Project Description

தமிழ்

புகாரின் ஆண்கள் © அபுல் கலாம் அசாத் 2017 – 2018

நேர்கோட்டின் வளைவுகள், அபுல் கலாம் ஆசாத்தின் சங்ககால புகாரின் சமகாலங்கள் 

கானல் நீர் போல் தோன்றி மறையும் நிகழ்கால வாழ்வின்  நிலையில்லாத் தருணங்களை நிரந்தரமாக்கும் நவீன கருவியே காமெரா. சிறு துளையின்  வழியாக, முப்பரிமாண அனுபவங்களை, செங்கோண  பிம்பங்களாக  மாற்றும்  காமெராவின்  செயல்பாடு  என்னவோ  இயந்திரத்தன்மை கொண்டிருந்தாலும், அதனை இயக்கும் புகைப்படக்கலைஞரின் கைகளில், அது மூன்றாவது கண்ணாக உருமாறி, ஆக்க சக்தியாக செயல்படுகிறது. காலனித்துவ கருவியாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட காமெராவின் பார்வை, பெரும்பாலும், நமது தேசத்தவரையும், நமது வாழ்வியலையும், நம்மிலிருந்தே அந்நியப்படுத்தி காணும் வகையிலேயே அன்றும், இன்றும், செயல்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையிலிருந்து மாறி நிற்கும் துயர சம்பவங்கள், அல்லது விசித்திரமான அபூர்வமான தருணங்களை படமெடுக்கும் வழக்கமே அதிகம்.

ஒளிந்து நின்றுக்கொண்டு, உரு அளவினை பெரிதாக்கும் தொழில்நுட்பம் கொண்ட உயர்தர காமெராவின் உதவியுடன், யாரும் அறியாமல் புகைப்படங்களை எடுத்துத் தள்ளுவது என்பது தற்போதைய காலக்கட்டத்தில் சர்வ சாதாரணம். புகைப்படம் எடுக்கப்படுபவர் அறியாமலேயே படமெடுப்பதென்பது, அவரின் தனியுரிமை சுதந்திரத்தை பறித்து, அந்தரங்கத்தை அம்பலப்படுத்தும் அத்துமீறல் செயல் ஆகும். இது, ஒரு வெளிநாட்டவர், நமது நாட்டவரை எங்கனம் காண்பாரோ, அவ்வண்ணமே நமது மக்களையும் பிரதேசங்களையும் நாமே காணும் மேம்போக்கான காலனித்துவ பார்வை. அத்தகைய புகைப்படங்களானது, ஒரு சுற்றுலா பயணியின் வெற்றிச்சின்னம் அல்லது ஒரு செய்திக்கான ஆதாரம். அவ்வளவு தான். அவைகள், பரிமாற்றங்களன்று வெவ்வேறு உலகில் வாழும் இருவரின் தொடர்பின்மையின் வெளிப்பாடாக, பல்லாயிரக்கணக்கான பிம்பங்களில் ஒன்றாக, புகைப்படம் எடுக்கப்பட்ட இடத்திலிருந்து வெகு தூரத்தில், காட்சிக்கு வைக்கப்படுகின்றன. விற்கப்படுகின்றன.

அத்தகைய படங்களில் புகைப்படம் எடுக்கப்பட்டவர், புகைப்படம் எடுத்தவர் என இருவருக்குமிடையே எந்த விதமான தொடர்பும் காண முடியாது. அவற்றை காணும் பார்வையாளரும் ஒரு அந்நிய நபரே. அதே சமயத்தில், ஆழ் மனதின் தேடலாக, அகப்பார்வையின் வெளிப்பாடாக ஒரு படைப்பு உருவாகும் போது, அதனுள் ஒருவரின் சிந்தனையை, கற்பனையை தூண்டும் எண்ணப் பிரதிபலிப்புகளும், தகவல்களும், தடயங்களும், கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கும். புகைப்படங்களை வாசிப்பது என்பதே ஒரு கலை தான். அதிலும், காணும் போது மிக எளிமையாக, உற்று நோக்கும் போது மறைபொருள் தத்துவம், வாழ்வியல் குறியீடுகள் நிறைந்த ஒரு புகைப்படத்தொகுப்பினை வாசிப்பதென்பது பிரம்மப்பிரயத்தினம் தான். ஆயிரக்கணக்கான பிம்பங்களை கொண்ட அபுல் கலாம் ஆசாத்தின் ‘சங்கக்கால புகாரின் சமகாலங்கள்’ என்ற தொகுப்பினை காணும் போது, நன்கு எழுதப்பட்ட ஒரு நாவலின் நடுப்பக்கத்தினை வாசிப் பது போன்ற ஒரு உணர்வு. இது, அவரது நீண்ட தொகுப்பான Story of Love, Desire & Agony-ன் மூன்றாவது பாகமாகும். இதே தொகுப்பின் முதல் இரண்டு அத்தியாயங்களை ஏற்கனவே தற்கால கேரளா பகுதிகளில் எடுத்துள்ளார். இன்னும் இரண்டு பகுதிகளை எடுக்க உள்ளார். வரையப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஓவியத்தின் நிறைவு பெற்ற ஒரு பாகமே, புகாரில் இவர் செய்துள்ள இந்த தொகுப்பு.

‘புகார்’ என்ற சங்கக்கால புகழ் துறைமுக பெருநகரம் இன்று இல்லை. பூம்புகார் ஒரு மீனவ கிராமமாகவும், காவிரிப்பூம்பட்டினம் ஒரு பஞ்சாயத்தாகவும் அறியப்படும் இந்தத்தருவாயில், தற்கால கருவி, காடரண்கொண்டான் மேற்கு எல்லையாக, திருக்கடவூர் தெற்கு எல்லையாக, கலிக்காமர்  வடக்கு  எல்லையாக, வங்காள வளைகுடா கிழக்கு எல்லையாகக் கொண்டு, சுமார் முப்பது கிராமங்களை உள்ளடக்கியிருந்ததாக அறியப்படுகின்ற ‘புகார்’ என்ற ஒருங்கிணைந்த துறைமுக பெருநகரத்திற்கான புரிதலும் இன்று இல்லை. பழம்பெருமை வாய்ந்த புகாரின் பல பகுதியினை வங்காள வளைகுடா உளவாங்கிவிட, மீதி உள்ள முக்கியமான தடயங்கள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாமலேயே காவேரிப் படுக்கையில் மறைந்து போய்க்கொண்டிருக்க, கண்டெடுத்த பழங்காலத்தின் எச்சங்கள் சிற்சில பெருமையின் வடுக்களாக மிச்சமிருக்கின்றன. இன்று, ஒயிலாக ஓடி விளையாடிய காவேரி நதித்தளங்கள் இருந்தும் இல்லாதது போல் ஆகிக்கொண்டிருக்கும் நெய்தலும், மருதமும், பாலையும் கலந்த ஒரு பிரதேசமே, இளங்கோவின் ‘புகார்’. இது தான் அபுலின் ஆடுகளம்.

புகாரின் ஆண்கள் | வர்ணம் பூசப்பட்ட புகைப்படங்கள் © அபுல் கலாம் அசாத் 2017 – 2020

மற்றொரு கலைஞனின் படைப்பை, வேறொரு வடிவிலாக்கும் பணியினை அல்ல அபுல் மேற்கொள்கிறார். புதிய ஒரு படைப்பை உருவாக்குவதில் தான் அவரது கவனம். சரித்திரமும், கற்பனையும் கலந்த மக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தினை பல இடங்களில் ஒத்தும், வேறு சில சமயங்களில் வேறுபட்டும், இந்தத் தொகுப்பு உருவாக்கம் பெறுகிறது. சமகாலத்தில் அரங்கேறும் இந்த புதிய படைப்பிற்கு, சோழ மண்ணின் மைந்தர்களான புகாரின் ஆண்கள், நாயகர்களாகிறார்கள். இன்னும் எழுதப்படாத அவர்களின் கதைகளைத்தான், அபுலின் புகைப்படங்கள், மௌன மொழியில் உரையாடுகிறது.

அனைவருக்கும் பரிச்சயமான காலனித்துவ பார்வையை உடைக்கும் ஒரு உத்தி தான் அவரது படங்களின் சதுர வடிவும், பல வண்ண நிறமின்மையும் என்றே தோன்றுகிறது. நமது பார்வையினை, நீள் சதுர வடிவிற்குள் குவிக்கும் பழக்கம், தொன்று தொட்டு உள்ளதாகும். ஆடல், நாடகம், இசைக்கச்சேரி என அனைத்தும் நீள் சதுர அரங்கில் தான். டிவி, கணினி என தற்கால இயந்திரங்களும் காட்சியினை நீள் சதுர வடிவில் தான் குவிக்கிறது. பழக்கப்பட்ட இந்தப்பார்வையிலிருந்து, ஒரு காட்சியினை, சதுர வடிவில் காணும் போது, சிறு அதிர்ச்சி. அதுமட்டுமல்ல, நீல வானின் வெண்மேகங்கள், பச்சை வயல்கள், பாலை நிலத்தின் சின்னமான கள்ளிப்பூ, பரந்த கடற்பரப்பு, நிலவொளியின் பிரதிபலிப்புகள், நம்மை உற்று நோக்கும் புகாரின் ஆண்கள், என அனைத்தும் கருப்பு வெள்ளையில்.

நாம் அன்றாடம் காணும் நிஜ வாழ்வின் இயல்பான தருணங்களைத்தான் அபுல் புகைப்படம் எடுக்கின்றார். அறிந்த நபர். அறிந்த பிரதேசம். அதுவும் வினோதமோ, அற்புதமோ இல்லாத எளிய புகைப்படங்கள். ஆனால், தினம் தினம் கண்டதனாலேயே, இவைகள் நாம் காண மறுக்கின்ற காட்சிகளாக மாறிவிட்டன. அந்நியப்படுத்தப்பட்ட நெருக்கமான காட்சிகளைத்தான் அபுல் கருப்பு வெள்ளை மொழியில் கையாள்கிறார். காணாத ஒன்றை கண்டதனால் ஏற்பாடு கண நேர உற்சாகத்தையோ, உத்வேகத்தையோ அவை அளிப்பதில்லை. ஆனால், காண்பவரின் நினைவலைகளைத்தட்டி எழுப்பி, மனக்கண்ணில் நிறங்களை காணத்தூண்டுகிறது. நாம் காண மறுத்த தருணங்களை மீண்டும் பார்க்க சொல்கிறது.

அவர் கையாளும் அடுத்தவொரு உத்திதான், முழுமையான ஒரு காட்சியின் சிறு சிறு அங்கங்களை காண்பிப்பது. தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் கைகளிலே கிடைக்கப்பெற்ற சிறு பானையின் துண்டுகள், அரிய பல கண்டுபிடிப்புகளுக்கு காரணியாகும். இங்கே, திட்டமிட்டே அபுல் விட்டுச்செல்லும் துண்டிக்கப்பட்ட பிம்பங்களுள், தகவல்கள் பல பொதிந்துள்ளன. நமது பாரம்பரிய சோழர் சிற்பங்களில், சில முக்கிய அங்கங்கள் மறைந்திருக்கும். அதன் பிற அங்கங்களின் அமைப்பைக் கொண்டு, வீணை, ரிஷபம் என பார்வையாளன் கற்பனை செய்துக்கொள்ள வேண்டும். கலையென்பது, பிரகாசமாக ஒளிர் விடும் முழு நிலா மட்டுமல்ல. அது ஒரு தொடர்ச்சித்திரம். வளர்ந்தும், தேய்ந்தும், மறைந்தும் நிலைத்து நிற்கும் நிலவின் பயணம்.

புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டத்தில், அது ஒரு கலையாக கருதப்படவில்லை. நிஜத்தை அப்படியே பதிவு செய்யும் அதன் தொழில்நுட்பம் தான் பெரிதும் பாராட்டப்பட்டது. பொதுவாக, ஏதோ ஒரு கதையையோ, செய்தியையோ விளக்க உபயோகப்படுத்தப்பட்டன. ஆயினும், கண்டுபிடிக்கப்பட்ட குறுகிய காலக்கட்டத்திலேயே, மற்ற பிற கலைகளுக்கு ஈடாக, சுய வெளிப்பாட்டிற்கான கருவியாக, நவீன கலைகளின் சிகரமாக, புகைப்படங்கள் உலக அரங்கில் மதிப்பு பெற்றது. தற்காலங்களில், அவை மாறி வரும் வாழ்வியல் அம்சங்களை, வரும் காலத்திற்கு, பாதுகாத்து வைப்பதற்கான சிறந்த ஊடகமாக செயல்படுகிறது. முதலில் இந்தியாவில் புகைப்படம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, ‘சூட்’ என்ற ஆங்கில சொல் காலனித்துவ பீதியை தான் ஏற்படுத்தியது. இப்பொழுது தான் எல்லாரும் புகைப்படக்கலைஞர் தானே. ஆனால், அபுலின் புகைப்படங்களில் ஒரு பிரத்யேக பாணியினை காணலாம். திருடனைப்போல் ஒளிந்து புகைப்படம் எடுக்காமல், மக்களோடு மக்களாக இணைந்து, அவர்களோடு உரையாடலில் ஏற்பட்டு, தனது நெருங்கிய நண்பனை புகைப்படம் எடுப்பது போன்ற பரிச்சியத்துடன் அபுல் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஒரு கைதேர்ந்த சிற்பி, சிற்பத்தின் எல்லா பாகங்களையும் வடித்த பின்பு, ஒரு மௌன நிலையில் அதன் கண்களை திறப்பார். அப்பொழுது, அந்த சிற்பம் உயிர் பெரும். அபுலுக்கும், புகைப்படம் எடுக்கப்பட்டவருக்குமிடையே நடக்கும் உரையாடல் தான் அவரது புகைப்படங்களின் உயிரோட்டம். இவை, உலக நாடுகளோடு கலாச்சார வாழ்வியல், வர்த்தக பரிமாற்றங்களில் சிறப்புப்பெற்ற சங்கக்கால புகாரின் சுவடுகளைத் தேடவில்லை. அந்த பரிமாற்றங்கள் விட்டுச்சென்றுள்ள ஒன்றுபட்ட கலாச்சாரம் மற்றும் பன்முக வாழ்வுமுறையின் குறியீடுகளை அடையாளம் காண்கிறது.

சாதாரண மனிதர்களின் சரித்திரத்தை புகாரின் ஆண்கள் மூலமாக சொல்லும் காலத்தால் அழியாத இந்தப்படைப்பு, வரும் காலத்தில் புகார், உலக கலாச்சார வரைபடத்தில் இடம்பெற, ஒரு கலைஞன் விட்டுச்செல்லும் விதைகள்.

புகாரின் ஆண்கள் © அபுல் கலாம் அசாத் 2017 – 2018

தமிழ் 

26 டிசம்பர் 2017 அன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் நூல்கள் ஆசிரியர் மற்றும் / அல்லது ஃபோட்டோமெயிலின் பதிப்புரிமைக்கு உட்பட்டவை.

துளசி ஸ்வர்ண லட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காட்டில் பிறந்தவர். சென்னையில் உள்ள  சிவ நாடார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றுள்ளார். சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இவர் ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்கா நாடுகளில் பணியாற்றியுள்ளார். சுனாமி மற்றும் தானே புயலின் போது இந்திய மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார்.

அபுல் கலாம் ஆசாத், சமகால இந்திய புகைப்படக்காரர் மற்றும் புகைப்படங்களுக்கான ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் நிறுவனர். அபுலின் புகைப்படப் படைப்புகள் பெரும்பாலும் சுயசரிதை மற்றும் அரசியல், கலாச்சாரம், சமகால நுண்ணிய வரலாறு, பாலினம் மற்றும் சிற்றின்பம் ஆகிய பகுதிகளை ஆராய்கின்றன. அவரது படைப்புகள் சாதாரண மக்கள் இல்லாத வரலாறு மற்றும் முக்கியமாக அழகான படங்கள் மற்றும் சின்னங்களால் வழங்கப்படுகிற சமகால இந்திய வரலாற்றை மீண்டும் படிக்க முயற்சிக்கின்றன.