ஆர்.ஆர்.சீனிவாசன்

{ புகைப்படம் என்பது…..

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?
அல்லது ஒளியையா?
ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…  }

‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’

சென்னையில் ரகுராய்

 © கேப்டன் சுரேஷ் ஷர்மா

‘‘நமது வாழ்க்கை ஒரு கணினியைப் போல திட்டமிடப்பட்டுள்ளது. நாம் என்ன படிக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், என்ன மாதிரியாக பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என  மற்றவர்கள் வாழும் பழகிப்போன வாழ்க்கையை நாம் வாழ்கிறோம். இந்தக் கட்டத்தினுள் இருந்து தப்பித்து யார் புதிய வழியைத் தேடுகிறார்களோ, அவர்கள் மாபெரும் புகைப்படக் கலைஞர்களாகிறார்கள், மற்றவர்கள் வெறுமனே பதிவு செய்கிறார்கள்’’ என்று தன்னுடைய புகைப்படப் படிமங்களின் அடிப்படைகளை விளக்கினார் ரகுராய். சென்னையில் நடைபெற்ற ‘‘மெட்ராஸ் புகைப்பட சங்கத்தின்’’ 150வது ஆண்டு விழா புகைப்படக் கண்காட்சியின் நிறைவுநாளையொட்டி  ரகுராய் புகைப்படக் கலைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

பத்மஸ்ரீ ரகுராய் இந்தியாவின் படிமங்களை அதன் ஆழத்துடனும், வசீகரத்துடனும் பிரமிக்கத்தக்க காட்சி மொழியில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். அன்னை தெரசாவின் அர்ப்பணிப்பு, போபாலில் விஷவாயுவின் கொடூரத் தாக்குதல், தாஜ்மஹாலின் நிழல்களும், பிரதிபலிப்புகளும், கல்கத்தாவின் நடைபாதைகள், டெல்லியின் ஒழுங்கற்ற தெருக்களின் நேர்த்தியான அழகியல், இந்திராகாந்தியின் அதிகாரமும், அமைதியும், அலகாபாத் சாதுக்களின் கும்பமேளா, சீக்கியர்களின் முகங்கள், ஏன் நமது ஊர் ஏர்வாடியும் உண்டு. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்தின் உயிர்ப்பு மிக்க தெருக்கள், சாதாரண மக்களின் அசாதாரணமான முகங்கள், தெருக்காட்சிகளை நவீன ஓவியத்தைப் போல அவர் கோர்த்த விதம், அன்றாட வாழ்க்கையை அவர் கண்கள் இந்நூற்றாண்டின் அதிசயத்தக்க காட்சிப்படிமங்களாக மாற்றியது அவர் கையில் வைத்திருந்த விலையுயர்ந்த புகைப்படக்கருவி அல்ல. வாழ்க்கையைப் பற்றி அவர் கொண்ட பார்வையும், அப்பார்வை அவருக்குக் கொடுத்த தாக்கமும் தான்.

‘‘இந்தியாவில் இருந்து இதுவரை நீங்கள் ஒருவர் மட்டுமே உலகின் பிரசித்தி பெற்ற புகைப்பட நிறுவனமான ‘‘மேக்னம்’’ குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்?’’ என்ற இளம் புகைப்படக்  கலைஞரின் கேள்விக்கு, ‘‘நீங்கள் எல்லோரும் விருது பெறும் புகைப்படங்களைப் பார்த்து புகைப்படம் எடுக்கிறீர்கள்… வாழ்க்கையை நேரடியாக நீங்கள் பார்ப்பது இல்லை. ஏற்கனவே ஒருவர் பார்த்த பிரதியை நீங்கள் பிரதி செய்கிறீர்கள், அதனால் உங்களிடம், உங்கள் வாழ்க்கையின் தனித்தன்மை இல்லை. வாழ்க்கையை தனித்து வாழ்வதற்கும், படிமங்களை உருவாக்குவதற்கும் தைரியமும் துணிச்சலும் தேவை என்றார்.’’

மெட்ராஸ் புகைப்படச்சங்கத்தின் நிறைவு விழா வெற்றி பெற்ற புகைப்படக் கலைஞர்களுக்கு பரிசளித்து தன்னுடைய புகைப்படங்களின் தொகுதி காட்சியைப் பார்வையாளர்களுக்குக் காண்பித்து ஒவ்வொரு புகைப்படமாக தான் எடுத்த பின்னணியை விளக்கினார். தான் எடுத்த ‘கழுதைக்குட்டி’ முதல் படத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட புகைப்படங்களைக் காண்பித்து விளக்கினார்.

அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்துப் பிரமித்துப் போன பார்வையாளர் ஒருவர்  ‘‘உங்கள் காட்சி ஒருங்கிணைப்பு நம்பும் படியாக இல்லை. எல்லா மனிதர்களும் செயல்களும் அதிசயத்தக்கதாகவே உள்ளதே’’ என்றார்.

ரகுராய் ‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ என்றார். ஒவ்வொரு புகைப்படத்திலும் ஏதாவது அற்புதங்கள் நிகழவேண்டும். அந்த அற்புதங்கள் புகைப்படத்தை மேலும் செழுமையாக்குகின்றன. கடுமையான அர்ப்பணிப்பும், வெறியும், நேர்மையும் கொண்டு காத்திருக்கும் போது, இயற்கை உங்கள் மேல் கருணை கொண்டு சில சம்பவங்களை காட்சிப் படிமத்தில் நிகழ்த்தும். தான் அதனை நம்பவுதாகவும் குறிப்பிட்டார்.

ரகுராய் சொல்வது முற்றிலும் உண்மை. ‘அந்த்ரே கெர்த்தஸ்’ என்னும் ஹங்கேரிய புகைப்படக்கலைஞர் தன்னிடம் கேமரா இல்லாத போது படிக்கட்டில் ஒரு புறா பறப்பதைப் பார்த்தார். கேமராவுடன் மீண்டும் அப்புறாவுக்கு இருபது வருடங்களுக்கும் மேலாகக் காத்திருந்து எடுத்தார். புகைப்பட வரலாறு இது.

Photographic society of Chennai‘‘மெட்ராஸ் புகைப்படச் சங்கம் (PSM, Photographic Society of Madras)”1857ல் முனைவர் அலெக்ஸாண்டர் ஹண்டர் என்னும் ஆங்கிலேயரால் துவக்கப்பட்டது. (முதல் பெயர் மெட்ராஸ் அமெச்சூர்போட்டோகிராபர்கள் சொசைட்டி MAPS என்று அழைக்கப்பட்டது). வால்டர் எலியட் இதன் முதன் தலைவராக இருந்து சென்னையில் புகைப்படச் சங்கத்தை வளர்த்தெடுத்தார். இது உலகின் மிகப் பழமையான புகைப்படச் சங்கமாகும். இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர்  மாணவர்களுடன் சென்று தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்துயும் புகைப்படங்களாக எடுத்தனர். இன்று 160வது ஆண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடி வரும் அரசு கவின்கலைக் கல்லூரியின் முதல்வர் ஓவியர் சந்துரு இப்புகைப்படங்களை விரைவில் புத்தகமாகவும், காட்சியாக வைக்கவும் முயற்சிகள் எடுத்து வருகிறார். 150 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த புகைப்படக்கலை மக்களுக்கானது என்பதை உணர்ந்து, சென்னை ஓவியக் கல்லூரியின் இன்னொரு கிளையாக கல்லூரிக்கு வெளியே பொதுமக்கள் புகைப்படக்கலை பற்றி  விவாதிக்கவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், புகைப்படக்கலையின் அறிவியல் வளர்ச்சிகளைப் புரிந்து கொள்ளவும், பயணம் செய்து புகைப்படங்கள் எடுக்கவும் 1857ல் உருவாக்கப்பட்டதே மெட்ராஸ் புகைப்படச் சங்கம். அன்றிருந்து இன்று வரை நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளையும், புகைப்படக்கலைஞர்களையும் உருவாக்கியுள்ளது PSM.

சில ஆண்டுகள் மிதமாக செயல்பட்ட போட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் இச்சங்கம் மீண்டும் 150வது ஆண்டு விழாவோடு வெற்றிகரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. புதிய பொறுப்பாளர்களாக, ஐசக் இதன் தலைவராகவும், சுந்தர் குருசாமி இதன் செயலாளராகவும் பொறுப்பேற்று பிரம்மாண்டமாக 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இதன் முதல் கட்டமாக நடைபெற்ற அகில இந்திய புகைப்படக்காட்சியை ஒளிப்பதிவாளர் P C.ஸ்ரீராம் துவங்கி வைத்தார். 2500 புகைப்படக் கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். மீண்டும் சென்னையின் புகைப்படக்கலைஞர்களுக்கு புதிய விஷயங்களையும், தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தும், அசுர வேகத்துடனும் செயல்படும் மெட்ராஸ் புகைப்படச்சங்கதிற்கு நம் வாழ்த்துக்கள்.

ஆர். ஆர்.சீனிவாசன்

தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.