போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Henri Cartier Bresson
ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் | மூலம் இணையம்

ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன், இந்த நூற்றாண்டின் கண் 

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?

அல்லது ஒளியையா?

ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…

புகைப்படக்கலையில் இந்த நூற்றாண்டை, அல்லது புகைப்படக்கலை தோன்றிய பொழுதிலிருது இன்றுவரை புகைப்படக்கலையின் பிரதிநிதியாக நாம் ஒருவரைச் சொல்ல முற்பட்டால் அவர் ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன்தான். வாழும் எண்ணற்ற புகைப்படக்கலைஞர்களின் ஆதர்சமாகவும், வரப்போகும் புகைப்படக் கலைஞர்களின் பாடப்புத்தகமாகவும் அவர் என்றென்றும் விளங்குவார். அவரைப் பற்றிப் புகைப்பட மொழியில் நாம் குறிப்பிடவேண்டுமெனில் உலகில் எந்தவொரு பகுதியில் மாற்றங்களும், புரட்சியும் நடைபெறும்போது மிகச்சரியான இடத்தில், மிகச்சரியான நேரத்தில், அவ்விடத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் சரியான தருணத்தை படம் பிடிக்க அவ்விடத்தில் அவர் தோன்றினார். புகைப்பட வரலாற்றில் இது உண்மையிலேயே ஆச்சரியமான தருணம், சீனப்புரட்சியின்போது, ஸ்பானிய யுத்தத்தின்போது ,காந்தி இறந்தபோது, (பத்து நிமிடங்களுக்கு முன் காந்தியுடன் பேசியிருந்தார்), வியட்நாம், என்று உலகெங்கிலும் சமூக மாற்றங்கள் நிகழ்ந்தபோது சாட்சியாய் அங்கிருந்தார், பங்கு பெற்றார், புகைப்படங்களை உலகிற்கு வழங்கினார். பெரும்பான்மையானவர்கள் புகைப்பட வல்லுநர்களாக இருந்தபோது புகைப்படக் ‘கலைஞர்’ என்ற பதம் இவருக்கே முற்றிலும் பொருந்தும்.

படிமங்களை, அல்லது தர்சனங்களை (glance) உருவாக்குவதை வாழ்வியலாக எந்நேரமும் கொண்டிருந்தார். அப்படி அவர் என்ன செய்தார், மாபெரும் புகைப்பட – ஓவியங்களை அவர் எவ்வாறு உருவாக்கினார் என்று ஆய்ந்தோமானால் அவரின் வாழ்க்கையின் வளமான பிரதேசங்களில் அது ஒளிந்திருக்கிறது. அடிப்படையில் அவர் ஓர் ஓவியர். மாபெரும் புகைப்படக்கலைஞராக அவர் அறியப்பட்டபோதிலும் தன்னை ‘ஓவியர்’ என்றே சொல்லிக்கொண்டார்.

1908ல் பாரிசுக்கு அருகே சாந்திலூப் என்ற இடத்தில் பிறந்த பிரெஸ்ஸோன், தன்னுடைய இளவயதிலேயே மார்டின் முன்கசி (Martin Munkasci) என்ற ஹங்கேரிய புகைப்படக்கலைஞரினால் பாதிக்கப்பட்டிருந்தார். ‘‘எப்படி இவ்வாறு படம் பிடிக்க முடியும்?’’ என்ற கேள்வியும், இந்தப் புகைப்படக்கலையில் தான் ஏதாவது செய்வேண்டும் என்ற பதிலும்தான் பின்னாளில் அவருடைய வாழ்க்கையைத் தீர்மானித்தது.

பின்பு அவருடைய முதல் காதலான ஓவியத்தில் பயில ஆரம்பித்தார். 1927ல், க்யூபிசம் தோன்றியிருந்த காலத்தில், ஆந்த்ரே லோத் (Andre Lhote) என்ற க்யூபிச ஓவியரின் கீழ் ஓவியம் பயின்றார். ‘என் வாழ்க்கையில் எல்லாவற்றையுமே அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்’ எனப் பின்னாளில் பேட்டியில் கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு பிரெஸ்ஸோன் ஆங்கில இலக்கியம் பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒவியமும் பயின்றார். 1930 பிரெஞ்சு ராணுவத்தில் சேர்ந்தார். அவ்வாழ்க்கை அவருக்கு முற்றிலும் விசித்திரமாக இருந்தது. ஒரு கையில் ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவலும், மற்றொரு கையில் துப்பாக்கியுமாக அவருடைய வாழ்க்கை கழிந்தது. ராணுவ வாழ்க்கை முடிந்தவுடன் அவருக்கு எதிர்பாராத அத்தியாயமாக ஒரு வேட்டைக்காரராக ஆப்ரிக்காவிற்கு மான்களையும், மிருகங்களையும் வேட்டையாடச் சென்றார். பின்னாளில் ஒரு புகைப்படம் எடுப்பது குறித்துப் பேசும்போது வேட்டையாடுபவனின் மனோபாவத்தோடு பேசினார். அசையாத ஒரு பொருளைப் படமெடுக்கும்போதுகூட ‘‘மிக மெதுவாக, நுனிக்கால்களில், வெல்வெட் கைகளோடு, ஒரு கழுகின் கண்கொண்டு’’ என்ற வார்த்தைகளோடே பேசினார்.

ஆப்பிரிக்க வேட்டையாடுதலில் அவர் ஒரு பிரௌனி (Brownie) கேமராவை பயன்படுத்தி வந்தார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவருக்கு வேதனையைத் தந்தன, மனதின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும்படி வேகத்தை அக்கேமரா கொண்டிருக்கவில்லை. 1931ல் முதன்முதலாக லெய்கா வி3 கேமரா அவருடைய கைக்கு வந்தது. கேமரா என்பதை பண்பாட்டு தொழில்நுட்பம் என்றும் அவர் குறிப்பிடுகிறார். லெய்கா கேமராவில் அவர் திறந்த ஷட்டர், உலகின் பல்வேறு கதவுகளை திறந்தது. அவருடைய மின்னல் வேக நடை, மனம், கவனக்குவிப்பு கேமராவின் வேகத்தோடு இணைந்தது. ஒரு பறவையின் சுதந்திரத்தை உணர்ந்தார். உலகம் முழுவதையும் தன்னுடைய புகைப்படங்களால் இணைத்தார். ஒரு குறிப்பிட்ட புகைப்படத்தில், வாழ்வின் சம்பவங்களின் முழு சாரத்தையும் கொண்டு வந்தார். ஒரு நிகழ்வின் முழுத்தன்மையையும் உணரக்கூடிய, பிரதிபலிக்கக்கூடிய வீச்சை ஒரே ஒரு படத்தில் கொண்டு வரமுயற்சித்தார். இதையே அவர் ‘தீர்மானிக்கும் கணம்’ (Decisive moment) என்று அழைத்தார். இப்படித் தீர்மானிக்கும் கனத்தை 1972 வரை 40 ஆண்டு காலம் வரை எவ்வித இடைவேளையுமின்றி உலகத்தைச் சுற்றி வந்தார். 1972ல் திடீரென ஒருநாள் இனிமேல் புகைப்படங்கள் எடுப்பதில்லை என்று முடிவெடுத்தார். அதற்குப் பிறகு அவர் புகைப்படம் எடுக்கவில்லை, முழுக்க ஓவியம் வரைவதில் ஈடுபட்டார், இப்படி அவருக்கு இருந்த துறவு மனப்பான்மையையும், அவருடைய ஆளுமையின் ஒரு பகுதியாகவே பார்க்கவேண்டும். ஒரு விமர்சகர் அவரை ‘‘இந்த உலகத்தை அதிகம் பார்த்துவிட்டவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய புகைப்படங்களில் ஒரு காவியத் தன்மையும், கதை சொல்லும் மரபும் உள்ளடங்கியுள்ளது. மேலும் ஆழ்ந்த மனவெழுச்சியை வெளிப்படுத்தும் தருணங்களும் உண்டு, இவையெல்லாம் அவருக்கு ழான் ரெணுவாவின் (Jean Renoir) திரைப்படங்களின் மூலம் வந்தது. ‘விளையாட்டின் விதிகள்’ (Rules of the Game) உட்பட இருபடங்களுக்கு அவருடன் உதவி இயக்குனராக வேலை பார்த்தார். பின்பு ஆவணப்பட இயக்குனராக மாறினார். தொடர்ச்சியாக இரு ஆவணப்படங்களை இயக்கினார்.



1937ல் ஜாவா நாட்டைச் சேர்ந்த ஒரு நடனப் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். 30 வருட வாழ்க்கைக்குப் பிறகு இருவருக்குமிடையில் மணமுறிவு ஏற்பட்டது. பின்பு மான் பிராங்க் என்ற புகைப்படக் கலைஞரை திருமணம் செய்து இறுதிவரை அவருடன் வாழ்ந்தார். அவருடைய வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான நிகழ்வு 1940களில் ஜெர்மன் ராணுவம் பிரான்ஸைப் படையெடுத்தபோது பிரெஸ்ஸோன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 35 மாதங்கள் சிறையில் அடைபட்டுக் கிடந்த பிரெஸ்ஸோன் இருமுறை சிறையிலிருந்து தப்பினார். ஆனால் பிடிபட்டு மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார். மூன்றாவது முறையாக சிறையிலிருந்து தப்பினார். மீண்டும் பிரான்சுக்கு வந்த பிரெஸ்ஸோன் புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினார். ஹென்ரி மத்தீஸ், பானார்ட், பிரேக் போன்ற ஓவியங்களைப புகைப்படம் எடுத்தார். ‘The Return’ என்ற ஆவணப்படத்தையும் இயக்கினார். யுத்தம் முடித்த பிறகு தன்னுடைய புகைப்படங்களைக் காட்சிக்கு வைக்க நியூயார்க் நவீனக்கலைகளுக்கான மியூசியத்திற்குச் சென்றார். உலகம் முதலில் அவரது கலைப்படப்புக்களைப் பார்த்து பிரமித்தது.

புகைப்படக்கலை வரலாற்றில் அவர் ஆற்றிய மற்றுமொரு முக்கியமான வரலாற்றுப் பதிவு ‘மேக்னம்’ என்றும் கூட்டுறவு புகைப்பட செய்தி நிறுவனத்தை உருவாக்கியது. யுத்தப் புகைப்படக்கலைஞர் ராபர்ட் காபா , ‘சிம்’ என்று அழைக்கப்பட்ட டேவிட் செய்மோர் ஆகிய மூவரும் சேர்ந்து 1947ல் இந்நிறுவனத்தை உருவாக்கினார்.



இந்நிறுவனத்திற்காக மூவரும் உலகம் முழுவதும் பயணம் செய்தனர். ‘மேக்னம்’ நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘புதிய அலை’ப் படைப்புகளாக வெளிவந்தன. உலகத்தை ‘பார்க்கும் விதமே’ முற்றிலும் வேறான அனுபவத்தை மேக்னம் தநத்து. இன்றுவரை தந்துகொண்டிருக்கிறது. பண்பாட்டு அசைவுகள், அரசியல் நிகழ்வுகள், எல்லாவற்றையும் ஒரு கலைப்படைப்புக்கு நிகரான அனுபவத்தை வெளிப்படுத்தும்படியாக இவர்களின் புகைப்படங்கள் இருந்தன. இடையில் ராபர்ட் காபா யுத்தத்திலேயே கொல்லப்படுகிறார்.

1950களுக்குப் பிறகு அவருடைய இரு புகைப்படப்புத்தகங்கள் வெளிவந்தன. ‘தாவிச்செல்லும் படிமங்கள்’ (Images on the Run) தீர்மானிக்கும் கணம் (Decisive moment) இந்த இரு புத்தகங்களுமே அவரது முழுமையான புகைப்படம் குறித்த சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. ஒரு இடத்தில் அவர் குறிப்பிட்டார், ‘‘எனக்கு என்னுடைய புகைப்படங்களிலும் விருப்பமில்லை, அதேபோல மற்றொருவருடைய புகைப்படங்களிலும்’’

© ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் | மூலம் இணையம்

பிரெஸ்ஸோனின் புகைப்படக்கலை

1932லிருந்து நாற்பதாண்டு காலம் அவர் புகைப்படங்கள் எடுத்தார். அவர் உருவாக்கிய ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் எப்படி புதிய முன்முயற்சியாகவும், கலைப் படைப்புகளாகவும் இருந்தன என்று பார்க்கலாம். அவர் படம் பிடிக்கும் விதமும், காட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமும் அலாதியானது. லெய்கா வி3 கையடக்க கேமராவைப் பயன்படுத்தினார். உண்மையில் அது அவருடைய வலது கைக்குள் அடங்கிவிடும் கேமராகவே இருந்தது. தெருக்களில் புகைப்படம் எடுக்கும்போது கேமராவை தன்னுடைய கோட்டுக்குள் மறைத்து வைத்திருப்பார். எதிர்பாராத தருணங்களை, மின்னல் வேகத்தில் மக்களின் உணர்ச்சிகளைக் குறைவின்றி எடுக்க இவ்வாறு பழகியிருந்தார். ஒவ்வொரு நாட்டிற்கும், இனத்திற்கும், அதற்கேயுரிய பண்பாட்டு சமிக்ஞைகள் உள்ளது. அதைச் சரியாக இனங்கண்டு, அதைச் சிதையாமல் படம் பிடித்தார். சமீபத்தில் பிரெஸ்ஸோனைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று பார்த்தேன், பிரெஸ்ஸோன் படம்பிடிப்பது அதில் பதிவாகியுள்ளது. உண்மையில் அவர் புகைப்படக்காரராக களத்தில் இல்லை, ஒரு கோமாளியைப் போல, நாடக நடிகனைப்போல, தெருவே வெளியாக துள்ளிக் குதித்தபடி, மின்னல் வேகத்தில் தாவித் தாவி படம் பிடித்துக்கொண்டு இருந்தார். மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட பிரெஸ்ஸோன், புகைப்படக்கருவி கையில் இருக்கும் போது முற்றிலும் வேறொரு மனிதனாக மாயவெளியில் மிதந்தார்.

தொழிற்நுட்ப ரீதியாகப் பார்த்தோமானால் அவர் எப்போதும் Leica கேமராவைப் பயன்படுத்தினார். 50 mm தனித்த லென்ஸை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தினார். கறுப்பு வெள்ளையில் மட்டுமே புகைப்படங்களை எடுத்தார். வண்ண பிலிமைக் கொண்ட இன்னொரு லெய்கா கேமராவையும் வைத்திருப்பார். தன்னுடைய அபெர்ச்சர் செட்டிங்கை பெரும்பாலும் F2 விலேயே வைத்திருந்தார்.



மின்னல் வேக தர்சனங்களைப் பதிவு செய்வது, இதுமட்டுமே அவரது குறிக்கோள், இன்னும் ஆச்சரியமான செய்தி என்னவெனில் படம் பிடிக்கும்போது என்ன அபெர்ச்சரில் படம் எடுக்கிறோம் என்றுகூட அவர் பார்த்ததில்லை, படம் எடுத்த பிறகே அதைப்பற்றி யோசித்தார். அதைப்பற்றி அவர் குறிப்பிடுகையில், வேட்டையாடுவது மட்டுமே என்னுடைய வேலை, சமைப்பது என்னுடைய வேலை அல்ல’ என்றார். படத்தை பிரிண்ட் செய்யும் பிரிண்டர் எல்லாவற்றையும் சரிசெய்து கொள்வார்’ என்றார். ஒரு கழைக்கூத்தாடிக்கும், பிக்பாக்கெட் செய்பவனுக்கும் இடையில் ஒரு புகைப்படக் கலைஞன் இருக்கிறான் என்று மேலும் குறிப்பிடுகிறார். ஜும் லென்ஸை பெரும்பாலும் தவிர்த்தார் அல்லது பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம்.

ஒரு வகுப்பறையில் அவரிடம் ‘என்ன ஜும்லென்ஸ்பயன்படுத்த வேண்டும் என ஒரு மாணவர் ’ என்று கேட்டபோது, உனது கால்களே சிறந்த ஜும் என்று குறிப்பிட்டார். இன்னும் ஒரு முக்கியான தகவல் என்னவெனில் அவர் எப்படி புகைப்படத்தை ஒருங்கிணைத்து (Composition) எடுக்கிறாரோ, அப்படியேதான் பிரிண்ட் செய்தார். அதாவது தன்னுடைய படத்தை ஒருபோதும் வெட்டி (Crop) ஒட்டி திருத்தியதில்லை!

ஒரு புகைப்படம் என்பது அவருக்கு தான் எடுக்கும் பொருளுக்கும், தனக்கும் இடையிலான நெருக்கம் மட்டுமே, மின்னல் வேக தர்சனமும், அன்யோன்யமுமே ஒரு படத்தை சிறப்பானதாக்குகிறது என்றார். ‘நீங்கள் ஒரு நபரை புகைப்படம் எடுக்கிறீர்களென்றார், உங்களுடைய கேமரா படம் பிடிப்பவரின் உடல் தோலுக்கும், அவரது சட்டைக்கும் நடுவில் இருக்கவேண்டும் ஒருமுறை குறிப்பிட்டார்.’’ நெருக்கமான உறவே அவருக்கு முக்கியம், தொழில்நுட்பம் அல்ல.

‘‘கேமரா என்பது ஒரு சிறிய காந்தத்தைப் போல, உங்களுடைய உள்ளுணர்வால் உலகத்தின் அத்தனை படிமங்களையும் அதனுள் இழுப்பதே உங்களுடைய வேலை” என்று குறிப்பிட்டார். இப்படி மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பல்வேறு உத்திகளைக் கண்டுபிடித்தார். ஒரு கைக்குட்டையில் கேமராவை மறைத்து படம் எடுத்தார். ‘படம் எடுப்பதற்கு முன்னரும், அதன் பின்னரும் சிந்திக்கவேண்டும், படம் எடுக்கும் போதல்ல என்று குறிப்பிட்டார்.

‘‘ஏதோ ஒரு கணம், எக்கணத்தில் எல்லாக் கூறுகளும் சமநிலையாக, லயத்துடன் வியாபித்து நிற்கும், அக்கணத்தை நீங்கள் கைப்பற்றுவதே புகைப்படக் கலையின் சவால்’’ என்றார். ஒரு மனிதனைப் படம் பிடிக்கும்போது அவனைச் சுற்றியுள்ள சூழலை மதிப்பதும், பதிவு செய்வதும் மிக முக்கியம் என்று கருதினார்.

மனிதனின் நடத்தையையும், குணாம்சத்தையும் உறையச் செய்வதே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. கண்களின் தெறிப்பு, தலையின் சிறு அசைவு, தனியொருவர், அல்லது கூட்டத்தின் திருகல், அவருடைய மேதைமை என்பது உணர்ச்சி வெளிப்பாடுகளையும், மனித உடல் அசைவுகளையும் இணைப்பதாக இருந்தது. ஒரு பட்டுப்பூச்சி நூலைப் பின்னுவதைப் போல, ஒரு கணத்தின் நூறு துண்டுகளின் ஒரு பகுதி என்னிடமிருந்து வெளிவரும் பிலிம்களில் பின்னிப் பிணைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய கண், கை, இதயம், கேமரா ஆகிய நான்கு ஒரே கோட்டில் நின்று ஒற்றை அமைப்பாக மாறிவிடுகிறது. மனித வாழ்வின் எளிமையான நிகழ்வுகளை இவ்வமைப்பு பதிவு செய்கிறது. வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாயமும ஒரு குறிப்பிட்ட நேரத்தில், அர்த்தமுள்ள ஜியோ மெட்ரிக் பண்போடு எல்லாக் கூறுகளும் ஒன்றிணைந்து, அவ்வத்தியாயத்தின் தன்மையை குறிப்பிட்ட கணத்தில் வெளிப்படுவதாக அவர் நம்பினார். இவையெல்லாமே உணர்ச்சிகளைத் துறந்த, உறவற்ற மனோநிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட கணத்தை நிறுத்தும்போது ஒரு படம் முடிவடைவதாகவும் நம்பினார்.



அவருடைய புகைப்படங்களில் ஒருங்கிணைவு (Composition) எப்படி அமைகிறது என்று பார்க்கலாம். எல்லாவற்றையும் ஜியோமெட்ரிக் வடிவங்களாகப் பார்ப்பதுடன், ஒரு குறிப்பிட்ட பிரேமிற்குள் ஓர் ஒழுங்கமைவை ஏற்படுத்திக்கொண்டு, சில நிகழ்வுகள் நடப்பதற்காக அவர் காத்திருப்பதையும் காணலாம். எதிர்பாராத தருணங்களில் அவர் படம்பிடிப்பதையும் காணலாம். இவை யாவுமே அவருடைய வேகம் சம்பந்தப்பட்டது. இதை மீறி அவர் ஓர் ஓவியனின் கண்ணைக் கொண்டு இருப்பதால் நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட பிரெஞ்சு ஓவியர்களின் ஒருங்கிணைவையும் இவர் படங்களில் காணலாம். கறுப்பு வெள்ளையில் ஒளிந்துள்ள வண்ணங்களைத் திறந்து ஆழ்ந்த தியானத்தன்மையை ஏற்படுத்தக்கூடிய படங்களையும் உருவாக்கியுள்ளார். படம் பிடிக்கும் பொருளையும், சுற்றியுள்ள சூழலில் உள்ள இன்னொரு பொருளையும் இணைப்பதன்மூலம் புகைப்படத்தின் எல்லையை விரிவுபடுத்தினார். இது இவருடைய ஆசிரியர் ஆந்த்ரே கொத்தஸிடமிருந்து வந்தது. ஒரே கவிதையில் கவிஞர் பிரமின் படிமங்களை அடுக்குவதைப்போல ஒரே புகைப்படத்தில் பல்வேறு புகைப்படங்களை, புகைப்படங்களின் அனுபவத்தை அடுக்கியிருப்பதைக் காணலாம். இப்புகைப்படங் களைத் தனியே பிரித்தெடுத்து தனியாக அனுபவிக்க முடியும். நல்ல புகைப்படங்களைப் பார்ப்பது என்பது நம்முள் ஆழ்ந்த இசையை ஏற்படுத்தும், பார்வையின் விழி சிதறாமல் கண்கள் லயத்துடன் புகைப்படங்களில் சுழலும், பின்பு ஆழ்ந்த மௌனத்தை ஏற்படுத்தும், இவை யாவும் பிரெஸ்ஸோனின் புகைப்படத்தில் இருந்தது. இவருடைய புகைப்படச் சிந்தனைகள் பல்வேறு கலைகளைப் பாதித்தன, உலகப் புகழ்பெற்ற சினிமா இயக்கமான (‘Cinema Verite’) சினிமா வெரித்தே இவருடைய புகைப்படச் சிந்தனையின் மூலமே உருவாக்கப்பட்டது. அதன் அடித்தளம் பிரெஸ்ஸோனின் புகைப்படங்களே.

பிரெஸ்ஸோனும், இந்தியாவும்

உலகம் முழுவதும் ஒரு தெருப்புகைப்படக் கலைஞனாக திசைநான்கின் மூலைமுடுக்கெல்லாம் அவர் சுற்றி வந்தாலும், இந்தியா அவருக்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ஆறு முறை அவர் இந்தியாவிற்கு வந்துள்ளார். 1947லிருந்து 1987 வரை நாற்பது வருடங்களில் இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் அவர் அலைந்து திரிந்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் மதுரை வரைஅவரது பயணம் நீண்டிருந்தது. காந்தி சுடப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன் அவரைச் சந்தித்து பேசியிருந்தார். காந்தி சுடப்பட்ட பிறகு மீண்டும் அவ்விடத்தைப் படம்பிடித்தார். பின்பு முழு இறுதிச்சடங்கையும் அவர் படம்பிடித்தார். உலகம் முழுதும் பேசும்படியான புகைப்படக் கட்டுரையாக அது ‘லைப்’ பத்திரிக்கையில் வெளிவந்தது. திருவண்ணாமலையில் ரமணர் இறக்கும்போது உடனிருந்தவர் பிரெஸ்ஸோன், புகைப்படங்களும் எடுத்துள்ளார். முதல் குடியரசுத்தின அணிவகுப்பு, அலாகாபாத்தின் கும்பமேளா, அகமதாபாத்தின் துணிகளுக்கு சாயம் போடுபவர்கள், மகாராஜாக்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள், காஷ்மீரின் அழகிய நிலக்காட்சிகள், பஞ்சாப் பிரிவினையில் ரயில்வண்டியில் கொத்துக் கொத்தாக பயணம் செய்த பலி ஆடுகளான மனிதர்கள், குருஷேத்திரத்திலுள்ள அகதிகள் முகாம், பஞ்சாபின் ஐந்து நதிகள், மும்பை, ஜெய்ப்பூர், பழனியின் பங்குனி உத்திரம், என்று அவருடைய இந்தியாவின் புகைப்படப் பட்டியல் நீளுகிறது. உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ‘தெருப்புகைப்படக்கலைஞன்’ என்ற பதத்தின் சுதந்திரத் தன்மையை உணர்த்தும் புகைப்படக்கலைஞராகவே அவர்வாழ்ந்து வந்தார்.

1966ல் இந்தியா ராக்கெட் விடுவதைப் படம் பிடிப்பதற்காக அவர் சிறப்புப் புகைப்படக் கலைஞராக அவர் அழைக்கப்பட்டார். பிறருக்காக அவர் வேலை செய்தாலும், அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. தும்பாவில் ராக்கெட் விடுவதற்கு முதல் நாள் அவர் ஒரு காட்சியைப் பார்க்கிறார். எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஒரு நபர் பறக்கவிடப்படும் ராக்கெட்டின் முனைப்பகுதியை சைக்கிளில் வைத்து உருட்டிக்கொண்டு வருகிறார். இதைப் பார்த்த பிரெஸ்ஸோனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை அவர் படம்பிடிக்கிறார். அடுத்து இந்தியா ராக்கெட் விட்ட நிகழ்ச்சியை வெளியிடும்போது, அவர் இந்தப் புகைப்படத்தையே வெளியிட்டுள்ளார், அதாவது ராக்கெட் பறக்கும் புகைப்படத்தை அவர் வெளியிடவில்லை!

© ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் | மூலம் இணையம்

பிரெஸ்ஸோனும் உருவப் புகைப்படங்களும்

பிரெஸ்ஸோன் ஒரு மகத்தானப் புகைப்படக்கலைஞர், அதேவேளையில் அவர் மகத்தான உருவப்படப் புகைப்படக்கலைஞரும் கூட, ஏனெனில் உருவப்படப் புகைப்படக் கலைஞராக இருப்பவர்கள், மகத்தான புகைப்படக்கலைஞர்களாக இருப்பதில்லை. நாற்பதாண்டுகால புகைப்படப் பயணத்தில், ‘பத்திரிக்கைப்படக்கலை’ (Photo Journalism) என்பதை முழு அர்த்தத்துடன் செயல்படுத்திக் காட்டியவர் பிரெஸ்ஸோன். இன்னும் சொல்லப்போனால் அப்பதத்தினை புனர்மாற்றம் செய்து புதுமையாகக் கண்டுபிடித்தவர் என்றே சொல்லலாம்.

சமூக நிகழ்வுகளை படம்பிடிக்கும்போதே, அவர் ஆளுமைகளையும், பாமரர்களையும் உருவச்சித்திரமாக புகைப்படங்களில் தீட்ட ஆரம்பித்தார். சம்பிரதாயமான பாஸ்போர்ட் உருவங்களிலிருந்து விடுபட்டு, படம் எடுப்பவரின் முழு ஆளுமையை ஒரே ஒரு புகைப்படத்தில் வெளிவரும்படி செய்தார்.



இவருடைய புகைப்படங்களில் யாருக்கும் கதாநாயக மதிப்பு இல்லை, இவருடைய சட்டகத்தில் (Frame) உள்ள எல்லாப் பொருளுக்கும் ஒரே மதிப்புதான். அதேவேளையில் ஓர் எழுத்தாளரை, ஓவியரை, இசைக்கலைஞரை சித்தரிக்க என்ன பொருள் முக்கியமோ அதனையே முக்கியத்துவம் பெறச்செய்தார். சட்டகத்திலுள்ள எவ்வளவு பெரிய ஆளுமைகளாக இருந்தாலும் சரி அவர்களுடைய குணாம்சத்தை வெளிப்படுத்தும் மின்னல் கீற்று அவருக்குத் தேவை, அவ்வளவுதான். முழு ஆளுமையும் அதில் பிரதிபலிக்கும். வடிவமைப்பில் மையப்பகுதியாக எந்த ஆளுமையும் இருந்ததில்லை, உதாரணத்திற்கு ஓவியர் ஹென்ரி மத்தீஸின் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அப்புகைப்படத்தில் மத்தீஸின் உருவம் மிகச்சிறிய பரப்பளவை எடுத்துக் கொண்டிருக்கும், அவர் வளர்க்கும் புறாவே சட்டகத்தின் முன்பகுதியில் வியாபித்து இருக்கும். வில்லியம் ஃபாக்னரின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டீர்களானால் நம் கண் பார்க்கும் முதல் பொருளாக அவரது நாயும், சட்டகத்தின் இறுதிப் பகுதியில் ஃபாக்னர் பொருத்தப்பட்டிருப்பார். இப்படி அவர் ஒவ்வொரு புகைப்படத்திலும் புதுமையின் திமிறல் புலப்படும். அவர் எதிர்பார்க்கும் கணம் வரும்வரை அவர் காத்திருக்கத் தயங்கியதில்லை. பல நாட்கள் அந்தக் கலைஞரோடு சுற்றித் திரிந்து அவர் மனம் விரும்பும் புகைப்படம் கிடைக்கும் வரை விடுவதில்லை. இன்னொரு சமயம் ஒரு கலைஞரை படம் எடுக்கச் சென்று அவரது வீட்டின் கதவைத் தட்டுகிறார், அவர் கதவைத் திறந்தவுடன் பிரெஸ்ஸோன் தன்னுடைய கேமராவினால் படம் எடுக்கிறார். அவர் நினைத்தபடம் அவருக்கு கிடைத்துவிட்டது. அப்படியே திரும்பிவிடுகிறார். ஒரு சட்டகத்தினுள் உள்ள எல்லாப் பொருளும் அவருக்கு சமநிலையில் இருக்கவேண்டும், இலையோ, எழுத்தாளரோ, முக்கியத்துவம் யாருக்கும் இல்லை. மனிதர்கள் என்ற அடிப்படையிலும் யாருக்கும் முக்கியமில்லை. இதுவே கலைஞனின் ஆளுமையைக் காட்டுகிறது. இன்றும் அவருடைய உருவச்சித்திரங்கள் காலத்தால் அழிக்க முடியாததாக உள்ளது. இறுதியாக, பிரெஸ்ஸோன் தன்னைப் புகைப்படம் பிடிக்கவோ, யாருக்கும் புகைப்பட போஸ் வழங்கவோ விரும்பாத நபர். கேமரா அவரைப் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்காத நபர் என்பதோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.

RR Srinivasan

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.



Published on April 19, 2017

Share

Home » Portfolio » கட்டுரைகள் » படிமங்கள் » ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’

Related Articles

2021-11-18T10:15:13+05:30

கழுமரவேர் | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-11-12T14:28:19+05:30

முந்திரி | ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து | சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை கவிதைகள் முத்துராசா குமார் புகைப்படம் அபுல் கலாம் ஆசாத் போட்டோ மெயில் தமிழ் பக்கத்தில் சமகால புகைப்படக்கலை அதன் வரலாறு, அழகியல் நுட்பங்கள், விமர்சனம், மற்றும் மொழிமாற்றப்பட்ட கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

2021-09-25T21:50:15+05:30

கூழாங்கல் பதித்த தாயத்து | ஒளியெழுத்து

கூழாங்கல் பதித்த தாயத்து, சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை, கவிதைகள் முத்துராசா குமார், புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T22:17:09+05:30

கருப்பு நிலமும், மனிதர்களும் | பாலமுருகன்

இந்திய வரைபடத்தில் புதிதாக உதயமான ஒரு மாநிலத்தில் கால் வைக்க போகிறோம் என்றதுமே அதற்கான முன்திட்டமிடல் ஆரம்பமானது. பயணம் தொடங்கியது. ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து நான்கு மணி நேர சாலைப்பயணம். ஜார்கண்ட் என்ற சொல்லுக்கு காடுகளை கொண்ட நிலப்பரப்பு என்பது பொருள். அந்த பெயருக்கு எந்த குறைவும் இல்லாமல் வழி நெடுக அடர்ந்த காடுகளை காண முடிந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் நிலக்கரியை கப்பலில் இருந்து இறக்குமதி செய்வதை பார்த்த எனக்கு நிலக்கரி மலையை வெட்டி போடப்பட்டிருந்த சாலையில் பயணித்த போது சிலிர்ப்பாக இருந்தது.

2021-09-25T21:45:03+05:30

செந்தட்டி | புகைப்படமும் கவிதையும்

ஒளியெழுத்து. சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. புகைப்படம் அபுல் கலாம் ஆசாத். கவிதைகள் முத்துராசா குமார்.

2021-09-25T21:46:30+05:30

தலைப்பற்ற கவிதை | ஒளியெழுத்து

சமகால புகைப்படமும் கவிதையும் சிறப்பு நெடுவரிசை. கவிதைகள் முத்துராசா குமார். புகைப்படம் அபுல் கலாம் ஆசாத்

2021-09-25T22:02:48+05:30

நேர்கோட்டின் வளைவுகள்அபுல் கலாம் ஆசாத்தின் சங்ககால புகாரின் சமகாலங்கள்

ஒரு கைதேர்ந்த சிற்பி, சிற்பத்தின் எல்லா பாகங்களையும் வடித்த பின்பு, ஒரு மௌன நிலையில் அதன் கண்களை திறப்பார். அப்பொழுது, அந்த சிற்பம் உயிர் பெரும். அபுலுக்கும், புகைப்படம் எடுக்கப்பட்டவருக்குமிடையே நடக்கும் உரையாடல் தான் அவரது புகைப்படங்களின் உயிரோட்டம். இவை, உலக நாடுகளோடு கலாச்சார வாழ்வியல், வர்த்தக பரிமாற்றங்களில் சிறப்புப்பெற்ற சங்கக்கால புகாரின் சுவடுகளைத் தேடவில்லை. அந்த பரிமாற்றங்கள் விட்டுச்சென்றுள்ள ஒன்றுபட்ட கலாச்சாரம் மற்றும் பன்முக வாழ்வுமுறையின் குறியீடுகளை அடையாளம் காண்கிறது. சாதாரண மனிதர்களின் சரித்திரத்தை புகாரின் ஆண்கள் மூலமாக சொல்லும் காலத்தால் அழியாத இந்தப்படைப்பு, வரும் காலத்தில் புகார், உலக கலாச்சார வரைபடத்தில் இடம்பெற, ஒரு கலைஞன் விட்டுச்செல்லும் விதைகள்.

2021-09-25T22:18:16+05:30

தென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்

காலவரிசைப் படி எல்லாவற்றையும் ஆராயும் போது, கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் தான் தமிழகத்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்துள்ளார் என்று அறிய முடிகிறது. இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர் மாணவர்களுடன் சென்று, தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்தனர்.

2021-09-25T22:18:33+05:30

துயரத்தின் பிம்பங்கள்

போர் புகைப்படங்களின் முரண்பாடு, இதன் மூலம் அம்பலமாகிறது. அது “அனுசரணையை” ஏற்படுத்துவதற்காக பிரசரிக்கப்படுகிறது என பெரும்பான்மையோரால் கருதப்படுகிறது. அதன் மிகவும் தீவிரமான உதாரணங்கள் – மெக்கலினின் பெரும்பான்மையான புகைப்படங்களில் உள்ளது போல – அதிகப்பட்சமான அனுசரணையை ஏற்படுத்த மிகவும் துயரமான தருணத்தை காண்பிக்கும். அத்தகைய தருணங்கள், புகைப்படம் எடுத்தாலும், எடுக்காவிட்டாலும், சாதாரண தருணங்களிலிருந்து தொடர்பற்ற நிலையிலிருக்கும். அவை தாமாகவே தனித்து நிற்கும்.

2021-09-25T22:19:12+05:30

ஹென்ரி கார்தியெ பிரெஸ்ஸோன் – ‘இந்த நூற்றாண்டின் கண்’

பிரெஸ்ஸோன் ஒரு மகத்தானப் புகைப்படக்கலைஞர், அதேவேளையில் அவர் மகத்தான உருவப்படப் புகைப்படக்கலைஞரும் கூட, ஏனெனில் உருவப்படப் புகைப்படக் கலைஞராக இருப்பவர்கள், மகத்தான புகைப்படக்கலைஞர்களாக இருப்பதில்லை. நாற்பதாண்டுகால புகைப்படப் பயணத்தில், ‘பத்திரிக்கைப்படக்கலை’ (Photo Journalism) என்பதை முழு அர்த்தத்துடன் செயல்படுத்திக் காட்டியவர் பிரெஸ்ஸோன். இன்னும் சொல்லப்போனால் அப்பதத்தினை புனர்மாற்றம் செய்து புதுமையாகக் கண்டுபிடித்தவர் என்றே சொல்லலாம்.

2021-09-25T22:19:35+05:30

ஜான் ஐசக் – மரணித்துப் போன வண்ணங்கள், பிறகொரு வண்ணத்துப்பூச்சி

புகைப்படக்கலைஞர் ஜான் ஐசக் பொறுத்த வரையில் புகைப் படங்களைவிட மனித மாண்பே முக்கியம். அவருடைய புகைப்பட அனுபவங்களில், ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே வேலை செய்யும்போது, ஒரு சிறு தெருவழியாக அவர் சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் ஒரு காட்சி, தெரு முனையில் ஓர் இளம்பெண் முழுநிர்வாணமாக, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தபடி, அதன் தொப்புள் கொடிகூட வெட்டப்படவில்லை, ரத்த வெள்ளத்தில் குழந்தையின் அழுகுரலோடு அக்காட்சி விரிந்து கிடக்கிறது.

2021-09-25T22:08:14+05:30

“கோட் சூட்டும் புகைப்படமும்” – ஜான் பெர்ஜெர்

சூட்டுகள் அவர்களை உருக்குலைய செய்கிறது. அவர்களுக்கு ஏதோ தோற்றக்கோளாறு இருப்பது போல் தோன்றுகிறது. ஒரு பழைய ஃபேஷனாக மீண்டும் மாறும் வரை அபத்தமாகவே தோன்றும். உண்மையில் ஃபேஷனின் பொருளாதார தர்க்க சாஸ்திரம், பழைய ஃபேஷனை அபத்தமாக காண்பிப்பதில் தான் வெற்றி அடைகிறது. ஆனால், இங்கே, நாம் அது போன்ற ஓர் அபத்தத்தை காணவில்லை; மாறாக, இங்கே உடைகளை அதனை அணிந்திருக்கும் உடல்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது, உடைகள் அபத்தமல்லாததாகவும் இயல்பற்றதாகவும் தோன்றுகிறது.

2021-09-25T22:09:10+05:30

‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ – சென்னையில் ரகுராய்

ரகுராய் ‘‘காத்திருத்தலே புகைப்படக்கலை’’ என்றார். ஒவ்வொரு புகைப்படத்திலும் ஏதாவது அற்புதங்கள் நிகழவேண்டும். அந்த அற்புதங்கள் புகைப்படத்தை மேலும் செழுமையாக்குகின்றன. கடுமையான அர்ப்பணிப்பும், வெறியும், நேர்மையும் கொண்டு காத்திருக்கும் போது, இயற்கை உங்கள் மேல் கருணை கொண்டு சில சம்பவங்களை காட்சிப் படிமத்தில் நிகழ்த்தும். தான் அதனை நம்பவுதாகவும் குறிப்பிட்டார்.

2021-09-25T22:10:12+05:30

ஒளியே மொழி-வரலாறே மொழி

புகைப்படக்கலையின் வரலாறு என்பது ஊசித்துளைக் கேமராவினுள்தான் தொடங்குகிறது.கேமரா அப்ஸ்க்யூரா (CAMERA OBSCURA), கேமரா லூசிடா (CAMERA LUCIDA) என்ற இருவகையான புகைப்படக் கருவிகள் – ஓவியர்கள் தங்களுடைய படிமங்களைக் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டவை.