News 

இன்டிகோ போர்டுகள் © அகர்மா

காலத்தைச் சுமக்கும் பெயர் பலகைகள்

வியம் அய்யாவு, விஜய் ஆர்ட்ஸ், முள்ளை தவம், ஐயப்ப ஜோதி. இந்தப் பெயர்களை அவ்வளவு லேசாக என்னால் விலக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. கிழடு தட்டியிருக்கும் கடந்தகாலத்தின் அடையாளமாகத் திகழும் ஓவியக் கலைஞர்கள் இவர்கள். சிறுவயதில் நான் பார்த்த ஆதர்ச சித்திரக்காரர்கள்.

மதுரைப் புறநகரில் இருக்கும் எனது ஊர் அசல் கிராமமும் அல்லாது முழுநகரமும் அல்லாத கதியில் திருதிருவென முழிக்கும் நிலம். எனது ஊரிலும் அதனைச் சுற்றிய பகுதிகளிலும் உலவும் சைக்கிள்கள், தேநீர் கடைகள், உணவகங்கள், பலசரக்குக்கடைகள், மருந்தகங்கள், பள்ளிக்கூடங்கள், அச்சகங்கள், பாத்திரக்கடைகள், திரையரங்குகள், நாடக மேடைகள், கோவில்கள், பொதுச்சுவர்கள்
…என மனித வாழ்வியலோடு பிணைந்த இந்த எல்லாவற்றின் பெயர் பலகைகளிலும் மேற்கண்ட கலைஞர்களின் கைகளால் தீட்டப்பட்ட வண்ணயெழுத்துகளும், ஓவியங்களும், கோடுகளுமே மிளிரும்.

வெள்ளையும், கத்திரிப்பூ நிறமும் கொண்ட ‘இன்டிகோ’ போர்டுகள் சில கடைகளுக்கு மட்டும் பெயர் பலகைகளாக மாட்டப்பட்டிருக்கும். வரைந்து முடித்தவுடன் கீழ்வல மூலையில் அவர்களுக்குண்டான பிரத்யேக சுழிப்பு கையெழுத்துகளை இடும் தோரணை அசைவுகள் இப்பவும் பொலிவுடன் நினைவில் சேகரமாகியுள்ளன.

எழுத்துருக்களிலும், வண்ணக் குழைவுகளிலும், சித்திரங்களிலும் காலத்திற்கேற்ற புதிய புதிய பாணிகளை இவர்கள் முன்வைத்தாலும். டிஜிட்டல் ப்ளக்ஸ் போர்டுகள், எல்.இ.டி போர்டுகளின் சூரத்தனமான எழுச்சிக்கு முன்னால் இக்கலைஞர்களும், இவர்களின் தூரிகைகளும், வண்ணங்களும் சிறுத்துவிட்டன. இப்படியான கலைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர். வெவ்வேறு பிழைப்பு வேலைகளுக்கு அவர்கள் போனாலும் மண்ணெணெய்யும் பெயிண்ட்டும் கலந்தடிக்கும் அவர்களது மேனி வாசனையில் பெருவாழ்வு ஒன்றிருக்கிறது.

இன்றும் இவர்கள் வரைந்த பெயர் பலகைகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் கட்டிடங்கள் வீதிகளில், சந்துகளில் நிற்கின்றன. நிறமங்கிய அந்தப் பலகைகளை சுமக்கும் பழங்கட்டிடங்களும் சொல்வதற்கு நிரம்ப கதைகளை தன்னுள் வைத்திருக்கின்றன.

இப்படியான பலகைகளையும், இன்டிகோ போர்டுகளையும் புகைப்படங்கள் மூலமாக ஆவணப்படுத்தி வருகின்றனர் சென்னையில் இருக்கும் ‘INDIGO BOARDS OF MADRAS’ களப்பணியாளர்கள். முழுக்க கட்டிடவியல் துறை சார்ந்த மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த செயல்பயணம், அவர்களுடைய ‘அகர்மா’ என்ற அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கிறது. சூழலியல், கல்வி, மரபுடன் சேர்ந்த நவீன கட்டிட வடிவமைப்புகள், சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான திரையிடல்கள், வாசிப்புப் பழக்கம் என்று பள்ளி, கல்லூரிகளில் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.

‘இன்டிகோ போர்டுகள், கையில எழுதப்பட்ட போர்டுகள கடந்த நாலஞ்சு வருசமா புகைப்படங்கள் மூலமா முடிஞ்சளவு ஆவணப்படுத்திட்டு வாறோம். ஒரு ஊரோட, நகரத்தோட காலத்தை சொல்ற கூறுகளாதான் இந்தப் போர்டுகள நாங்கப் பாக்குறோம். மெட்ராஸ் பிரசிடென்சி காலத்துல இன்டிகோ போர்டுகள் ரொம்ப ஜாஸ்தியாக ஆரம்பிச்சது. டெக்னாலஜி அதிகமானலும். இன்னைக்கும் அந்தப் போர்டுகள மாத்தாம இருக்குற கடைகள், நிறுவனங்கள், கட்டிடங்கள சென்னையில அதிக இடங்கள்ல நம்ம தினமும் பார்க்க முடியும்.

அந்தப் போர்டுகளோட பழமையான கட்டிடங்களும் நிறைய கதைகளை வச்சிருக்கும். அந்தக் கதைகள் மூலமாவும் நகரத்தோட வளர்ச்சி மாற்றங்கள, வீழ்ச்சிகள, நிலவியல நம்மளால கணிக்க முடியும். இந்த மாதிரி போர்டுகள் ‘ஆன்ட்டிக் கலக்‌ஷனா’ நம்மள விட்டு வெளிய போயிட்டு இருக்கு. ஆனால் இந்தப் போர்டுகளும் நம்ம ஊரோட புராதனச் சின்னங்கள்தான். அடையாளங்கள்தான்’ என்கிறார் ‘INDIGO BOARDS OF MADRAS’ன் களப்பணியாளர்களில் ஒருவரான கட்டிடக்கலைஞர் கௌசிக்.

இப்போதைக்கு எண்ணிக்கையளவில் குறைந்த நண்பர்களின் கூட்டுழைப்பின் மூலமாக சென்னை நகரத்திலிருக்கும் போர்டுகளையும், அதன் கட்டிடங்களையும் புகைப்படங்களாக ஆவணப்படுத்திவரும் இவர்கள் தமிழ்நாடு முழுக்க இதை நடைமுறைபடுத்த வேண்டுமென ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்தப் போர்டுகள் அதன் கட்டிடங்கள் இருக்கும் ஊர்களையும், பகுதிகளையும் வைத்து இதற்கெனத் தனியாக ‘இணைய வரைபடம்’ (Google Map) ஒன்றை உருவாக்கும் திட்டத்தினையும் வைத்திருக்கின்றனர்.

பொதுமக்கள் ஒவ்வொரு ஊரிலும் தாங்கள் பார்க்கும் இவ்வகையான போர்டுகளையும், அதன் கட்டிடங்களையும், முகவரிகளையும் சிறுகுறிப்புடன் இவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அனைத்தையும் ஆவணப்படுத்தி பதிவேற்றும் முயற்சியிலும் இருக்கின்றனர். அந்த வரைபடத்தினை அனைவரும் எளிதாக கையாளும்படியாக வடிவமைக்கவுள்ளனர். தவிர, அந்தந்த ஊர்களில் இருக்கும் இப்படியான போர்டுகளின் புகைப்படங்களை அந்த வீதிகளிலேயே அதன் காலக்கதைக் குறிப்புகளுடன் அந்நில மக்களுக்கு காட்சிப்படுத்தவும் முனைப்பாய் உள்ளனர்.

ஒளியினால் உருவாகும் புகைப்படப்பதிவுகள் எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் கல்வெட்டுகள் போன்றவை. சமகால நவீனத்தில் புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்துதல் என்பது எளிய வகை. ஒரு ஆவணமாக எந்த ஒரு புகைப்படமும் சிறந்ததே. புகைப்படப் பின்னணியில் உள்ள சிந்தைகள், அழகியல், மற்றும் சின்னச் சின்னக் கூறுகளால் அப்படம் கலையியலாக உருமாறுகிறது.
ஆர்வமுடையோரின் ஒத்துழைப்புகளால் INDIGO BOARDS OF MADRAS குழுவின் இந்த ஆவண முயற்சிகள் இன்னும் மெருகேறி முழுதாக நடைபோட வாய்ப்பிருக்கிறது.

INDIGO BOARDS OF MADRASக்கு புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அனுப்ப விரும்புவர்களுக்கு – akarmaafoundation@gmail.com

கட்டுரை – முத்துராசா குமார்