Project Description

ஒளியெழுத்து புகைப்படமும் கவிதையும்

Black Mother | Story of Love, Desire, and Memory © Abul Kalam Azad 1999 – 2000

தவ

ஈரமழை பழமையாகிவிட்டது.
ஈக்கிமாரி பொழியும் காலநிலையிது.
ஈக்கியின் காயங்களை ஆத்தியபடி அன்றாடத்தில் ஓடுகின்றனர்.
கட்டியக் கால்களுடன்
நுரை தள்ளும் லாடக்காளையாக
தலை உயர்த்துகிறேன்.
கருவிழியில் அடிக்கிறது ஈக்கி.
என்னுடலில் பாயும் ஈக்கிகளை
எருக்கஞ்செடி பாலடித்து
நெம்பியெறிகிறாள் வண்ணாத்தி.
நோய்ப்படுக்கையினால்
வண்ணாத்தியின்
பின்னிடுப்புப் புண்ணில்
தேனீக்களாக ஆய்கின்றன ஈக்கள்.
தொண்டைக்குள் துடித்தக் குருவிக்குஞ்சு சட்டெனப் பறக்காததால்
அரளிச்சாறு நிரப்பியப் பொனலை
அவளது வாயிற்குள் நுழைத்த
பிள்ளைகளையெண்ணி
தானெழுப்பிய வீட்டின்
கருங்கல் குத்துக்கால்களை
கூரை சரியப் பிடுங்கியெடுத்து மறைவானவள்.
குருட்டழுக்குத் துணிகளை முடிச்சிகளிட்டு
குழந்தையிழுக்கும்
வாகனப் பொம்மையாக
எனையிழுத்துப் போகிறாள்.
முதல்முறை விரைவாய்த் தவக்கிறேன்.
இளவயது வைகையின்
நாணல்காட்டுக்குள்
ஈக்கிகள் அண்டாது
எனைப் பதனமாக வைத்து
தொடைவரை முக்கும் மணலுக்குள்
சாரதிச்சேலையை ஏத்திச்சுருட்டி
முண்டும் கொறவையை
பிடித்து வருகிறாள்.
கல்லுப்பேறிய
மீன்மண்டையை கொறித்தபடி குத்துக்கால்களை
தாயக்கட்டைகளாக்கினாள்.
பிள்ளைகளையும்
காலத்தையும் சபித்தபடி
குத்துக்கால்களைத் தூக்கி உருட்டுகிறாள்.
சபிக்க சபிக்க
தாயம்
ஐந்து
ஆறு
பன்னிரெண்டு மட்டுமே விழுகிறது.

தமிழ்  ஒளியெழுத்து

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். 12 ஜனவரி 2021 அன்று வெளியிடப்பட்டது. பிற கவிதைகளை வாசிக்க. வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் நூல்கள் ஆசிரியர் மற்றும் / அல்லது ஃபோட்டோமெயிலின் பதிப்புரிமைக்கு உட்பட்டவை.

அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மற்றொரு பரிணாமத்தில் எடுத்துரைக்க முயற்சிக்கின்றன.

முத்துராசா குமார், மதுரை மாவட்டம் சோழவந்தான் – தென்கரை சொந்த ஊர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை, சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A.Mphil பயின்றுள்ளார். ஆனந்தவிகடனில் மாணவப் பத்திரிகையாளரகப் பணிபுரிந்துள்ளார். முத்துராசா குமாரின் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு The Wire, The News Minute, Malayala Manorama முதலான செய்தித்தளங்களில் வெளிவந்திருக்கின்றன. ஊடகத்துறையில் வழங்கப்படும் ‘LAADLI’ விருது இவரது கட்டுரைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.’செதில் பய’ ‘டிஜிட்டல் மூஞ்சி’ போன்ற சுயாதீன இசை ஆல்பங்களை எழுதி இயக்கியுள்ளார். அச்சு மற்றும் இணைய இதழ்களில் கட்டுரைகளும், கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார். தற்போது சுயாதீனப் பத்திரிகையாளராகவும், திரைத்துறையிலும் இயங்கி வருகிறார்.