Project Description

தமிழ் மொழிமாற்றம்

எனது கோவமும் இதர கதைகளும் © அபுல் கலாம் ஆசாத் 2010

பேசாத கல்லும், விளையாட்டுப் பொம்மையும் 

வேனல் காற்று, சேர நாட்டு பாலக்காட்டின் பரந்த நிலப்பரப்பில், வரிசையாக உயர்ந்து நிற்கும் பனைமரங்களின் சிகரங்களில் மாட்டிக்கொள்ளும். அதன் வடகிழக்கு எல்லையில், மலையாளம், பண்டைய மெய்ப்பொருள், இலக்கியம் மற்றும் இசையியலின் மொழியான தமிழோடு கலக்கும். பகல் வேளைகளில் இந்தப் பனைமரங்கள் பின்னோக்கி ஓடும்; இரவுப் பொழுதுகளில் இவை, ஆண்களைக் கவர்ந்து, மரங்களின் உச்சத்திற்கு இழுத்துச் சென்று, அவர்களது ஆண்மையினைப் புணர்ந்து, பெண் எட்டுக்கால் பூச்சியினைப்போல அவர்களை தின்றுவிட்டு, வெறும் நகங்களையும் முடியையும் சொந்த பந்தங்களுக்கென விட்டுச்செல்லும் இரத்தக்காட்டேரிகள் நடமாடும் மாயமாளிகைகளாக உருமாறும். இந்த நிலம், கற்பனைக்கதைகள் அளவிற்கு நிஜமானதாகும். அல்லது, கற்பனைக்கதைகள், நிலம் போலவே உண்மை எனலாம். குமரிக்கண்டத்தின் இந்தப் பகுதிக்கு தங்களது ஆட்சியினை நிறுவும் எண்ணத்தில் வந்திருந்த சுல்தான்கள், இஸ்லாமியக் கோமான்களை விட்டுச்சென்றனர். அவர்களும், நாட்டுமக்களுடன் நட்பிணக்கத்துடன் ஒருங்கிணைந்து வாழத்துவங்கினர். வடகாற்றினைப் போலவே அரேபியக் குதிரைகளில் புயல் போல் வந்திறங்கிய ராவுத்தர் (இஸ்லாமிய கோமான்க)களை வேதம் ஓதும் பார்ப்பனரின் தெருக்கள் ஒருபோதும் வெறுத்தொதிக்கியதில்லை. பார்ப்பனர்களைப் போலவே ராவுத்தர்களும் தமிழ் கலந்த மலையாளம் அல்லது மலையாளம் கலந்த தமிழ் பேசினர். பாலக்காட்டில் எல்லாருமே அதிபுத்திசாலிதான். சிலர் இசை அமைத்தனர். சிலர் இலக்கியம் படைத்தனர். வேறு சிலரோ அருமையான கேலிச்சித்திரம் வரைந்தனர்; மேலும் பலரோ பிம்பங்கள் உருவாக்கினர்.

சமகாலத்தில் மிகவும் முக்கியமான புகைப்படக்கலைஞர்களுள் ஒருவரான அபுல் ஆசாத், காயல்பட்டிணத்தில் வந்திறங்கி, குதிரை மீதேறி பாலக்காடு வழியாகக் கேரளா சென்ற ராவுத்தர் பரம்பரையின் வழித்தோன்றலாகவே தன்னைக் கருதினார். இப்பொழுதும் அவ்வண்ணமே எண்ணுகிறார். இவர் 2010களில், கொச்சியிலுள்ள மட்டாஞ்சேரியிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள திருவண்ணாமலைக்கு இடம்பெயர்ந்ததே தனது கலாச்சார ‘ஆணி வேரை”த் தேடித்தான் எனலாம். ஆசாத் தமிழ் சரளமாகப் பேசுவார். திருவண்ணாமலையில் வாழத்துவங்குவதற்கு பல வருடங்களுக்கு முன்பே, குறிப்பாக டில்லியில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ.)வில் புகைப்பட நிருபராக பணியாற்றும் போதே தனது மூதாதையரின் மொழியான தமிழினை நினைவு கூற முயற்சி செய்தார். உண்மையில், ஒரு புகைப்படக்கலைஞராக ஆசாத் ஒரு குறிப்பிட்ட மொழியின் நாயகனல்ல. தனக்கான ஒரு மொழி இல்லாத காரணத்தினால், தனக்கு அந்தச் சமயத்தில் வழங்கப்பட்ட அல்லது அந்தச் சமயத்தில் தனது சுற்றுப்புறத்தில் புழக்கத்தில் உள்ள மொழியில் பேசுவார். ஆதலால், வட இந்தியாவில் இருந்தபோது, நாட்டு மக்களுடன் இந்தியில் பேசுவார்; நண்பர்களிடையே இருக்கும் போது, ஆங்கிலத்தில் பேசி, மலையாளத்தில் சிரித்து, தமிழில் எள்ளி நகையாடுவார். 1996-97களில் மேற்படிப்புக்காக பிரெஞ்சு நாடு சென்றிருந்த போது, அங்கே ஆசாத் பிரெஞ்சு மொழியில் பேசியதாக ஒரு வதந்தி உண்டு. 1993ம் ஆண்டு, ஸ்ரீநகரில் உள்ள ஹஸ்ரத் பால் மசூதியினுள், இந்திய ராணுவத்தின் செயல்களையும், காஷ்மீர் கிளர்ச்சியாளர்களின் போராட்டத்தையும் புகைப்படம் எடுத்து மாட்டிக் கொண்ட பொழுது, உயிரைக் காப்பாற்றிய ஜின்ஸ் மற்றும் மலாக்சிடம் எந்த மொழியில் ஆசாத் பேசியிருந்திருப்பார் என நான் இப்பொழுதும் வியப்பது உண்டு.

தீண்டத்தகாதவர்கள் © அபுல் கலாம் ஆசாத் 2000-2005 | கைவண்ணம் பூசப்பட்ட புகைப்பட அச்சு

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, அபுல் தனது சுயாதீனப் படைப்புகளை காண்பிக்கும்பொழுது பலரும், நான் உட்பட, அவற்றை செயற்கரியச் செயலாகவும், அதன் காரணத்தினால் திருப்தி அளிப்பதாக இல்லையென்றே கருதினோம். அப்பொழுது பிரபலமாகிக் கொண்டிருந்த, புகழ் பெற்ற பத்மஸ்ரீ பட்டம் பெற்ற புகைப்பட நிருபரும், பல இந்திய இளம் மற்றும் வளர்ந்து வரும் புகைப்பட நிபுணர்களால் பின்பற்றப்படும் புதிய பாணியின் காரணகர்த்தாவும் ஆகிய ‘ரகுராய்’ பாணி புகைப்படங்களை ஆசாத் காண்பிக்கவில்லை. அதே சமயம் மிகவும் பாராட்டத்தக்க ‘போர் ஆவண’ புகைப்பட நிபுணரான ‘கிஷோர் பரேக்கின்’ வகையினையும் அது சேரவில்லை. ஆசாத்தின் புகைப்படங்கள் வித்தியாசமாகவும், அதே சமயத்தில் மனதினை சஞ்சலப்படுத்தும் வகையிலும் இருந்தது. நேருவின் குடும்ப நண்பர் மற்றும் சுதந்திர இந்தியாவின் பிரபல நவீன கட்டடக் கலைஞரான ஹபீப் ரகுமான் மற்றும் நடனக் கலைஞர் இந்திராணி ரகுமானின் மகனும், தலை சிறந்த சமகால இந்திய புகைப்படக் கலைஞர்களுள் ஒருவரும் சிறந்த சமூக ஆர்வலருமான ராம் ரகுமான், அவரது இயல்பான கருப்பு நகைத்திறம் மற்றும் ஒன்றன் மதிப்பினை வெகுவாக குறைத்துக் காண்பிக்கும் ‘லெகு’ பாணியில் வடக்கிந்திய அரசியல் அநாகரிகத்தின் அடிமடியினை ஆவணம் செய்து வந்தார். பழமைவாத வட இந்திய பொதுச் செயற்களத்தில், தற்செயலாய் வெளிப்படும் ஓரின சிற்றின்ப அறிகுறிகளை புகைப்படம் எடுப்பதில் முனைப்புடன் இருந்தார். சமீபத்தில் பத்ம ஸ்ரீ பட்டம் பெற்ற பிரபலமான புகைப்படக்கலைஞர்களுள் ஒருவரும் தலை சிறந்த கலை விமர்சகர் மற்றும் கவிஞருமான ரிச்சர்ட் பார்த்தலோமியா மற்றும் நாடகக் கலைஞர் ரதிபத்ராவின் மகனுமான பாப்லோ பார்த்தலோமியா போலல்லாது தீவிரமான பேரார்வத்துடன் ராம் ரகுமானும் அபுல் ஆசாத்தும் உத்திர பிரேதசம் மற்றும் டில்லியின் மையப்பகுதிகளிலிருந்து தோன்றிய நேர்த்தியான சமயச்சார்பின்மையின் கடைசி அத்தியாயத்தை ஆவணப்படுத்தி வந்தனர். அபுல் ஆசாத் அதற்கும் மேற்படியான ஒன்றை செய்து வந்தார். தனது சுய ஈடுபாட்டால், தனிப்பட்ட ஒரு புகைப்பட தொகுப்பினை உருவாக்கி வந்தார். அவை பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஆவணப்படங்களின் உருவம் மற்றும் அச்சுகளின் படித்தரத்தினை மீறுவதாக இருந்தது. முன்முடிவுகளுடன் செய்யப்பட்ட இடைச்செருகல்களும் நீக்கங்களும் அளவிற்கும் அதிகமாகக் காணப்படும். அவரது படைப்புகளில் உருவங்கள் இல்லாதது போலவே ஒரு தோற்றம் இருக்கும்; அதற்குப் பதிலாக, ஒரு கலைஞன், தனக்குத்தானே சிகரம் தொட்ட அடையாளக் கொடியிடுவது போல, முன்சிந்தனையுடன் தானே உண்டாக்கிய கிராபிட்டி போன்ற கீறல்களும் வடுக்களும் காணப்படும்.

அதன் அடிப்பாகத்திலுள்ள ‘ஒப்பனையற்ற’, அதன் காரணமாக கவர்ச்சியற்றுத் தோன்றுகிற உருவங்கள் கேள்விகளைத் தூண்டும்; அல்லது ஏமாற்றம் அளிக்கும். ஆசாத்தோ உணர்ச்சியார்வம் எதுவும் காண்பிக்காமல், எந்தவித விளக்கமும் அளிக்காமல் அமைதிக்காப்பார். அவரைப்பொறுத்தவரை வடுக்களும் கீறல்களும் மிகுந்த அச்சுகளை காண்பிக்கின்றார். அவ்வளவு தான். ஒரு நாள், அஞ்சல் அட்டை அளவிலுள்ள புகைப்பட அச்சு தொகுப்பு ஒன்றினைக் காண்பித்தார். இந்திய தேவ தேவியர்களின் பிம்பங்களே அவை. அவரது மயூர் விஹார், மூன்றாம் கட்டத்தில், இரண்டு அறை உள்ள அடுக்கு மாடி வீட்டுச் சுவர்களில் தலைகீழாக அந்த அச்சுகள் ஒட்டப்பட்டிருந்தன. அதனைக் கண்டவர் அனைவரும் தங்களது முதுகுத்தண்டினூடே ஒரு நடுக்கம் பாய்ந்தது போல் உணர்ந்தனர். காரணம், நம்முடைய அரசியல் தட்ப வெட்ப சூழ்நிலை அப்போதோ மாறியிருந்தது. 1980ம் ஆண்டு இறுதியில் மண்டல் கமிஷனுக்குப் பின்பும், வரலாற்று முக்கியம் வாய்ந்த, துரதிட்டம் பிடித்த பாப்ரி மசூதி இடிப்பிற்கு (1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் நாள்) பின்பும், சமூக அரசியல் விவாதங்கள் புதிய பாதையில் பயணிக்கத் துவங்கியிருந்தன. ஆசாத் தன்னை ஒரு சாதாரணப் ‘பத்திரிகை புகைப்பட நிருபராக’ காண்பிக்க முயற்சி செய்தார். ஆயினும் அவருள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருந்தது. மதச்சாற்பற்றவரான ஆசாத் தனது பெயரின் ரெட்டைப் பரிமாணத்தின் தாக்கத்தை பெரிதும் அனுபவித்திருந்தார். ஆசாத் ஒரு நேரத்தில் சந்திரசேகர் ஆசாத் போன்ற புரட்சியாளனை நினைவுப்படுத்தும் இந்துப் பெயராகவும், தென்னிந்தியப் பகுதிகளில் இஸ்லாமிய பெயராகவும் அறியப்படுகின்றது. வேண்டுமென்றே, தீர்மானத்தோடு தமது பெற்றோர் தனக்கிட்ட ‘பெயரினை’, தனது பிறப்பின் நற்சான்றிதழின் துணைகொண்டு, தன்னுடைய மத வாழ்வினை எப்பொழுதும் பிரச்சினைக்குரியதாகவே ஆக்கிக்கொண்டிருந்தார் ஆசாத்தின் நண்பரான ராம் ரஹ்மான். இந்தச் சூழலில் தான் பிரபலமான இந்திய சுதந்திர இஸ்லாமிய தலைவரின் நினைவாக, அபுல் கலாம் ஆசாத் தனது பெயரினை சுமக்கிறார். வெளிப்படையாக இஸ்லாமியப் பெயராயினும், அது ஒரு இந்துப் பெயராகவும் இருக்கிறது. ஆசாத் மதச்சார்பற்றவர். முஸ்லிமும் அல்ல. இந்துவும் அல்ல. ‘தின் இல்லாஹி’ இப்பொழுது இருந்திருந்தால், அவரது கூட்டத்தில் ஆசாத்தும் ஒருவராக இருக்கக்கூடும். அது சாத்தியமில்லாத தற்போதைய காலக்கட்டத்தில், ஆசாத் முஸ்லிமை விட, இந்து மதத்தின் துறவு நிலை மற்றும் தனிமனித சுதந்திர நிலைப்பாட்டின் மீது சாய்ந்து நிற்கும் ஒரு சூபி போல் வாழ்கிறார்.

சென்டிமென்டல் © அபுல் கலாம் ஆசாத் 2005-2010 | டிஜிட்டல் ஆர்கைவல் அச்சுகள்

எதுவாகிலும், ஆசாத் 1990களில் உருவாக்கிய படைப்புகள் மனசஞ்சலம் அளிக்கும் வகையில் இருந்தது. ஏனென்றால் அவர் அரசியல் மற்றும் மதங்களின் அவலத்தினை, முன்னெப்போதுமில்லாத வகையில், புதியதொரு புகைப்படத் தொகுப்பாக உருவாக்கி வந்தார். சர்ச்சைக்குரிய அந்த பத்தாண்டுகளில் யாரும் இந்த படைப்புகளை பொது மக்கள் காட்சிக்கு வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க சாத்தியமில்லை. 1990களில், டில்லியில் பல படைப்புகள் கண்காட்சி நடைபெறும் போது காட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ளன. சில சமயங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்சிகளே நிறுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. எம். எப். ஹுசைன் முற்றுகையிடப்பட்டு வேட்டையாடப்படுகிறார். அருங்காட்சியகங்களும், காப்பாளர்களும் கவனமாகப் பிரச்சினை வராத விதமாக செயல்பட்டனர். இந்த அழுத்தத்தினை எதிர்கொண்ட ஒரே நிறுவனம் டில்லியில் உள்ள ‘சஹ்மத்’ ஆகும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் முரண் கருத்துள்ள புகைப்படங்களை காண்பித்தும் எதிரிடைக் குரல்களை எழுப்பியும் வந்தனர். ஆயினும், ஆசாத்தின் படைப்புகள் இந்தக் கலை நிகழ்விடத்திலும் காண்பிக்கப்படவில்லை. பாதுகாப்பான வேலைக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கும் ஆசாத் விடை கொடுக்கும் தருணம் ஆகியது அது.

புதிய நூற்றாண்டின் துவக்கத்தில் டில்லியை விட்டு கொச்சியிலுள்ள மட்டாஞ்சேரி செல்கிறார். அங்கு அவர் ‘மட்டாஞ்சேரி பாணி’ என்றழைக்கும் வகையில் புதிய புகைப்பட பாணி வளரக் காரணமாகிறார். ஆண்டுகள் கடந்தன. ஆசாத்தும் தான் வாழ்ந்திருந்த உள்ளூர் சமூகத்தினையும், தன்னையும், தனது வாழ்வின் தனிப்பட்ட மற்றும் சமூக அரசியலையும் பல்வேறு பரிமாணங்களில் புகைப்படம் எடுத்து வந்தார். அவர் கேரளாவின் அரசியல் க்ராபிட்டியை கோட்பாடு அல்லது அரசியல் ஆக்கும் போலிப் பகட்டு இல்லாது புகைப்படம் எடுத்தார். உள்ளூர் டீக்கடை மற்றும் கள்ளுக்கடைகளை ஆவணம் செய்தார். நவயுக சினிமாக்கள் ‘சாதாரண மனிதர்களின்’ பார்வையிலிருந்து கதைகளை சித்தரிக்க துவங்குவதற்கு முன்பே ஆசாத் கேரளாவின் வாழ்வை ‘சாதாரண மனிதர்களின்’ நோக்கிலிருந்து புகைப்படங்கள் மூலமாக விவரித்து வந்தார். வருத்தத்தை தூண்டும் விதமாகவும், கூர்மையான முனைப்புடனும் ஆசாத் காட்சி குறிப்பேடுகளின் மூலம் தன்னையே ஆவணப்படுத்தி வந்தார். சாதாரண விளையாட்டுப் பொம்மையும், ஏன் ஒரு கல்லும் கூட ஆசாத்திற்கு கதை சொல்ல ஒரு கருவியாகிறது.

2007ம் ஆண்டில் கொச்சியிலுள்ள இஷ்கா கேலரியில், ஆசாத் தனது நிஜ உருவ அளவிலான புகைப்பட அச்சுகள் சிலவற்றை காட்சிக்கு வைத்திருந்தார். கொச்சியிலுள்ள புகைப்பட மற்றும் பிரிண்ட் நிபுணர், கலைஞர், மற்றும் இசையமைப்பாளர் ஜோசப் சாக்கோலா இந்த ஆபத்தான முயற்சியினை முன்னடத்த தயாராகிறார். மாடுகள் மற்றும் அம்மாடுகள் நிற்கும் இடத்தையும் காண்பிக்கும் ஒரு புகைப்படத்தொகுப்பே அது. பிலிம் நெகடிவில் இலேசாக நிறமூட்டி அப்படியே அச்சடித்தது போல் அவை இருந்தது. ஆசாத் தொலைநோக்குப் பார்வையுடன் செய்த இந்தப் படைப்புகளின் உட்கருத்து அப்பொழுது பலருக்கும் புலப்படவில்லை. பல வருடங்களுக்குப் பின்பு தற்பொழுது நமது நாட்டின் புதிய அரசியல் விவாதங்களில் “மாடு” எவ்வாறு ‘நவீன’ தேசியயியலினை வரையறுக்கும் காரணியாக்கப்பட்டதை நாம் காண்கிறோம். ஆசாத் இதனை முன்பே கண்டிருந்தார். மாடுகளை இவ்வாறு பல்வேறு கோணங்களில் காண்பித்தது, வளர்ந்து வந்துக்கொண்டிருந்த அரசியல் போக்கினைப் பற்றிய சப்தமில்லாத கதறல் ஆகும். கடுமையான விமர்சனமாக இந்தக் மௌனக்கதறல் ஓங்கி ஒலிக்கிறது. இந்தப் படைப்புகள் டில்லியிலோ அல்லது மாட்டினை போற்றும் மக்கள் வாழும் பகுதியிலோ காட்சிக்கு வைத்திருந்தாலும் யாரும் எந்தவித எதிர்ப்பும் தெருவித்திருக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் புகைப்படங்கள் ஒரு கலைஞனின் பரபரப்பான மனதினை சித்தரிக்கவில்லை. யாரும் எளிதில் கண்டுணர முடியாத வகையில், மிகவும் நுட்பமாகவும் எள்ளல் மற்றும் கருப்பு நகைச்சுவை தொணியிலும் மாடுகளை காட்சிப்பொருள் சின்னமாக காண்பித்திருந்தார்.

பொறி © அபுல் கலாம் ஆசாத் 1999 – 1996 | கீறல் மட்டும் டூடுல் செய்யப்பட்ட சில்வர் ஜெலட்டின் அச்சு

இந்துச் சூழலினுள் ‘பெண்ணிய சடங்குகளை’ தனது திருப்புமுனைப் புள்ளியாக்கிய ஆசாத், பண்டையத் தமிழகத்தில் (தற்போதைய கேரளா மற்றும் தமிழ்நாட்டில்) பரவலாக உள்ள பெண் தெய்வ வழிப்பாட்டில் தனது கவனத்தை செலுத்தினார். இந்த ஈடுப்பாட்டின் வெளிப்பாடாக ‘கருத்தவள்’ என்ற படைப்பு இருந்தது (சங்ககால தமிழ்க்காவியமான சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியை வணங்கும் பெண் தெய்வ மரபினர் பின்பற்றும் புராதன சடங்கினை கருப்பு வெள்ளையில் புகைப்படம் எடுத்திருப்பார்.). தனது புகைப்படங்கள் அல்லது விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆசாத் புதிய கோட்பாடோ அல்லது அரசியல் வாதமோ முன்வைக்காத காரணத்தினால், பெண்ணிய தத்துவவாதிகள் இந்தப் படைப்புகளை குறித்து ஆய்வு ஏதும் செய்யவில்லை. வரும் ஆண்டுகளில் அத்தகைய ஆய்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்பது எனது கணிப்பு. அதே சமயத்தில், ஆசாத் குறைந்த புகைப்பட நுட்பத்தினை (Lo-Fi / minimal) கையாண்டு, தற்பொழுது இன்ஸ்டாக்ராம் (Instagram App) என்றழைக்கப்படும் புதிய வகை புகைப்படங்களை உருவாக்கினார். உண்மையில், ஆசாத் சமூக வளைத்தளங்களில் இன்ஸ்டாக்ராம் மற்றும் அது போல் உள்ள மற்ற பிற அப்ளிகேஷன்கள் வருமுன்பே டிஜிட்டல் மற்றும் அனலாக் முறையில் தான் உருவாக்கிய புகைப்படங்களை இணைத்து புதிய பாணி படைப்புகளை உருவாக்கி, அவைகளை ஐந்து ஆறு அடி அளவிலான பெரிய அச்சுகளாக்கியிருந்தார். அந்தப்படைப்புகள் பலவற்றை முகப்புத்தகத்திலும் போடத்துவங்கினார் (தென்னிந்தியாவின் போஸ்டர், கட்-அவுட் மற்றும் புகைப்படங்களை அலங்கரிக்கும் ஸ்டுடியோ போட்டோக்ராபி பண்பாட்டின் மற்றும் பாரம்பரிய தஞ்சாவூர், குகை ஓவியங்களின் உந்துதலே இவரது இந்தப் பாணியின் அடித்தளம் எனலாம்). அதன் பின்பு, நவீன நுட்பங்களைக் கொண்டு புகைப்படங்கள் உருவாக்கும் வழக்கத்திற்கு நேர்மாறாக ஆசாத் அடிப்படையான புகைப்படக்கருவிகளைக் கொண்டு பிரமிப்பூட்டுகின்ற பிம்பங்களை உருவாக்கத் துவங்கினார்.

காலம் காலமாக, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் இந்தியா முழுவதும் இருந்து (குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து) திருநங்கைகள் (மூன்றாம் பாலினத்தினர்) ஒன்று கூடி, தங்களது கடவுளான அரவானின் மணப்பெண்ணாகும் வழிப்பாட்டு இடமே கூவாகம். பதினைந்து இருபது நாட்கள் நடக்கும் இந்தச் சடங்கில், அரவானின் மணப்பெண்ணாகி, பின்பு போரில் களப்பலி கொடுக்கப்பட்டதனால் இறக்கும் தங்கள் கணவரான ‘கடவுளின்’ விதவைகளாக மாறுகின்றனர். அதற்குப் பின்பு தமக்கு விருப்பப்பட்ட துணையினைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பெற்று, நகரத்தில் வாழும் நடுத்தர வகுப்பினரின் பொருளீட்டும் போலி கோட்பாடுகளால் ஈர்க்கப்படாமல், அவரவரது மதச்சூழலிற்கேப்ப பெருமித அணிவகுப்பு செய்கின்றனர். கீழ்பட்ட மக்கள் மற்றும் மாறுபட்ட பாற்பண்பு கொண்டவரின் வாழ்வில் அக்கறை உள்ள காரணத்தினால், அபுல் ஆசாத் கூவாகம் வரும் திருநங்கைகளை கடந்த சில ஆண்டுகளாக ஆவணம் செய்து வருகிறார். அது தான் ‘போர், கல்யாணம், விதவை, செக்ஸ், காமம், காதல், சிற்றின்பம்’ என்ற புகைப்படத்தொகுப்பு. திருநங்கைகளை மிகவும் கவனத்துடனும், அதே சமயத்தில் அவரது சுய அடையாளத்தை, ஆண் பெண் ஆதிக்கப் பார்வைக்காக சமரசம் செய்யாமலும் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்பட தொகுப்பினை உருவாக்க அவர் இரண்டு வித முறைகளை பயன்படுத்துகிறார். ஒரு முறையில் பாரம்பரிய லார்ஜ் பார்மட் வியூ கேமெராவினைப் பயன்படுத்தி திருநங்கைகள் மற்றும் விழாச் சடங்குகளில் பங்கெடுக்கும் சாதாரண மக்களை வெள்ளைத் திரையின் முன்பு நிற்க வைத்து புகைப்படம் எடுக்கிறார். அடுத்ததாக, திருநங்கைகளின் இயற்கையான சூழலில், வயல்களில், குளங்களில், கோவில்களில் என சாதாரண தருணங்களை புகைப்படம் எடுக்கிறார். எல்லா வருடமும் இந்தத் திருவிழாவிற்கு ஆசாத் செல்கின்ற காரணத்தினால், பெரும்பான்மையான திருநங்கைகளுக்கு ஆசாத் இருப்பதோ, புகைப்படம் எடுப்பதோ எந்தவித இடையூரையும் அளிப்பதில்லை. பெரிய பாராட்டுகள் பாராட்டுக்களை எதிர்பார்க்காமல, ஆசாத் இந்த புகைப்படங்களை ஒரு வித சடங்குப் போலவே, பக்தியுடன் ஒவ்வொரு ஆண்டும் உருவாக்கி வருகிறார்.

கடந்த மூன்றாண்டுகளாக, திருவண்ணாமலையில் புகைப்பட உலகின் மேம்பாட்டிற்கென ஒரு மவுனப்புரட்சி நடந்து வருகிறது. ஆசாத் 2013ம் ஆண்டு, சமகால புகைப்படக்கலை பாதுகாப்பிற்காக ‘ஏகலோகம் புகைப்படக் கலை அறக்கட்டளை’ (இ.டி.பி ) ஒன்றினை நிறுவியுள்ளார். இந்த அறக்கட்டளை, ஆசாத் முன்வைக்கும் பல்வேறு பொதுப் புகைப்பட திட்டங்கள் மூலமாக தினம் தினம் திருவண்ணாமலையினையும் தென்னிந்தியாவின் பலப் பகுதிகளையும் புகைப்பட ஆவணம் செய்து வருகின்றது. இந்தப் பொது புகைப்படத்திட்டம் வருடத்தில் 365 நாட்களும் எந்த வித பண உதவியுமின்றி நடைபெறுகிறது. ஆசாத்தின் நண்பர்களான இந்தியாவின் தலை சிறந்த புகைப்படக்கலைஞர்கள் பலரும் மற்றும் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து அரிய சமகால புகைப்படக்களஞ்சியத்தை உருவாக்கி வருகின்றனர். திருவண்ணாமலையின் பதினாலு கிலோ மீட்டர் கிரிவலப்பாதை இந்தக் கலைத்திட்டத்தின் மூலமாக பல்வேறு கோணங்களில் புகைப்படப் பதிவுகளாக்கப்பட்டு மூவாயிரத்திற்கும் அதிகமான புகைப்படங்களை ப்ராஜெக்ட் 365 பொதுக்களஞ்சியத்தில் சேகரித்து வைத்துள்ளனர்.

ஹோலி அன்ஹோலி © அபுல் கலாம் ஆசாத் 1995 | சில்வர் ஜெலட்டின் அச்சு

அதன் தொடர்ச்சியாக ஆசாத் 2015ம் ஆண்டு பழங்காலத் துறைமுக நகரங்களான திண்டிஸ், முசிரிஸ், கொற்கை பொதுமைப் புகைப்படக்கலைத் திட்டத்தை துவங்கியுள்ளார். அதன் முதலாம் பாகம் ‘மதிலகம் ரேகைகள்’ என்றப் பெயரில் இளங்கோ அடிகளார் சிலப்பதிகாரக் காவியம் எழுதியபோது வாழ்ந்திருந்த பழங்கால நகரமான ‘மதிலகத்தில்’ சிலப்பதிகார கலைத்திருவிழாவின் ஒரு பாகமாக நடைபெற்றது. ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளை முன்னடத்தும் இந்தத் திட்டங்களின் தகவல்களை இணையதளத்திலும் முகநூல் பக்கத்திலும் போஸ்ட் செய்கின்றனர். இ.டி.பி. நிறுவனம் சமீபத்தில் இந்திய போலாந்து கலைத்திட்டம் ஒன்றினை முன்னடத்தியது. ரஷ்யாவை சார்ந்த புகைப்பட நிபுணர் ஒருவருடன் இணைந்து போட்டோ ப்ராஜெக்ட் ஒன்றைத் திறம்படச் செயல்படுத்தியுள்ளது. சமகாலப் புகைப்படக்கலைஞர்களின் வாழ்வையும், படைப்புகளையும் முறைப்படி ஆர்கைவ் செய்யும் செம்பணியினையும் செய்து வருகின்றது.

ஆசாத் திருவண்ணாமலை முழுக்க தனது TVS 50 பைக்கில் வலம் வருகிறார். திருவண்ணாமலை நகரெங்கும் அவர் அறியப்படுகிறார். ‘அண்ணா’ அல்லது ‘சுவாமி’ என மக்களால் அழைக்கப்படுகிறார். விருப்பம் உள்ளவருக்கு அவர் புகைப்படம் கற்றுத்தருகிறார். நகரத்தில் வாழும் பெரிய பணக்காரரும், தெருவில் வாழும் சாதரண மாணாக்கரும் அவருக்கு உண்டு. இ. டி. பி. க்கு இப்போது தேவை என்னவென்றால், பொருளாதார உதவி. இ.டி.பி. யின் சிறிய வளாகத்தில் உருவாகி வரும் இந்த பெரிய புகைப்படக்களஞ்சியத்திற்கு தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் உதவி செய்ய வேண்டும். ஆசாத் எந்த விதக் குழுவினையும் பிரிவினையும் சார்ந்தவரில்லை. ஒரு புகைப்படக்கலைஞராக அவர் உருவாக்கும் படங்கள் பார்ப்பதற்கு பிரமாண்டமானதல்ல. ஆனால், அவரெடுக்கும் படங்கள் சமகாலச் சமூக சூழலிற்கு பொருத்தமானதாகி தனிப்பட்ட படைப்புகளாக அவை உயர்ந்து நிற்கின்றன. அவரது தேர்ச்சி பெற்ற கண்களுக்கும் கைகளுக்கும் எது தேவை, எது தேவையில்லை என்று பகுத்தறிய ஆழ்ந்த சிந்தனை தேவையில்லை.

அவரது மிகப்பெரியதான கனவும்,வாழ்க்கையுமான, வரலாற்று முக்கியம் பொருந்திய தனிப்பட்ட களஞ்சியத்திற்கும் உதவி தேவைப்படுகிறது. கையில் கேமராவுடன் அலையும் சூபியாக மாறிய ராவுத்தரே அபுல். அவரது முன்னோர் எவ்வாறு மக்களிடம் பேசினரோ அவ்வண்ணமே தமிழ் பேசுகிறார். ஆனால், ஆசாத் எந்தவொரு மொழியிலும் பேசவில்லை என்று தான் நான் எண்ணுகிறேன். அவர் புகைப்படங்களின் மொழியினை பேசுகிறார். உலகில் அறியப்பட்ட, மற்றும் அறியப்படாத எந்த மொழியையும் பேசும் ஆற்றல் கொண்ட புன்னகைக்கும் புகைப்படக்கலைஞனே அபுல் ஆசாத்.

தெய்வீக முகப்பு © அபுல் கலாம் ஆசாத் 1990 – 2000 | சில்வர் ஜெலட்டின் அச்சு

தமிழ்  மொழிமாற்றம்  

ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு சர்வதேச அளவில்  கலைஞர்கள், கலை விமர்சகர்கள் மற்றும் புகைப்பட ஆர்வலர்களால் மிகவும் விரும்பப்பெற்ற கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பத்தி.  புகைப்படக்கலைஞன் அபுல் கலாம் ஆசாத்தின் படைப்புகளைக் குறித்து சமகால இந்திய கலை விமர்சகர் மற்றும் கலை வரலாற்றாசிரியர் ஜோனி முல்லுவிலோகம் இலட்சுமணன். தமிழில், துளசி ஸ்வர்ண லட்சுமி. 10 ஜனவரி 2017 அன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட படங்கள் மற்றும் நூல்கள் ஆசிரியர் மற்றும் / அல்லது ஃபோட்டோமெயிலின் பதிப்புரிமைக்கு உட்பட்டவை.

ஜோனி எம்.எல் ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கலை வரலாற்றாசிரியர், கலை விமர்சகர், கலை கியூரேட்டர், கலை இதழ்களின் ஆசிரியர், மற்றும் கவிஞர். கிரியேட்டிவ் கியூரேட்டிங், கலை வரலாறு மற்றும் விமர்சனம், மற்றும் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றில் மூன்று முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளார். கலை, கலாச்சாரம் மற்றும் அரசியல் தொடர்பான அவரது எழுத்துக்கள் கிரியேட்டிவ் மைண்ட், ஆர்ட் இல்லஸ்ட்ரேட்டட் போன்ற பல அச்சு இதழ்களில் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. பல பிரபலமான ஆன்லைன் கலை பத்திரிகைகளையும் நிறுவி திருத்தியுள்ளார்.

துளசி ஸ்வர்ண லட்சுமி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உமரிக்காட்டில் பிறந்தவர். சென்னையில் உள்ள  சிவ நாடார் கல்லூரியில் எம்.பி.ஏ பயின்றுள்ளார். சமூக வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட இவர் ஆப்ரிக்கா மற்றும் தென்னமெரிக்கா நாடுகளில் பணியாற்றியுள்ளார். சுனாமி மற்றும் தானே புயலின் போது இந்திய மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஏகலோகம் புகைப்படக்கலை அறக்கட்டளையின் இணை நிறுவனர் ஆவார்.