Project Description

தமிழ் படிமங்கள் நிழல்கள் பிரதிபலிப்புகள்

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?

அல்லது ஒளியையா?

ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…

ஆர் ஆர் சீனிவாசன்

André Kertész

ஆந்த்ரே கெர்தஸ் | மூலம் இணையம்

ஆந்த்ரே கெர்தஸ் – ‘உலகை முதலில் புதிதாகப் பார்த்தார்’ 

பாண்டிச்சேரி ஆரோவில்லில் எனது மனதிற்கு மிகவும் பிடித்த இத்தாலியப் புகைப்படக் கலைஞர் இரினோ குர்க்கியைச் (Ireno Guerci) சந்திக்கச் சென்றிருந்தேன். எனது புகைப்படங்களைப் பார்வையிட்டபின், அவர் ஒரு கனத்த புத்தகத்தைத் தூக்கி வந்தார், மேஜையில் எனக்கு நேராக அந்தப் புத்தகத்தை வைத்தார். அப்புத்தகத்தின் அட்டைப் புகைப்படம் என்னை ஏதோ செய்தது, எனக்கு மிகவும் பிடித்தது என்று சொல்வதைவிட, என்னை உடைத்தது என்று சொல்லலாம். தொப்பி அணிந்த ஒரு ஆணும், ஸ்கார்ப் கட்டிய பெண்ணும் திரும்பி நின்றபடி, ஒரு மரத்தாலான கதவுக்குள் எதையோ பார்த்துக் கொண்டிருப்பது போல ஒரு படம். முதல் முறையாக ஒரு புகைப்படம் என்னை உறைய வைத்தது. அது ஒரு வழக்கமான மனதில் இருந்து வந்ததல்ல என்றும் புரிந்தது. பின்பு அந்தப் புகைப்படப் புத்தகம் முழுவதையும் பார்த்து முடித்தேன். ஒரு மியூசியத்தையோ, அல்லது அதிகமான தொல்லியல் எச்சங்கள் கொண்ட நகரத்தையோ சுற்றிவந்த அனுபவம். புகைப்படங்களில் அதுவரை பதிவுசெய்யப்பட்டிருந்த வாழ்க்கை, யுத்தங்கள், எல்லாவற்றையும் தாண்டி ஏதோ ஒரு புதிய தரிசனமாகவே அந்தப் புகைப்படங்கள் அமைந்தன. அதிலுள்ள பல புகைப்படங்களை ஏற்கனவே நிறைய இடங்களில் அவரின் பெயர் தெரியாமல் பார்த்ததும் என் நினைவுக்கு வந்தது. குறிப்பாக இரு புகைப்படங்கள் எனக்கு முன்னரே ஆழமாக அறிமுகமாயிருந்தன. ஒரு சிறுவன் ஒரு நாய்க் குட்டியைத் துப்பாக்கியைப் பிடிப்பதுபோல பிடித்திருப்பான். ஏதோ ஒரு பத்திரிகையில் வந்ததை வெட்டி ஒட்டி, என்னுடைய எழுதும் மேஜையில் தினசரி பார்ப்பதை சிறு வயதில் வழக்கமாகக் கொண்டிருந்தேன். அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் கெர்தஸ் என்று எனக்குத் தெரியாது.

இரண்டாவது புகைப்படம், ஒரு நீளமான படிக்கட்டுகளின் இடையில் ஒரு பறவை பறந்து கொண்டிருக்கும். யுனெஸ்கோ கூரியரின் தமிழ் இதழில்  அட்டைப்படமாக அது வந்திருந்தது. அந்தப் பறவை, குறிப்பிட்ட அந்த இடத்தில் பறப்பதைப் படம் எடுக்க அந்தப் புகைப்படக் கலைஞர் பத்து வருடங்களுக்கும் மேலாகக் காத்திருந்தார் என்ற குறிப்பும் அதில் இடம் பெற்றிருந்தது. அந்தப் படமும் என்னுடைய வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது நினைவு வந்தது. அதை எடுத்தவரும் கெர்த்தஸே.

பாண்டிச்சேரியிலிருந்து திரும்பி சென்னை வந்து மூன்று நாட்களுக்கும் மேலாக கெர்த்தஸின் அட்டைப்படத்தை என்னால் கடந்து செல்ல இயலவில்லை. பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் கெர்த்தஸைப் பற்றிப் புலம்பிக் ண்டிருந்தேன். அவரின் புகைப்படங்களை மற்ற நண்பர்களிடம் காண்பித்தபோது, அது அவர்களை அவ்வளவாகப் பாதிக்கவில்லை என்பதையும் உணர்ந்து கொண்டேன். அவருடைய புகைப்படங்கள் என்ன செய்கிறது என்று என்னால் யோசிக்க முடிந்தது.

பின்பு அவரின் புகைப்படங்கள் நேரடியாக எதனையும் பதிவு செய்யவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் காட்சிப்படுத்தும் விதம் என்பது ஆழமான மனவெளியை உருவாக்கும் மனோதத்துவம் சம்பந்தப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். ‘நவீன புகைப்படக் கலையின் தந்தைஎன்று புகைப்பட விமர்சகர்கள் இவரைக் குறிப்பிடுகின்றனர். என்னைப் பொறுத்தவரை இவரின் புகைப்படங்கள், நவீன புகைப்படக் கலைக்கும், நவீன ஓவியத்திற்கும் நடுவில் உள்ளன என்று சொல்லலாம். வெறுமனே யதார்த்தக் காட்சிகளின் பதிவு என்பதைவிட அன்றாட, சாதாரண வாழ்வின் காட்சிகளை ஆழமான வெளிகளாகவும், நாடகார்த்தமான புனைவுகளாகவும் அவர் மாற்றிக் காட்டினார். இருள் மனதின், சிடுக்குகளை, சிறு அசைவின் மூலம் உணர வைத்தார். இவருடைய கேமராவிலிருந்தேநவீனப் புகைப்படக்கலைதோன்றியது. காத்தியே பிரெஸ்ஸான், ராபர்ட் காபா, பிரஸ்ஸாய் போன்ற மாபெரும் புகைப்படக் கலைஞர்கள் இவராலேயே உத்வேகம் பெற்று தங்களது படைப்புகளைப் படைத்தார்கள். எனவேதான் பிரஸ்ஸோன் கெர்தஸ்ஸைப் பற்றிக் குறிப்பிடுகையில்நாங்கள் இப்பொழுது எதையெல்லாம் படைக்கிறோமோ, அதை முதலில் செய்தவர் கெர்தஸ்என்றார்.

© ஆந்த்ரே கெர்த்தீஸ் | மூலம் இணையம்

புகைப்படக் கலை தோன்றி வாழ்வு பதிவாகும் தருணங்களில், அதில் குழந்தையின் கண்களைக் கொண்டு பார்த்தவர் ஆந்த்ரே கெர்தஸ். அவருடைய பார்வை எல்லா வயதிலும் குழந்தையின் முதல் பார்வையாகவே இருந்தது. 1912இல் புகைப்படக் கலைஞராக வாழ்க்கையைத் துவங்கிய கெர்தஸ் 1985 வரை கேமராவின் வழி உலகைப் புதிதாகப் பார்த்தார். 1894 ஹங்கேரியில் பிறந்த கெர்தஸ், 1912இல் படிப்பை முடித்த பிறகு தெருப்புகைப்படக் கலைஞரானார். 1925இல் அவர் பாரிசுக்கு இடம்பெயரும்வரை அவரின் புகைப்படங்கள் யுத்த வாழ்வைப் பிரதிபலித்தன. 1914-1915களில் அவர் தன்னுடைய சக போர்வீரர்களைப் படம்பிடித்தார். இக்கால கட்டத்தில் சமூகத்தின் விளிம்புநிலை மக்களான நாடோடிகள், பிச்சைக்காரர்கள், ஊரைவிட்டு இடம்பெயரும் போர்வீரர்கள் அவருடைய புகைப்படங்களில் இடம்பெற்றனர். ஹங்கேரியின் சாதாரண மக்கள், தெருக்காட்சிகள், யாரும் பார்க்காத விழிகளில் அவை பதிவாயின. தெருவோர வயலின் இசைக் கலைஞர், விவசாயம் செய்யும் காதலர்கள் என்று ஹங்கேரிய வாழ்வின் புற அம்சங்களை, தனித்துவத்தோடும் குழந்தையின் கண்கொண்டும் படைத்தார். மிகையுணர்ச்சியில்லாத அப்படைப்புகள் ஹங்கேரிய வாழ்க்கையின் பெருமிதங்கள். இன்றும் ஹங்கேரியைப் பற்றி வரலாற்றுத் திரைப்படங்களை உருவாக்குபவர்களுக்கு, ஆழமான யதார்த்த அடித்தளத்தை தன்னுடைய புகைப்படங்களில் உருவாக்கிள்ளார் கெர்தஸ்.

அவருடைய ஹங்கேரியப் புகைப்படக் காலம் 1912முதல் 1925வரை. அதற்குப் பிறகு 1925முதல் 1936 வரை அவருடைய ஐரோப்பாவில், பாரிசில் உருவாக்கப்பட்டுள்ளது. பாரிசின் ஓவியச் சூழல் அவருக்கு மிகவும் ஏற்புடையதாயிருந்தது. நிறைய பத்திரிகைகளுக்குப் புகைப்பட வல்லுநராகவும், பதிப்பாளர்களுக்கு அட்டைப்படங்கள் எடுத்துத் தருபவராகவும் இருந்தார். அவருடைய புகைப்படங்களைப் பார்த்த எல்லோரும் ஒரே தொனியில் கூறியது என்னவெனில்நீங்கள் காலத்துக்கு முன்னதாக இருக்கிறீர்கள்என்பதாகும்.

புகைப்படங்களில் கலை ஆளுமைகளை உருவப்படம் எடுக்கும் முறையையும் இவரே ஆரம்பிக்கிறார். உருவப்படத்தைக் கலைப்படைப்பாக்கும் ரசவாதம், இவர் எடுத்த புகைப்பட உருவச்சித்திரத்தில் தெறிக்கிறது. மாண்ட்ரியன், சகால், கால்டர், ஜஸன்ஸ்டின் ஆகியோரின் உருவப்படங்கள் இதற்கு உதாரணங்கள்.

அவருடைய படைப்புகளில் உள்ள வியப்பும், நளினமும் எதிர்பாராத தருணங்களும், தெருவில் காணக் கிடைக்காத காட்சிகளாகப் பரிணாமம்பெற்றதற்குப் புதிய கேமராக்களின் வருகையே முக்கியமானதாக இருந்தது. இரண்டு, மூன்று பேர் தூக்கிச் செல்லும் கேமராவிலிருந்து, கையடக்க லெய்கா கேமராவின் வருகையில் புகைப்படக்கலை ஒரு தீவிரமான கலையாக மாறியது கெர்தஸினால்தான்.

இவருடையப் புகைப்படக்காட்சி 1927ல் பாரிசில் நடைபெற்றபோது, தாதாயிசக் கவிஞர் பால் டெர்மி கெர்தஸின் புகைப்படங்களுக்கு எழுதிய முன்னுரை கவிதையில்உங்களால் புதிதாகப் பார்க்கமுடிய வில்லையெனில், யாரால் பார்க்க முடிகிறதோ, அவர்களை நினையுங்கள்என்று எழுதினார். “கண் தெரியாதோராய் இருக்கும் எங்களின் வீட்டில் கெர்தஸின் கண்களேசகோதரன் நோக்கும் கண்களாகும்என்றார். சாதாரண  காட்சிகளை, யதார்த்தமாகப் பதிவு செய்பவராக அவர் காட்சியளித்தாலும், சாதாரணக் காட்சிகளை, மிகை யதார்த்தப் புனைவுகளாக மாற்றிக் காண்பித்தார் என்பதே உண்மை.

 1936முதல் இவருடைய மூன்றாவது காலகட்டம். அமெரிக்காவில் தொடங்குகிறது. 1949வரை பெரும்பாலும் பத்திரிகைகளுக்குத் தேவையான புகைப்படங்களை எடுப்பவராயிருந்தார். இதில் அவருடைய கவனக்குவிப்பு ஃபேஷன் மற்றும் இன்டிரியர் புகைப்படக் கலையாகவே இருந்தது. 1949 முதல் 1962வரை அவர் காண்டே நோஸ்ட் பதிப்பகத்திற்காக மட்டும் வேலை செய்பவராக இருந்தார். பின்பு 1963முதல் 1985 வரை எல்லாவற்றிலுமிருந்து விடுபட்டு வாழ்வின் அந்தரங்கமான, கவித்துவப் படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடைய இறுதிக் காலம்வரை எண்ணற்ற விருதுகளையும், சிறப்புகளையும் பெற்றார்.

© ஆந்த்ரே கெர்த்தீஸ் | மூலம் இணையம்

அவருடைய படைப்புகள் எல்லாவற்றையும் உதறிக்கொண்டு எளிமையான புகைப்படங்களாகவே இருந்தன. வெறுமனே புகைப்படக்கலைஞராக மட்டுமல்லாமல், ஓர் ஓவியராக, கவிஞராக, நகைச்சுவையாளராக அவர் இருந்தார். புகைப்படக்கலையில் ஓவியத்தின் பாதிப்பை இவரின் படங்களில் உணரலாம். குறிப்பாக சிதைக்கப்பட்ட நிர்வாண உருவங்கள், அசையாப் பொருட்களின் சித்திரங்கள் இவருடைய ஓவிய ஆர்வத்தை வெளிப்படுத்தின. இரு வேறு காட்சிகளை இணைப்பதும், ஒரே புகைப்படத்தில் பல்வேறு புகைப்பட அனுபவங்கள் பின்னப்பட்டிருப்பதும் இவரிடமே தொடங்குகிறது. அரூபம், க்யூபிசம், ஆவணப்பட யதார்த்தம் என்று பலவகையான மன உணர்வுகளை ஒரே புகைப்படத்தில் சித்தரிப்பவராக இருந்தார். தன்னுடைய இறுதிக்காலத்தில் பறவைகளை அதிகம் படம்பிடிப்பவராக இருந்தார். ஆனால் காட்டுயிர் புகைப்படக் கலைஞராக இல்லை, பறவைகளைப் படம்பிடிப்பதன் மூலம் வாழ்வின் பேசாத தருணங்களைப் பேச வைத்தார். புகைப்படங்களை ஓவியமாக மாற்றிக் காட்டினார். அவர் எதைச் செய்தாலும் புதிதாக இருந்தது.

அமெரிக்கர்கள் அவருடைய புகைப்படங்களை, ‘அதிகம் பேசும் புகைப்படங்கள்என்றனர். குழந்தைகளைப்போல பேசாத ஓர் இடத்திலிருந்து இவற்றையெல்லாம் அவர் படைத்தார். ஒவ்வொரு நாளும் இவ்வுலகத்தை வியப்புகளும், அற்புதங்களும் நிறைந்த குழந்தையின் கண்கொண்டு…….

தமிழ்  படிமங்கள் நிழல்கள் பிரதிபலிப்புகள்  

ஆர் ஆர் சீனிவாசனின் புகைப்படக் கலைஞர்கள் குறித்த படிமங்கள் நிழல்கள் பிரதிபலிப்புகள் பத்தி. 13 மார்ச் 2017 அன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் நூல்கள் ஆசிரியர் மற்றும் / அல்லது ஃபோட்டோமெயிலின் பதிப்புரிமைக்கு உட்பட்டவை.

ஆர். ஆர்.சீனிவாசன்

தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.