத்தைப் (ரிதம்) பெற்றுள்ளனர்.

August Sander
புகைப்படம் © ஆகஸ்ட் சான்டெர் | மூலம் இணையம்

ஒரு நாளில் அவர்கள் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை செய்யத் தேவைப்படும் சக்தியினோடு தொடர்பு உள்ள இந்த லயம், அவர்களது உடல் அசைவு மற்றும் நிற்கும் தோரணையில் பிரதிபலிக்கும். அது ஒரு நீட்டிவைக்கப்பட்ட கடுமையான லயம். அது மென்மையானதாக இருக்க வேண்டும் என்றில்லை. மின் சக்தி இல்லாது செய்யப்படும் பழங்கால செயல்களான அறுக்கும் பணிகள் இந்த லயத்தை மேலும் மிகைப்படுத்தும். விவசாயிகள் குதிரை ஓட்டும் விதத்தில் ஒரு தனித்துவம் உண்டு. அவர்கள் நடப்பதிலும் கூட.. பூமியினை தங்களது நடையினால் சோதித்துப் பார்ப்பது போன்று. அது மட்டுமல்ல, விவசாயிகள் பிரத்யேகமான உடல் அமைப்பு கொண்டவர்கள்: அவர்களது செயற்பாங்கால் இது வரையறுக்கப்படுகிறது, கடின முயற்சி அவர்களது இயல்பாக இருப்பதே இதற்கு காரணம். உழைப்பே அவர்களது இயல்பு நிலை.

நாம் இப்போது அறியப்படுகின்ற வகையிலான சூட்டுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பாவில் ஆளும் வர்க்கத்தினரின் உடையாக வடிவமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட பெயரிடப்படாத சீருடையைப் போல, உடல் உழைப்பற்ற ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கத்தினை உயர்த்திக் காண்பிக்கும் முதல் ஆடை இது தான். நிர்வாகி மற்றும் மாநாட்டு மேசையின் சக்தி. அடிப்படையில் சூட்டுகள், பேசும் போதும், பலனாகாத கணக்குகளை கூட்டும் போதும் ஏற்படும் சிறிய சிறிய அசைவுகளை சுலபமாக்க உருவாக்கப்பட்டதாகும். (இதற்கு முன்பிருந்த ஆளும் வர்க்க உடைகள் சவாரி செய்ய, வேட்டையாட, ஆடிப்பாட, சண்டையிட வடிவமைக்கப்பட்டவை).



ஆங்கிலேயக் கோமான்கள் தான், பலப்பல அசௌகரியங்களையும் வரையறைகளையும் கொண்ட இந்த புதிய உடை வழக்கத்தினைக் கொண்டு வந்தது. இது தீவிரமான வேலைகளுக்கு தோதுவான உடையல்ல. அசைவுகள் கூடினால், மடிப்பு களைந்து, சுருக்கு விழுந்து பழையது போல் தோற்றம் தரும். “குதிரைகளுக்கு கஷ்டம்; ஆண்களுக்கு வியர்வை; பெண்களுக்கு பளபளப்பு”. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், சரியாக சொல்ல வேண்டுமென்றால் இரண்டாம் உலகப் போரின் முடிவிற்கு பின்பு, சூட்டுகள் வெகுஜன உற்பத்தியா செய்யப்பட்டு நகர்ப்புற மற்றும் கிராமப்புற அங்காடிகளில் விற்கப்பட்டன.

அதன் ஸ்தூல முரண்பாடு மிகவும் வெளிப்படையகும். செயல்களில் பழக்கப்பட்ட, நீண்டிருக்கும் கடுமையான அசைவுகளை கொண்டிருக்கும் உடல்கள்; உடல் உழைப்பில்லாத, சோம்பேறி வாழ்வை, வெவ்வேறு உடலமைப்புகளை உயர்த்திக் காண்பிக்கும் உடைகள்… விவசாயிகள் அவர்களது பாரம்பரிய ஆடைகளுக்கு திரும்ப வேண்டும் எனும் தர்க்கத்தை அது முன் வைக்கவில்லை. அந்த வாதத்தை கடைசி வரை எதிர்ப்பேன். ஏனெனில், பழங்கால ஆடை முறை என்பது, காலம் காலமாக முதலாளித்துவ வர்க்கம் விவசாய வர்க்கத்தினரின் மேல் திணித்த ஆதிக்கம். அவ்வாறு பழைய முறைக்கு திரும்புவது, ஆதிக்கத் தன்மையை மறக்க, மறைக்கச் செய்யும், தப்பிக்கும் (escapist) மனப்பான்மை ஆகும். அது மட்டுமல்ல, மூலை முடுக்கெல்லாம் வாணிகத்தின் தாக்கம் உள்ள இன்றைய நவீன உலகில், அது போன்ற கொள்கைகள் காலம் கடந்தவை ஆகும்.

ஆயினும் பழங்கால உடைகள், எவ்வாறு ஒரு விவசாயியின் வேலை மட்டும் சம்பிரதாய தனித்தன்மையினையும் தேவைகளையும் கணக்கில் கொண்டிருந்தது என்பதை நாம் கவனிக்கலாம். அவை பொதுவாகத் தளர்வாகவும், இடுப்புப் பகுதியில் இறுக்கமாகவும் இருக்கும். இது இறுக்கமாக தைக்கப்பட்ட உடைகளுக்கு நேர்மாறாக, அவர்களது அசைவுகளை எளிதாக்கும்…. மாதிரி உடல் வடிவத்தினை மனதில் கொண்டு, நேர்த்தியாக தைக்கப்பட்ட உடைகளோ, பெரிய அசைவுகள் ஏதுமில்லாத உடல்களிலிருந்து தொங்கவிடப்பட்டது போலிருக்கும்.

எனினும் யாரும் விவசாயிகளை சூட்டுகளை வாங்கச் சொல்லவில்லை. மேலும், நடன விருந்திற்குச் சென்று கொண்டிருக்கும் மூவரும் அவர்களது உடையினால் பெருமிதம் கொள்கின்றனர். அவர்களும் அதனை ஒரு வித அலங்காரத் தோரணையுடன் அணிகின்றனர். அதனால் தான் “சூட்டுகள்” மேலாதிக்கத்தினை எளிதாக புரிந்துக்கொள்ளக்கூடிய மிகச்சிறந்த உதாரணமாகிறது.



கிராமத்தார் – மற்றும் ஒரு வித்தியாசமான வகையில் நகர்ப்புற வேலையாட்கள் – சூட்டுகள் அணிய வற்புறுத்தப்பட்டுள்ளனர். விளம்பரங்களின் மூலமாக. புகைப்படப் பிம்பங்களின் மூலமாக. நவீன வெகுஜன ஊடகங்களால். விற்பனையாளர்களால். விதம் விதமான டூரிஸ்டுகளை காண்பதன் மூலமாக. அரசியல் வளர்ச்சியினால் மற்றும் மாநில மத்திய அரசாங்கத்தால். உதாரணத்திற்காக, பாரிசில் 1900ம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் உலகக்கண்காட்சியின் போது, பிரான்ஸின் எல்லா மேயர்களும் முதன் முதலாக பாரிசில் நடைபெற்ற பெருவிருந்திற்கு அழைக்கப்பெற்றனர். அதில் பெரும்பான்மையானோர் கிராம நகராட்சி மன்றங்களின் தலைவர்களாக இருந்த விவசாய மேயர்களாகும். 30000 ற்கும் மேலானோர் பங்கெடுத்திருந்தனர். அதில் பெரும்பான்மையானோர் சூட்டுகள் அணிந்திருந்தனர்.

விவசாயிகள் அப்பாவியாகவும் மிகவும் எளிமையான காரணங்களினாலும் சூட்டுகள் அணியத் துவங்கினர். உழைக்கும் வர்க்கத்தினர் – தங்களை ஆளும் மேல் வர்க்கத்தினரின் தரமான சூட்டுகளை, தங்களுடைய சொந்த அளவுகோலாக ஏற்றுக்கொள்ளத் துவங்கினார். இங்கே அந்த அளவுகோலானது, புதுப்பாணி (chic) மற்றும் நேர்த்தியாகத் தைக்கப்பட்ட உடையாக இருக்கிறது. அவர்களது தினசரி வாழ்வனுபவங்கள் மற்றும் பரம்பரை உரிமையோடு எவ்வித சம்பந்தமுமில்லாத இந்த கோட் சூட்டை தங்களது அளவுகோலாக அவர்கள் ஏற்றுக்கொண்டு, அதனோடு ஒத்து போவதென்பது, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு எப்பொழுதும் கீழ்த்தரமாக, விகாரமாக, அருவருப்பான தற்காப்பு உணர்வோடு இருப்பது போலாகும். இது வகுப்புவாதத்திற்கு இணங்குவது போல் ஆகும்.

இருப்பினும், அநேகமாக, இந்த மூவரும் பார்ட்டி நடக்குமிடத்திற்கு சென்றடைந்து, இரண்டு அல்லது மூன்று பெக் பீர் அருந்தி விட்டு, அவரவர்க்கு விருப்பமான பெண்ணினை கண்டுபிடித்த பின்பு (பெண்களின் உடைகளில் பெரிய மாற்றங்கள் இல்லை), தங்களது மேல் கோட்டுகளை கழற்றி எறிந்து விட்டு, டையினை தூர வீசி விட்டு, தொப்பி மட்டும் அணிந்து கொண்டு அன்றிரவு முழுவதும், மறு நாள் காலை வேலை துவங்கும் வரைக்கும் ஆடியிருந்திருப்பர் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

5 நவம்பர் 1926 பிறந்த திரு. ஜான் பெர்ஜெர் அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்ற கலை விமர்சகர், எழுத்தாளர் மற்றும் கவிஞர் ஆகும். அவரது ‘பார்வையின் பரிமாணங்கள்’ (Ways of seeing’) என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு மிகவும் பாராட்டப்பட்டதோடு அல்லாமல், பல்கலைக்கழக பாடப்புத்தகமாக விளங்குகிறது. இவர் இந்த வருடம் (2017) ஜனவரி மாதம் இரண்டாம் நாளில் இயற்கை எய்தினார்.

Tulsi Swarna Lakshmi

துளசி ஸ்வர்ண லட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காட்டில் பிறந்தவர்சென்னையில் உள்ள  சிவ நாடார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றுள்ளார்சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இவர் ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்கா நாடுகளில் பணியாற்றியுள்ளார்சுனாமி மற்றும் தானே புயலின் போது இந்திய மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார்.



Published on April 5, 2017

Share

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T22:17:09+05:30

கருப்பு நிலமும், மனிதர்களும் | பாலமுருகன்

இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.

2021-09-25T21:46:30+05:30

தலைப்பற்ற கவிதை | ஒளியெழுத்து

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T22:02:48+05:30

நேர்கோட்டின் வளைவுகள்அபுல் கலாம் ஆசாத்தின் சங்ககால புகாரின் சமகாலங்கள்

ஒரு கைதேர்ந்த சிற்பி, சிற்பத்தின் எல்லா பாகங்களையும் வடித்த பின்பு, ஒரு மௌன நிலையில் அதன் கண்களை திறப்பார். அப்பொழுது, அந்த சிற்பம் உயிர் பெரும். அபுலுக்கும், புகைப்படம் எடுக்கப்பட்டவருக்குமிடையே நடக்கும் உரையாடல் தான் அவரது புகைப்படங்களின் உயிரோட்டம். இவை, உலக நாடுகளோடு கலாச்சார வாழ்வியல், வர்த்தக பரிமாற்றங்களில் சிறப்புப்பெற்ற சங்கக்கால புகாரின் சுவடுகளைத் தேடவில்லை. அந்த பரிமாற்றங்கள் விட்டுச்சென்றுள்ள ஒன்றுபட்ட கலாச்சாரம் மற்றும் பன்முக வாழ்வுமுறையின் குறியீடுகளை அடையாளம் காண்கிறது. சாதாரண மனிதர்களின் சரித்திரத்தை புகாரின் ஆண்கள் மூலமாக சொல்லும் காலத்தால் அழியாத இந்தப்படைப்பு, வரும் காலத்தில் புகார், உலக கலாச்சார வரைபடத்தில் இடம்பெற, ஒரு கலைஞன் விட்டுச்செல்லும் விதைகள்.

2021-09-25T22:18:16+05:30

தென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்

காலவரிசைப் படி எல்லாவற்றையும் ஆராயும் போது, கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் தான் தமிழகத்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்துள்ளார் என்று அறிய முடிகிறது. இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர் மாணவர்களுடன் சென்று, தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்தனர்.

2021-09-25T22:18:33+05:30

துயரத்தின் பிம்பங்கள்

போர் புகைப்படங்களின் முரண்பாடு, இதன் மூலம் அம்பலமாகிறது. அது “அனுசரணையை” ஏற்படுத்துவதற்காக பிரசரிக்கப்படுகிறது என பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. அதன் மிகவும் தீவிரமான உதாரணங்கள் – மெக்கலினின் பெரும்பான்மையான புகைப்படங்களில் உள்ளது போல – அதிகப்பட்சமான அனுசரணையை ஏற்படுத்த மிகவும் துயரமான தருணத்தை காண்பிக்கும். அத்தகைய தருணங்கள், புகைப்படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், சாதாரண தருணங்களிலிருந்து தொடர்பற்ற நிலையிலிருக்கும். அவை தாமாகவே தனித்து நிற்கும்.