போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Photographs by Linnaeus Tripe
© லின்னேயஸ் ட்ரைப் | மூலம் இணையம்

தென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர், கேப்டன் லின்னேயஸ் ட்ரைப்

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?

அல்லது ஒளியையா?

ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…

ஞ்சாவூர், மதுரை ஆகிய ஊர்களின் சில பழைய புகைப்படங்ககளைப் பார்க்கும் போது இதையெல்லாம் யார் எடுத்தார்கள், எப்பொழுது எடுக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கு தற்செயலாக இணையத்தில் விடை கிடைத்தது… குறிப்பாக சமீபத்தில் தஞ்சாவூரில் பீரங்கி மேடு என்ற இடத்திற்கு சென்று வந்தேன். பரவசத்தைத் தந்த இடம். திடீரென அதன் பழைய படத்தை, அதாவது 160 வருடத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட பழைய புகைப்படத்தைப் பார்த்தேன். முழு விபரங்களும் அதில் இருந்தது…அப்போழுதுதான் கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் என்னும் மகத்தான புகைப்படக் கலைஞரைப் பற்றிப் படித்தேன்.

காலவரிசைப் படி எல்லாவற்றையும் ஆராய்ந்த போது, அவர்தான் தமிழகத்தை முதன்முதலில் புகைப்படம் எடுத்துள்ளார் என்று அறிய முடிந்தது. கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் பற்றி முழுமையாகப் பார்க்குமுன் இந்தியாவுக்கு முதன் முதலில் படமெடுக்க வந்தவர்கள் யாரெனப் பார்க்கலாம்.

ஜான் முர்ரே (Dr. John Murray 1809-1898)

1833

ஜான் முர்ரே என்னும் அமெச்சூர் புகைப்படக் கலைஞர் வங்காளத்தில் மருத்துவ சேவையில் இருந்த போது இந்தியாவின் மிக முக்கியமான கட்டடக் கலைகளைப் படம் பிடித்துள்ளார். அதிலும் முகலாயக் கட்டடங்களை, குறிப்பாக தாஜ்மஹாலை அவர் எடுத்த புகைப்படம், இன்றும் தாஜ்மகாலைப் போலக் காலத்தால் அழியாமல் உள்ளது. (calotype) கேலோடைப் தொழில்நுட்பத்தை முதன் முதலில் இந்தியாவிற்கு அறிமுகப் படுத்தியவரும் இவரே. 1833 முதல் 1871 வரை இந்தியாவை இவர் படம் எடுத்தார். இந்தியாவைப் படமெடுத்த முதல் புகைப்படக் கலைஞர் என் இவரைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.



1854

இவருக்குப் பிறகு வந்தவர் தான் கேப்டன் லின்னேயஸ் ட்ரைப். 1822 முதல் 1902 வரை இவர்தான் ஆங்கிலேயரின் அதிகாரப்பூர்வமான அரசுப் புகைப்படக் கலைஞர். இந்தியாவின் பண்பாட்டை, கட்டடக் கலையை 1854களில் மைசூர் சமஸ்தானத்திற்கு வந்து படமெடுத்துள்ளார். பின்னர் பர்மாவையும் விரிவாகப் படம் பிடித்துள்ளார். இவரைப் பற்றித்தான் பின்னர் பார்க்கப் போகிறோம்.

1857

1857ல் ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்தை (Indian Rebellion 1857) ஒடுக்க, ஆங்கிலேய ராணுவம் வந்த போது அவர்களோடு அலுவலகப் பணியாக புகைப்படக் கலைஞர்கள் நியமிக்கப் பட்டார்கள். இத்தாலியப் பூர்வீகத்தைக் கொண்ட பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் பெலிஸ் பியாட்டோ (Felice Beato)1857ல் சிப்பாய் கலகத்தை ஒடுக்குவதைப் படம் பிடித்தார். இன்னும் கவனமாக நாம் சொன்னால், முதல் அரசியல் புகைப்ப்டக் கலைஞர் என்று இவரைச் சொல்லலாம்.

1863

பின்பு நோட்டிங்கேமிலிருந்து 1863ல் வந்த சாமுவேல் போர்ன் (Samuel Bourne 1834–1912) முதலில் சிம்லாவிலும், பின்பு மும்பை, கல்கத்தாவில் ஸ்டுடியோக்ககளை தொடங்கி, இரு நகரங்களையும் படம் பிடித்தார். போர்ன் அண்ட் செபெர்ட் (Bourne and Shepherd) என்கிற அவரது கம்பெனி இன்னும் இயங்கி வருகிறது.



1865

பின்பு ப்ரிட்டிஷ் ராணுவத்தில் பணிபுரிந்த கேப்டன் எட்மண்ட் டேவிட் லியான் (Edmund David Lyon 1825-1891), 1865ல் உதகமண்டலத்தில் வணிக ரீதியாக ஒரு ஸ்டூடியோவைத் திறந்தார். நீலகிரியைப் புகைப்படம் எடுத்து 1867ல் பாரிஸில் ஒரு புகைப்படக் காட்சியை நடத்துகிறார். சென்னை, பாம்பே மாகாண அரசுக்காக இந்தியா முழுதும் 1867-1868ல் தொல்லியல் மற்றும் பழங்காலச் சின்னங்களைப் படமெடுக்கிறார். பின்பு திருநெல்வேலி வரை வந்து தமிழகத்தில் மிக முக்கியமான கோவில்களையும், தொல்லியல் எச்சங்களையும் படமெடுத்துள்ளார்.

Linnaeus-Tripe
லின்னேயஸ் ட்ரைப் | மூலம் இணையம்

கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் தமிழகத்திற்கு வந்த வழி………..

பிளிமத் டாக்கில்1822ல் பிறந்த கேப்டன் லின்னேயஸ் ட்ரைப், 1838ல் கிழக்கிந்தியக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார். பின்பு 1840ல் லெப்டினெண்ட்டாகப் பதவி உயர்வு பெறுகிறார். 1850ல் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் இங்கிலாந்திற்குத் திரும்புகிறார்.

இந்தக் கால இடைவெளியில் நான்கு வருடங்கள் புகைப்படக் கலையிலும் , அதன் தொழில்நுட்பத்திலும் கடுமையான பரிசோதனையிலும், பயிற்சியிலும் ஈடுபடுகிறார். இங்கிலாந்தையும் புகைப்படம் எடுக்கிறார். 1843ம் ஆண்டில் லண்டன் புகைப்படச் சங்கம் உருவாக்கத்தில் பங்கு பெற்று அதன் தோற்ற உறுப்பினராகவும் இருந்தார். பின்பு கேப்டனாகப் பதவி உயர்வு பெற்று, 1854 ஜூனில் பெங்களூருக்கு வருகிறார். டிசம்பரில் டாக்டர் ஆண்ரூ நீல் என்னும் மற்றொரு புகைப்படக் கலைஞரோடு சேர்ந்து தென்னிந்தியாவின் முதல் புகைப்படங்களை எடுக்கிறார். பேளூர், ஹலபீடு ஹொய்சளா சிற்பங்களை கோவில்களை படமெடுத்து காட்சிக்குத் தயார் படுத்துகிறார்.

இந்தியாவிலேயே புகைப்பட ஸ்டுடியோவும், தொழிற்கலைப் பள்ளியும் முதலில் சென்னையில் தான் தொடங்கப்பட்டது. மதராஸ் ராஜதானியின் தலைநகராக இருந்த சென்னையில் மே மாதம் 1850ல் தொழிற்கலைப் பள்ளி அலெக்ஸாண்டர் ஹண்டரினால் தொடங்கப்பட்டது. அப்போது புகைப்படக்கலை முக்கியப் பாடமாகவும் இருந்தது. ஹண்டர் மற்றும் எலியட் ஆகியோர் மாணவர்களுடன் சென்று, தமிழகத்தின் முக்கிய ஊர்கள் அனைத்தையும் புகைப்படங்களாக எடுத்தனர்.



‘‘மெட்ராஸ் புகைப்படச் சங்கம் (PSM, Photographic Society of Madras)”1857ல் முனைவர் அலெக்ஸாண்டர் ஹண்டர் என்னும் ஆங்கிலேயரால் துவக்கப்பட்டது. (முதலில் மெட்ராஸ் அமெச்சூர் போட்டோகிராபர்கள் சொசைட்டி MAPS என்று அழைக்கப்பட்டது). வால்டர் எலியட் இதன் முதன் தலைவராக இருந்து சென்னையில் புகைப்படச் சங்கத்தை வளர்த்தெடுத்தார். இது உலகின் மிகப் பழமையான புகைப்படச் சங்கமாகும்.

லின்னேயஸ் ட்ரைப்பும் இங்கு புகைப்படக் கலையை பயிற்றுவித்துள்ளார். பிறகு மெட்ராஸ் மக்களைப் புகைப்படம் எடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் அவரது கவனக் குவிப்பு கோவில் கட்டடக் கலை, தொல்லியல், சார்ந்ததாகவே இருந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், செயல் படுத்தக் கூடிய, பொறியியல் தொழில்நுட்பங்கள் சார்ந்ததாகவே அவரது புகைப்படங்கள் இருக்கின்றன. பிறகு மேலும் 50 புகைப்படங்களை 1859ல் ‘மெட்ராஸ் புகைப்படச் சங்கத்தில்’ வைக்கிறார். பெப்ரவரியில் “தென்னிந்தியக் கலைகள், கைவினைப்பொருட்கள், மற்றும் கச்சாப் பொருட்களின் மெட்ராஸ் கண்காட்சியில் தன்னுடைய 68 புகைப்படங்களை (அனைத்தும் கோவில்) காட்சிப் படுத்துகிறார். ஆனால் அப்புகைப்படங்கள் பரிசேதும் பெறவில்லை. அக்காலக் கேமராவில் வானம் வெள்ளையாக வருவதால் அதனை வண்ணம் கொண்டு வரைந்திருந்தார் லின்னேயஸ். அதனை நடுவர்கள் ஏற்கவில்லை.

இறுதிநாளில் அதன் நடுவர்கள் அப்புகைப்படங்களை “சிறந்த புகைப்படக் கண்ணோட்டங்கள்” என்று அறிவித்தனர். 1856களில் பர்மாவைப் படம் பிடிக்கிறார். பின்னர் 1857 ஏப்ரலில், மெட்ராஸ் அரசுப் புகைப்படக் கலைஞராக பதவி உயர்வு பெறுகிறார். பல்லாவரத்தில் ராணுவ அதிகாரியாகவும் பணியைத் தொடர்கிறார்.

மார்ச் 1862ல் பேராசிரியர் ஆர்ச்சர் மீண்டும் லின்னேயஸ் ட்ரைப் எடுத்த புதுக்கோட்டை ,மதுரை, ராயக்கோட்டை, சிறீரெங்கம் மற்றும் “எலியட் பளிங்குச் சிலைகள்” என்று அழைக்கப்பட்ட அமராவதி பளிங்குச் சிலைகளின் புகைப்படத் தொகுப்புகளை மெட்ராஸ் புகைப்படச் சங்கத்தில் காட்சிப்படுத்துகிறார். 480 நெகட்டிவ்களை உருவாக்கி 70 பிரதிகள் பிரிண்ட் செய்கிறார். இந்தப் புகைப்படங்கள் யாவும் ப்ரிட்டிஷ் நூலகத்தில் உள்ளன. மீதி சிலைகள் இன்னும் தனிப்பிரிவாக சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன.

1857ல் ஏற்பட்ட சிப்பாய்க்கலகத்திற்குப் பிறகு கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரம் இங்கிலாந்து ஆட்சிக்கு மாறுகிறது. அதிகப் பொருட்செலவு என்னும் காரணத்தைச் சொல்லி புதிய புகைப்படப் பணிகள் எதுவும் வேண்டாம் என் லின்னேயஸுக்கு கட்டளையிடப்படுகிறது. வருடக் கடைசியில் புகைப்படப் பணியை விட்டு விடவும், புகைப்படக் கருவிகளை விற்கவும் ஆணை பிறப்பிக்கப் படுகிறது. அவரது உதவியாளர் சி.அய்யாசாமி என்பவர் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்கிறார். அவரும் புகைப்படக் கலையில் வல்லுநர் என்று தெரிகிறது. இத்தோடு “அரசு புகைப்படக்கலை” என்ற ஒன்று அழிந்தது எனலாம்.

1863ல் லின்னேயஸ் மீண்டும் ராணுவத்திற்குத் திரும்புகிறார். 1873 ஆகஸ்டில் கர்னலாகப் பதவி உயர்வும் பெறுகிறார். 1869 ல் பர்மாவில் பணியாற்றும் போது மீண்டும் புகைப்படங்களை எடுக்கிறார். கண்ணாடி நெகட்டிவ்களில் எடுக்கப்பட்ட பர்மாவைப் பற்றிய இரண்டு புகைப்படத் தொகுப்புகள் இன்னும் கலைப்படைப்புகளாக மிளிர்கின்றன. 1873ல் இந்தியாவிலிருந்து இன்கிலாந்திற்குச் செல்கிறார், 1874ல் பணி ஓய்வு பெற்று 1902ல் தன் சொந்த ஊரில் மரணமடைகிறார்…………

Photographs of Captain-Linnaeus Tripe
© லின்னேயஸ் ட்ரைப் | மூலம் இணையம்

கேப்டன் லின்னேயஸ் ட்ரைப்பின் புகைப்படக் கலை

அறியப்படாத கலை ஆளுமையாக இருந்த லின்னேயஸ் குறித்து இவ்வளவு செய்திகள் நமக்கு கிடைக்கக் காரணம் 2015ல் நியூயார்க்கிலும், வாஷிங்டனிலும், லண்டனிலும் முதன் முறையாக அவருடைய புகைப்படக் காட்சியை ஒருங்கிணைத்திருந்தனர். இங்கிலாந்து, பர்மா, இந்தியா ஆகிய 3 நாடுகளிலும் 1854 முதல் 1860 வரை எடுக்கப்பட்ட 60 புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு பெறும் வரவேற்பைப் பெற்றன.

கேப்டன் லின்னேயஸ் ட்ரைப் குறித்து விரிவாக ஆராய்ந்தும், அவரின் புகைப்படக் கலையின் நுட்பங்களும் அலசி ஆராயப்பட்டன. பெருங்கலைஞனாக இப்பொழுதே முழுமையாக அவர் அறியப்பட்டிருக்கிறார்.

அடிப்படையில் ஒரு ராணுவ அதிகாரியின் பார்வை, சர்வேயராக இருந்து இவ்வுலகத்தைப் பார்க்கும் கண்கள், எல்லாவற்றையும் கலைப்படைப்பாக பார்க்கும் மனம், தொல்லியல் சின்னங்களின் மேல் அவருக்கு உள்ள அக்கறை, கோவில்களின் கட்டடக் கலையை உணர்ந்த பொறியியல் நோக்கு, விரைவில் அழியக்கூடிய தொல்லியல் சின்னங்களை ஆவணப்படுத்தும் முதன்மையான பணி, நிலக்காட்சிகளின் ஆழம், பண்பாட்டு எச்சங்களின் வரலாறு, மத முக்கியமற்ற கட்டடங்களையும் ஆவணப்படுத்தியது, அவருடைய காலத்தின் யதார்த்தத்தை பதிவு செய்த விதம், இவை யாவும் நம்மை முற்றிலும் ஆச்சரியப்படுத்துகிறது. இவையெல்லாவற்றையும் விட இதனை ஓர் அரசுப் பணியாகச் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்தியாவில் அவர் பணிபுரிந்த காலத்தில் வில்லியம் ஹென்ரி பாக்ஸ் டால்போட் உருவாக்கிய “கேலோடைப்” கேமராவைப் பயன்படுத்தியே அவர் அனைத்துப் புகைப்படங்களையும் எடுத்தார். தாளில் மெழுகைத் தடவி செய்யப்படும் நெகட்டிவ்களை அவர் பயன் படுத்தினார். தென்னிந்தியாவின் தட்பவெப்பச் சூழ்நிலையால் பல பிரச்னைகளைச் சந்தித்தார். பின்பு மெதுவாக கண்ணாடி நெகட்டிவ்களில் படம் எடுத்தார்.

உடையாமல் அதனைப் பாதுகாப்பது அதை விட கடினம். ஆனால் இந்த கண்ணாடி நெகட்டிவ் புகைப்படக் கலை ஆவணப்படுத்தும் கலைக்கும், நிலக்காட்சிகளுக்கும் மிகவும் ஏற்றது. பெங்களூரிலிருந்து மதுரைக்கு அவர் பயணம் செய்த போது, அவரின் புகைப்படக் கருவிகள் மட்டும் 4 மாட்டு வண்டிகளில் வந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் அவர் 290 பெரிய அளவு நெகட்டிவ்களை உருவாக்கியதுடன் 17,745 பிரிண்டுகளையும் உருவாக்கியுள்ளார். தஞ்சாவூரில் பெருவுடையார் கோவிலின் கல்வெட்டுக்களை 21 பகுதிகளாகப் பிரித்து, பனராமிக் புகைப்படங்களாக இணைத்து 21 அடிக்கும் நீளமான புகைப்படங்களை பிரமிப்பூட்டும் வகையில் உருவாக்கியுள்ளார். புகைப்படக் கலையில் இது ஒரு அபார சாதனையாகும். நவீனப் புகைப்படக் கலையின் தொடக்கமும் இதுதான். அதன் பிரதி நம்மிடையே இல்லை, கனடாவில் எங்கோ இருப்பதாக செய்திகள் வருகின்றன.

ஓவியங்கள் கற்பனையின் சிறகுகளாகப் பார்க்கப்பட்ட போது, வாழ்வின் உண்மையை உணர்த்துவதாக, யதார்த்த நடத்தையாக புகைப்படக் கலை பார்க்கப்பட்டது. இதனையே கிழக்கிந்தியக் கம்பெனி முக்கியமான ஒன்றாகக் கருதியது. 12 x 14 மற்றும் 11 x 14 என்ற அளவிலேயே அனைத்துப் புகைப்படங்களையும் பதிவு செய்துள்ளார்.

அதே வேளை கல்கத்தா போன்ற இடங்களிலிருந்த புகைப்படக் கலைஞர்கள் கல்வெட்டுக்கள், தொல்லியல் சின்னங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தி இருந்தனர். ஆனால் லின்னேயஸ் தன்னுடைய புகைப்படத்தில் வெறும் ஆவணத்தைத் தாண்டி ,அது தனித்த கலைப் படைப்பாகவும் மாற்றியிருந்தார். அதே வேளையில் வெளிநாட்டவரின் கண்கள் இந்தியாவைப் பார்க்கும் விதமாகவும் இல்லை அது. பாம்பு பிடிப்பவர்கள். மந்திரவாதிகள், சாமியார்கள் போன்று விநோத மனிதர்களைப் பார்ப்பது போலில்லாமல் மக்களை இயல்பாகப் பார்த்திருந்தார். இதுவே மிக முக்கியமான படைப்பு நோக்கமாகும். பின்னர் இவருடைய பாணி புகைப்படங்களே இந்தியத் தொல்லியல் கழகத்தின் புகைப்படப் பாணியாக மாறியது.



அவரின் புகைப்படங்களில் அய்ரோப்பிய ஓவிய மரபின் தாக்கம், நிலக்காட்சிகளை ஓவியங்களாக மாற்றும் தன்மை, அளவுகளின் முக்கியத்துவம், இயற்கையை, குறிப்பாக மரங்களின் மேல் இருந்த பற்று, கட்டடக் கலை புகைப்படக் கலையில் மனிதர்கள் இல்லாத படிமம், இயற்கை ஓளியின் மகத்துவம், கோவிலுனுள் நுழையும் மெல்லிய ஒளி, சிற்பங்களுக்கான முக்கியத்துவம், அருங்காட்சியகப் பொருட்களை வடிவமைத்து ஒருங்கிணைத்து புகைப்படமாக்கிய திறமை இவை யாவும் நம்மை பிரமிப்பூட்டுகிறது.

ஆரம்ப கால புகைப்படக் கலையில் படம் பிடிக்கும் பொருட்கள் அசையாமல் இருக்க வேண்டும், கட்டடங்கள் எளிது. மனிதர்கள் அசையாமல் சில நிமிடங்கள் நிற்க வேண்டும். அசையாமல் நிற்பதில் மனிதனின் குணாதிசயங்கள் வெளிப்படுகிறது. வர்க்கம், சாதி, மத பேதங்கள் தோன்றி மறைகிறது…இவை யாவுமே துல்லியமாக்ப் பதிவாகியுள்ளன.2015ல் வைக்கப் பட்ட புகைப்படக் காட்சி தவிர அவரின் அனைத்து புகைப்படங்களும் வெளிவர வேண்டும். நமது எழூம்பூர் கவின்கலைக் கல்லூரியில் அவர் எடுத்த புகைப்படங்களும், கண்ணாடி நெகட்டிவ்களும் இன்னும் கல்லூரி அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை காட்சிப்படுத்தப் பட வேண்டும். நூலாக வர வேண்டும், வரலாற்றுப் பெட்டகங்களான அவை நம்மை நாமே அறிந்து கொள்ள உதவும்.

லின்னேயஸ் ட்ரைப்பயும் தான்.

RR Srinivasan

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.



Published on August 27, 2017

Share

Home » Portfolio » கட்டுரைகள் » படிமங்கள் » தென்னிந்தியாவைப் படம் பிடித்த முதல் புகைப்படக் கலைஞர்

Related Articles