போட்டோ மெயில்
தமிழ் பக்கத்தில்
சமகால புகைப்படக்கலை
அதன் வரலாறு, அழகியல்
நுட்பங்கள், விமர்சனம், மற்றும்
மொழிமாற்றப்பட்ட
கட்டுரைகள் பிரசுரிக்கப்படும்

Blind School, Palayamkottal, RR Srinivasan
© லின்னேயஸ் ட்ரைப் | மூலம் இணையம்

வாசனையின் மெலிதான ஒலி, புகைப்படங்களாலான கட்டுரை… 

புகைப்படங்களில் எதைத் தேடுகிறீர்கள்? இருளையா?

அல்லது ஒளியையா?

ஒளியின் நிழலில் இருள் உள்ளது. அழகான இயற்கைச் சித்திரங்கள். சூரியோதயம், அஸ்தமனம், பூக்கள், விலங்குகள் இவையாவும் அற்புதங்கள். அனால் இவையாவும் சிலரின் கேமராக்களில் மட்டும் அற்புதமான படங்களாய் வருவதன் மாயமென்ன! பதில் எளிமையனது. கேமராக் கலைஞர் அற்புதமானவர் என்பதுதான். அழகுணர்ச்சி, வண்ணங்களின் ஒருங்கிணைப்பு, கோணங்களின் சிறப்புத் தன்மை இவை எல்லாவற்றையும் தாண்டி புகைப்படக்கலையின் மகத்துவம் வேறெங்கோ ஒளிந்திருக்கிறது.

குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை டவுசர் பையில் வைத்தபடி தூங்கி வழிகிறார்கள். இரவுகளில் எலிகள் உணவுகளை, பையின் ஒரு பகுதியையும் துளையிட்டுச் செல்கிறது. அப்பையின் துளையின் வழியே இவ்வுலகத்தை பாருங்கள். இவ்வுலகம் எவ்வளவு பிரமிப்பானதென்று. கேமராவின் துளையை விட……….

புகைப்படம் என்பது உறவுகள் அன்றி வேறொன்றுமில்லை. முதலில் கேமராவுக்கு உங்களுக்கும் மானசீகமான உறவு வேண்டும். உங்கள் உடம்பின் ஒரு பகுதியாக அது இன்றும் மாறவில்லையேனில் நீங்கள் புகைப்படக்கலையில் அரிச்சுவடிபாடத்தில் இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களின் தசைகளில், நரம்புகளில் கேமராவினுள் ஓடும்போது புகைப்படக்கலை சாத்தியமாகிறது. உறவுகளை படம்பிடிப்பது என்பது என்ன? வேறொன்றுமில்லை, உங்கள் கேமராவை தரையில் வைத்துவிட்டு நீங்கள் படம்பிடிக்க விரும்புவரை உணர்வதுதான். அவரும் உங்களை உணரும் வரை. உத்தேசங்களற்று நீங்கள் ஒருவரில் ஒருவர் கரைந்து விடும்போது. உங்கள் கேமரா இருவரையும் படம் பிடிக்கிறது. அதுவே ஒரு நல்ல புகைப்படம்…

டசடவென்று முட்கள் பேருந்தின் ஜன்னல்களில் அடிப்பது போல ஒவ்வொருமுறை அந்தப் பள்ளியைக் கடக்கும்போதும் என் மனதில் என்னவென்று இனம்புரிந்த தனித்த வேதனை பிராண்டிக் கீறும்.

எனினும் தொடர்ந்து என் மனதைப் பின்னோக்கி உள்ளிழுத்துக் கொண்டேனே தவிர ஒருபோதும் பள்ளிக்குள் செல்லவேண்டும் என கால்கள் நினைத்ததில்லை. முற்றிலும் அந்நியமான உலகம் என்ற உணர்வினை விட, அகவயமான ஆழ்ந்த உறவிருப்பதால்

அவ்வுலகத்திற்குள் தொடர்பு ஏற்படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை எனவும் பிற்பாடு உணர்ந்து கொள்ள முடிந்தது.

தரிசனமனை என்னும் பாளையங்கோட்டை கண்தெரியாதோர் பள்ளி 100 ஆண்டு கால வரலாறு கொண்டது. அதைப் பற்றிய மனப்பதிவுகளையும், புகைப்படப்பதிவுகளையும் செய்வதற்கான உந்துதல் சம்பவத்தையும் குறிப்பிட விரும்புகிறேன். கல்லூரி முடிந்து பாளை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது மழை தன் தோகையை விரித்து மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. என்னைப் போலவே ஆடுகளுக்கும் அப்போது மழையில் நனைய விருப்பமில்லை. எனதருகில் கண்தெரியாத மாணவர்கள் ஐந்தாறுபேர் கைகளைப் பின்னிப் பிணைத்தபடி ஒரே உடலாய் நின்றிருந்தனர். பள்ளியின் விடுமுறை துவங்குகிறது. நீண்ட பிரிவினை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே உடல்கள் பிரியமறுத்து நின்றிருந்தனர். நீண்டதொரு தனிமை தோய்ந்த விவாதம். ஆறுதலின் இறக்கைகள் அவர்களைச் சுற்றிப் பறந்து கொண்டிருந்ததெனினும் தனிமையின் அடர்த்தி ஈடு சொல்ல முடியாததாய் இருந்தது.



நானும் என் மனக் கரங்களை நீட்டி அவர்களோடு கோர்த்துக் கொண்டேன். விவாதங்களும், வார்த்தைகளும் தாங்க முடியாத அன்பினைக் கொண்டு என் நிலையோடு உராய்ந்து பெரும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு வரியிலும் மரணத்தின் துர்ப்பாதங்கள் இருதயத்தினை மிதித்துத் தள்ளியது. திரும்ப எல்லோரும் சந்திக்கும் வரை வேதனைகளை சேமித்து வைப்பது தவிர வேறு வழியில்லை. நீண்ட நேரங்கள் சாம்பலாகிக் காற்றில் உதிர்ந்து விட்டன. இடையில் காலத்தடுப்பில் இடறி விழுந்த சிறுவன் தனக்கான பேருந்து வந்து விட்டதெனக் கூறியவுடன் அனைவரும் கண்ணீரைத் துடைத்துவிட்டனர் தங்களுக்குள். என் கண்களில் வழிந்த கண்ணீரை அவர்களைப் போலவே நானும் அப்போது பார்க்கவில்லை. அன்றிரவு வீட்டிற்குப் போகவில்லை. கண் தெரியாதோரைப் பற்றிய சமூக அக்கறை, பரிதாபம், அவர்களுக்குத் துணிமணிகள் எடுத்துக் கொடுத்து நிதியுதவி செய்யவேண்டிய மனோநிலையும் எனக்கில்லை.

அவர்களைப்போல பழுதடைந்த பகுதி எனக்குள் எது என்று எனக்குத் தெரியவில்லை. எனினும் எனக்கிருந்த தனிமையின், வேதனையின் ஊற்றுக்கள் ஒன்றாயிருப்பதும் உறவுகளுக்கான தேவைகளும் ஒரே மாதிரியாக இருப்பதையும் உணர முடிந்தது. பிறகு நான் என்னை அறியும் முயற்சியிலேயே அவர்களைப் பற்றிய உலகத்தைக் கவனிக்க ஆரம்பித்தேன். பள்ளிக்குச் செல்வதை நீண்டகாலம் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். வழக்கம்போல் தனியே செல்வதற்குப் பயமாய் இருந்தது. காலம், வெளிக்குப் பிறகு தொட்டுப்பேசுவது எனக்குப் பெரிய பாரமாக இருக்கிறது. திடீரென அவர்கள் என்னைத் தொட்டுப் பேசினால் என்ன நிலைக்கு ஆளாவேன் என்று நினைக்கவே பயங்கரமாயிருந்தது. பிறகு புகைப்படங்கள் எடுக்க வேண்டி வந்திருக்கிறேன் என்ற காரணத்தை உருவாக்கினேன். ஒருவழியாக கேமராவுடன் பள்ளியை அடைவதற்குள் வருடங்கள் ஓடிவிட்டன.

வாசனையின் மெலிதான ஒலி © ஆர் ஆர் சீனிவாசன் 1997

பள்ளி முதல்வர் எபிநேசர் அவர்களை நன்றாகப் பார்க்கத் தெரிந்த குருடர் என்று சொல்லலாம். இவரோடு நிகழ்ந்த உரையாடல்கள் அவர்களின் கல்வி பற்றிய பெரிய உலகத்தின் கதவுகளை திறந்துவிட்டது. மேம்போக்கான நமது புரிதல்கள் அனைத்தும் வெகுசனப் பழக்கத்தின் சீழ்பிடித்து நம்மைக் குழப்பத்தில் வைத்திருக்கிறது. அவர்களுடைய புத்திசாலித்தனங்கள் என்று வர்ணிக்கப்படுபவை அனைத்துமே தோற்றத்தில் மட்டுமே பெரிதாக்கப்பட்டு நம்மை வேறு உலகத்தில் வைத்திருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டேன். புகைப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன். முற்றிலும் விசித்திர அனுபவம். மிக நிதானமாக எவ்வித சப்தமுமின்றி புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். மிகக்கவனமாக அவர்களை நெருங்கினாலும் யார் யார் என்று சத்தமிட ஆரம்பித்து விடுவார்கள். பிறகுதான் தெரிந்தது இவர்கள் வாசனைகளின் உலகத்தில் சஞ்சரித்து வருகிறார்கள் என்று. பிறகு நான் காற்றடிக்கும் எதிர்த்திசையில் நின்று புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். பிறகு என்னை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. வகுப்பறையிலிருந்து, கழிப்பறை வரை அனைத்து நிகழ்வுகளையும் படம் பிடிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் புகைப்படக்கலை பற்றியும் எனது பார்வைகள் மாற்றம் பெற்றன. நான் எடுக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் அவர்களால் பார்க்க இயலாததன் விசித்திரமும் அதைத் தெரிந்துகொண்ட பிறகு வேலை செய்வதற்கான மனோநிலையும் தெளிவற்ற நிலையில் இருந்தது. நிறைய பேருக்கு புகைப்படக் கருவியைத் தொட்டுப்பார்க்கவும் என்னைப் புகைப்படம் எடுக்கவும் விருப்பம் இருந்தது. தினசரி காலை 5 மணி முதல் இரவு வரை புகைப்படங்களை எடுத்துத் தள்ளினேன். வெகுவேகமாக எனது வண்ணங்கள் அனைத்தும் உதிர்ந்து போய்க்கொண்டிருப்பதையும் உணர்ந்தேன்.

இருளின் வாசனை என்னை முழுதும் அடைத்துவிட்டது. பள்ளி முழுவதற்கும் நான் செய்யும் வேலை பற்றித் தெரிந்துவிட்டது. அவர்களுக்கிடையில் ஒரு பேய் மாதிரி உலாவிக்கொண்டிருந்தேன் என்று சொல்லலாம். அவர்கள் பயிலும் பிரெய்லி கல்வி முறையில் பைபிளை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருப்பேன். தடவிக் கல்வி பயிலும் பிரெய்லி முறையைக் கண்டுபிடித்த பிரெய்லியும் ஒரு குருடர். கண் தெரியாதோர் பள்ளியில் நான்கு நாட்கள் இருந்த எனக்கு இச்செய்தி ஆச்சரியமாயில்லை. யாரும் எதிலும், குறிப்பாகச் சுவரில் மோதுவதை அவர்கள் விரும்பவில்லை. எங்காவது மோதி விட்டார்களெனில் மனதளவில் உடைந்து போய் விடுகிறார்கள். நகரத்தின் எந்த நெருக்கடிகளிலும் அவர்கள் எதிலும் மோதாமல் சென்று கொண்டிருக்கிறார்கள். கண் தெரியாதோர் எந்த பேருந்து விபத்திலும் அடிபட்டு இறந்ததில்லை என்று பள்ளி முதல்வர் சொல்வதை நீங்கள் கேட்டு ஆச்சரியப்பட்டுத்தான் ஆகவேண்டும்.

நிறைய மாணவர்கள் நண்பர்களாயினர். அவர்கள் பேய், ஆவிகளை முழுவதும் நம்பினர். நம்பினார்கள் என்று சொல்வதைவிட அதனோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றே சொல்லலாம். தங்களைச் சுற்றிக் கடவுளும், பேய்களும் கைகோர்த்திருப்பதை என்னை நம்ப வைத்தார்கள். அவர்கள் காணும் கனவுகளைப் பற்றியும், கனவுகளின் வழி தாங்கள் அடைந்த மன லயங்களின் அழகு பற்றியும் கடவுளோடு நடத்தும் மானசீகமான உரையாடல்கள் எப்படி தங்களை வழிநடத்துகின்றன என்பதையும் விவரிக்கின்றனர். கனவுகளின் தர்க்கம் வழியே இத்தொடர்ச்சியைப் பின்பற்றிச் செல்ல முடியும்.



இசைக்குப் பார்வை இருக்கிறது. எனவே இவர்கள் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். வாசனைகளின் ஒலியைக் கேட்பதின் மூலமும் தொடர்ந்து பயணிக்கின்றனர் என்றும் சொல்லலாம். காதல், பாலுறவு, அனைத்துமே ஒரேகோட்டில் இங்கு இணைந்து விடுகின்றது.

அன்பிற்குள்ள வரம்பு இங்கு மீறப்பட்டு வெகு காலமாகிவிட்டது. நேரடியான கேள்விகளும் பதில்களும், ஏமாற்றங்களும், அவமானங்களும் தங்களுக்குள்ளாகவே கடிதங்களுக்குள் மடிக்கப்பட்டு ஒட்டப்படுகின்றன. கடிதங்கள் அனைத்துமே ரத்தமும் சதையுமான சொற்களால் நிரம்பியவை.

விளையாட்டு, கல்வி, நீதி, ஒழுக்கம், அறநெறி அனைத்துமே அதனதன் உலகத்திற்கேற்ப தர்க்கத்துடன் இயங்குகிறது. கல்வி இங்கு உறவுகளின் வழி மட்டுமே சாத்தியம். கற்றுத்தரப்படுவதைவிட கற்றுத்தருபவரே இங்கு கற்றுத்தரப்படும் கல்வியாக வேண்டியுள்ளது.

இரக்கம் சார்ந்த உலகப் பார்வையினுடே மட்டுமே அறிவுத்திறன் சாத்தியம். இவையனைத்தும் இவர்களுக்கு இங்கு வாசனைகளின் வழி வந்து சேர்கிறது. மனிதனின் கைரேகையைப் போன்று ஒவ்வொரு மனிதனின் தனித்த வாசனையை இவர்களால் கேட்க முடிகிறது. குறிப்பிட்ட வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு யாருமற்ற இடங்களில் தனித்து குறிப்பிட்ட இருவர் தொடர்ந்து சந்தித்துக் கொள்கின்றனர். காதலின் வாசனை இவர்களைச் சுற்றி நிரம்பியிருக்கிறது யாரும் கேட்க முடியாதபடி.

வாசனையின் மெலிதான ஒலி © ஆர் ஆர் சீனிவாசன் 1997

கடவுள், பேய், ஆசிரியர்கள், வானொலி இதற்குப்பிறகு வெளியுலகத் தொடர்பு சனிக்கிழமை தோறும் முடிவெட்டுபவரின் மூலம் இவர்களுக்குக் கிடைக்கிறது. அவர் வெளியுலகத் தொடர்புகளை தனது மாயாஜால வார்த்தைகளின் மூலம் விரிவானதொரு கனவுகளால் நெய்து ஒவ்வொருவரின் தலைக்குள்ளும் திணித்து விடுகிறார். அவருடைய கத்திரியும், கத்தியும் தன் தலைக்குத் திரும்பப்படும் வரை அவர்களுக்கு அதுபோதுமானதாயிருக்கிறது. விஷமங்கள் நிறைந்த பொய் உலகத்தைத் திணிப்பதைப் பார்த்து எனக்குக் கோபம் நிறைய இருக்கிறது. முடிவெட்டுபவர் இன்றும் அடிக்கடி நகர நெருக்கடிகளில் எதிர்ப்படுகிறார். தன்னுடைய புகைப்படத்தைக் கேட்டு என்னைத் தொந்தரவுபடுத்துகிறார். அவருக்கு ஒருபோதும் அவருடைய புகைப்படத்தை நான் தருவதாயில்லை.

காலை, பகல் அனைத்தையும் இவர்கள் ஒளியின் வாசனையோடுதான் கேட்கிறார்கள். வாசனையின் ஒரே எதிரி மழைதான் என்றும் சொல்கின்றனர். மழை பெய்யும் வேளையில் அனைத்தும் குழம்பி விடுகிறது. வாசனைகள் மழைக்கு மயங்கிவிடுகின்றன. மழை பெய்து ஓயும்வரை எதிலும் தொடர்புகொள்ள முடியாதநிலை. மழையின் விருப்பமும் அதுதானே. சுவரோரங்களில் அப்படியே சாய்ந்துக் கொண்டு நின்று விடுகின்றனர். மழை பற்றிய எனது கனவுகளும் அப்படியே மாறித் தோற்றம் கொள்ள ஆரம்பித்து விட்டது.

குறிப்பிட்ட விதமான பாவனைகள், உடலசைவுகள், சிரிப்பொலிகள், உரையாடல்கள், பாடல்கள், கதைகள் அனைத்தையும் பற்றி எனது கனவுகள் உடைந்து ஒருவித நிதர்சனத்தின் தன்மையை அடைந்துவிட்டேன். சந்தோஷங்களுக்குப் பின்னால் இருக்கும் அவமானங்கள் மறைவாகப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. மறைக்கப்பட்ட அவமானங்கள் அவர்களை மனப்பிறழ்வுக்கு இட்டுச்செல்கின்றது. தனித்துவிடப்பட்ட மறுகணமே பிறழ்வின் முடிச்சுகள் இறுக ஆரம்பிக்கின்றன. பிறகு அவர்களோடு யாரும் பேச முடியாது. அவர்கள் பேசுவதை மட்டுமே தங்களுக்குள்ளாகவே கேட்டுக் கொள்கின்றனர். இது நிகழவிடாமல் செய்வதே கல்வியின் முதன்மையான நோக்கமென்று கருதுகின்றேன். கல்வியின் இயல்பும் இதுவாகத் தானிருக்கவேண்டும். இதில் வெற்றி பெறும் ஆசிரியர் தன்னுடைய பணியைச் செவ்வனே செய்கிறார் என்று சொல்லலாம்.



பத்து நாட்களுக்கு மேல் வேலை செய்த பிறகு எனது உணர்வுகள் அனைத்தும் வடிந்து போய்விட்டது. புகைப்படங்கள் எடுப்பது என்ற நிலை மாறி நிறைய கேள்விகள் சுழித்தோடும் மனதை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய இயலாத நிலைக்குச் சென்று விட்டேன். தொடர்ந்து உக்ரமான வேகத்துடன் காலையும் இரவும் வேலை செய்வது அனைவருக்கும் நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது. இதற்கான அவசியம் என்னவென்று என்னை கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர். எனக்குக் காரணம் தெரியவேண்டிய மனோநிலையை இழந்துவிட்டேன். அடிப்படையாக இருந்த பயமும் தணியவில்லை. பயத்தின் தன்மையும் அதிகரித்துவிட்டது. எல்லாவற்றையும் இழந்தது போலாகிவிட்டது. ஒரு சேர எல்லா வாசனைகளும் என்னை அழுத்துவதாக உணர்ந்தேன். எனது வாசனையும் முற்றிலும் மாறிவிட்டது. இரவு முழுவதும் கனவுகளும், குழப்பங்களும், நிறைந்த வேதனை நிகழ்வுகள். அவர்களுடைய கைகளின் விரல் உதடுகள் எனது கைகள் முழுதும் பின்னிப் பிணைந்திருந்தது. உள்ளூர எனது வண்ணங்கள் அனைத்தும் வடிந்துவிட்ட சாம்பல் பொழுதுகள் பள்ளிக்குள் உலாவத் தொடங்கியது. சோகை பிடித்த என் நினைவுகளுடன் அன்றைய இரவு பள்ளியில் தங்கிவிட்டேன். பறவைகளின் ஒலி பயங்கரமாயிருந்தது. காற்றும்

ஒரு பெரும்பறவையாக இறக்கையை அடித்து அலைந்து கொண்டிருந்தது. தூக்கம் மனக்கலக்கத்தை உடுத்துவித்தது. அதிகாலைக்கான வருகை நிறைய வருடங்கள் கொண்டதாகிப் புலப்பட்டது. புதிய வெளிச்சம் மரக்கிளைகளிலும், எனதுடலிலும் நிரம்பிவிட்டது. பள்ளிக்கு வெளியே வண்ணங்கள் ஜொலிக்க எனக்காக அவள் காத்திருந்தாள். புகைப்படக் கருவியையும், எனது பைகளையும் கீழே வைத்து அவளைத் தழுவிக்கொண்டேன். பின் அவளினுள் அமிழ்ந்து போனேன்.

RR Srinivasan

ஆர். ஆர்.சீனிவாசன் தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவர். ‘காஞ்சனை திரைப்பட இயக்கம்’ ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில், தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது புகைப்படங்கள் கண்காட்சி செய்யப்பட்டுள்ளது. ப்ராஜெக்ட் 365ல் திரு சீனிவாசன் ‘திருவண்ணாமலையின் தொல்லியல் புகைப்பட வரைபடம்’ என்ற தலைப்பில் பங்களித்துள்ளார்.



Published on February 27, 2017

Share

Home » Portfolio » Authors » RR Srinivasan » வாசனையின் மெலிதான ஒலி

Related Articles