படிமங்கள் நிழல்கள் பிரதிபலிப்புகள்
சிறப்பு நெடுவரிசை
போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

பகலும் பனியும் – மேகாலயாவின் கல் மனிதர்கள் © ஆர். ஆர். சீனிவாசன் 2016
புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?
அல்லது ஒளியையா?
ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.
குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….
புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…
“நாம் அன்றாடம் வாழ்வதற்குப் புதிய படிமங்கள் தேவை”
– வெர்னர் ஹெர்சாக்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலம் வானத்திற்கு அருகிலே இருக்கிறது. அல்லது வானம் வடகிழக்கைத் தொட்டுப் படருகிறது.. அதனால் மேகங்களின் லயம் ஊருக்குள்ளே பரவுகிறது. பயணங்களை வாழ்க்கையாகக் கொண்டுள்ளவர்களுக்கு மேகாலயாவின் மலைப்பாதைகள் முதல் நினைவாகும். பனி படர்ந்த பாதையில் பயணிக்கும்போது, வானத்தையும் பூமியையும் பிரிப்பது பனி என்று தோன்றியது, அதாவது பனி பூமியையும் வானத்தையும் இணைக்கிறது.
ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சிக்கு பயணம் செய்தோம். வழியெங்கும் குறிஞ்சியின் அற்புதங்கள், வெயிலில் ஆரம்பித்த பயணம் இடையில் பனியும் சேர்ந்து விட்டது. பனி இறங்கியதும் உலகம் மாறுகிறது… மாயலோகம் உருவாகிறது. நீண்ட தூரம் பனியில் பயணம், குழந்தைகளின் அனிமேசன் விளையாட்டுப் போல எங்களுடைய கார் வழுக்கிக் கொண்டு பனிக்குள்ளாக மறைந்து வெளியேறுகிறது. திடீரென சாலையின் இருபுறமும் விநோதமான உடைகளுடன் மனிதர்கள் தென்பட்டனர்… கையில் ஆயுதங்களுடன், அதிக சத்தங்களுடன், நரகமா, சொர்க்கமா தெரியவில்லையே??… வண்டியை விட்டு வெளியே வந்து வெகுநேரம் கழித்துதான் தெரிந்தது, மக்கள் மலையை உடைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று.



பகலும் பனியும் – மேகாலயாவின் கல் மனிதர்கள் © ஆர். ஆர். சீனிவாசன் 2016
மேகாலயா இயற்கையின் சுரங்கம்… எனவே எண்ணற்ற கனிமங்களை அரசும் பன்னாட்டு முதலாளிகளும் நாடெங்கும் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். 15 க்கும் அதிகமான அரிய கனிமங்கள் மேகாலயாவில் தோண்டி எடுக்கப் படுகிறது. தொழிலாளர்கள் வேலை செய்வது, மலைகள் தோண்டப்பட்ட கோரக்காட்சிகள், இயந்திரங்கள், பெரும் லாரிகள், கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பங்கள் என படிமங்கள் விரிந்து கொண்டே போகிறது. பழக்கமான படிமங்கள் தான்…. ஆனால் இவை யாவும் பனிப்பொழிவில் நடைபெறும்போதுதான் அதன் பொருளும், படிமங்களின் சாயைகளும் மாறுகின்றன… மெல்லக் கவிதையாக, தியானமாக மாறுகிறது…
எல்லாமே பனியில் உறைந்து போன செயல்பாடுகள். காலமற்ற சலனம்..
நாங்கள் ஓரு நாளுக்குள் சென்று பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருந்தன. எனினும், இப்படிமங்கள் என்னை உறையச் செய்தன. இறங்கி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன்…. அப்போதுதான் புரிந்தது ஒரு புகைப்படம் எடுப்பதற்குத் தேவையான வெளிச்சம் கூட இல்லை. மேலும் போகஸ் (focus) செய்வது கூட மிகவும் கடினமாக இருந்தது…. முழுமையாக ஆட்டோ மோடைப் (auto mode) பயன் படுத்திதான் சில புகைப்படங்களை எடுக்க முடிந்தது. வாழ்க டிஜிட்டல் தொழில்நுட்பம்!!! அனலாக் கேமராவில் இப்புகைப்படங்களுக்கான வாய்ப்பேயில்லை….
கல் உடைக்கும் தொழிலாளர்களின் நிலை, கல் உடைப்பதினால் ஏற்படும் இயற்கை அழிவு, மலைகள் பிளக்கப் படும் சூழியல் தாக்கம், இவை யாவும் இப்புகைப்படங்களில் இருந்தாலும் இவை எல்லாவற்றையும் சமனப்படுத்தி வேறு ஒரு அரூபத் தளத்திற்கு அப்போதிருந்த பனிப்பொழிவு எடுத்து சென்றது. புகைப்படங்களை எடுப்பதைக் காட்டிலும் கற்குவியல்கள் பனியில் கரையும் பொழுது முற்றிலும் புதிய அனுபவமாக, நம்முடைய ஒவ்வொரு திசுக்களையும் புதுப்பிக்கும் ஆற்றலை அப்பனி தந்தது.




பகலும் பனியும் – மேகாலயாவின் கல் மனிதர்கள் © ஆர். ஆர். சீனிவாசன் 2016
இவை யாவும் ஓர் இடத்தில் மட்டும் நடக்க வில்லை. சிரபுஞ்சி செல்லும் வழியெல்லாம் மலைகள் நொறுக்கப்படுகிறது. பெரும் தொழிலாக மாறிவிட்டது. வழக்கம் போல் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வெகு உயரமான மலைகளில் யார் யார் எங்கு நிற்கிறோம் என்பது கூட தெரியாமல் கல்லுடைக்கும் மனிதர்கள். பனி விலகினாலேயே நாம் நிற்கும் உயரத்தையும், அருகில் நிற்பவரைப் பார்க்க முடியும். மரணங்களும் பனிக்குப் பின்னாலேயே!
பனி கேமராவின் ஒரு பில்டரைப் போல இருந்தது. துயரங்கள் அங்கு கவித்துவ அழகாக மாறின. தொழிலாளர்கள் வானத்தில் இருந்து வந்திறங்கிய தூதுவர்களைப் போல, பனி கலைந்தால் உடன் இவை யாவும் கலைந்தன, வெயிலும் பனியும் ஒரு சேர இப்படிமங்களை வாரி வழங்கின… நானும் வெயிலிலும், பனியுலும் கரைந்து மறைந்து போனேன்.

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.
Published on February 13, 2017